ஆமோஸ் 5:4-17

ஆமோஸ் 5:4-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள். பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும். கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதைப் பட்சிக்கும். நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள். அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளை பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர். ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள். நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைசுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை. உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள். ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம். நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார். ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரிபாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள். எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 5:4-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேல் குடும்பத்திற்கு யெகோவா சொல்வது இதுவே: என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள். பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலுக்குப் போகாதீர்கள், பெயெர்செபாவிற்குப் பயணப்படாதீர்கள். கில்கால் நிச்சயமாக நாடுகடத்தப்படும், பெத்தேலும் ஒன்றுமில்லாது போகும், இஸ்ரயேலின் யெகோவாவையே தேடுங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். இல்லையெனில் அவர் யோசேப்பின் குடும்பத்தின் வழியாக நெருப்புபோல் அள்ளிக்கொண்டுபோவார். அந்த நெருப்பு எல்லாவற்றையும் சுட்டெரிக்கும். அதை அணைக்க பெத்தேலில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். நீதியைக் கசப்பாக மாற்றுகிறவர்களே, நியாயத்தைத் தரையில் தள்ளுகிறவர்களே, அவரையே தேடி வாழுங்கள். அவரே அறுமீன், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர். இருளை அதிகாலை வெளிச்சமாக மாற்றுகிறவரும், பகலை இரவாக மாற்றுகிறவரும் அவரே; கடலின் தண்ணீரை அழைத்து, பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறவரும் அவரே, “யெகோவா” என்பது அவர் பெயர். அவர் கோட்டைகளை மின்னல் வேகத்தில் தாக்கி அழித்து, அரணான பட்டணங்களைப் பாழாக்குகிறார். இஸ்ரயேலின் நீங்கள் நீதிமன்றத்திற்கு குற்றவாளியைக் கொண்டுவருகிறவனை வெறுக்கிறீர்கள், உண்மை சொல்கிறவனை உதாசீனம் செய்கிறீர்கள். ஏழையை மிதித்து, உங்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி அவனைப் பலவந்தப்படுத்துகிறீர்கள். ஆகையால் கல்லினால் மாளிகைகளைக் கட்டியும், அதில் வாழமாட்டீர்கள், செழிப்பான திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினாலும் அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கமாட்டீர்கள். உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் எவ்வளவு கொடியதென்றும் நான் அறிவேன். நீங்கள் நீதிமான்களை ஒடுக்கி, அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகிறீர்கள். நீதிமன்றத்தில் ஏழைக்கு நீதிவழங்க மறுக்கிறீர்கள். ஆகையால் அப்படிப்பட்ட காலங்களில் விவேகமுள்ளவன் மவுனமாய் இருக்கவேண்டும். ஏனெனில் காலம் மிகக் கொடியதாய் இருக்கிறது. தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். சேனைகளின் இறைவனாகிய யெகோவா உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வதுபோலவே, அவர் உங்களோடிருப்பார். தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். நீதிமன்றங்களில் நீதியை நிலைநிறுத்துங்கள். ஒருவேளை சேனைகளின் இறைவனாகிய யெகோவா, யோசேப்பின் மீதியானவர்மேல் இரக்கம் காட்டுவார். ஆகையால் யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: “எல்லா வீதிகளிலும் புலம்பல் உண்டாயிருக்கும். பொது இடங்களிலெல்லாம் வேதனையின் அழுகுரல் உண்டாயிருக்கும். அழுவதற்காக விவசாயிகளும், புலம்புவதற்காக புலம்பல் வைப்பவர்களும் அழைப்பிக்கப்படுவார்கள். திராட்சைத் தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். ஏனெனில் நான் உங்களைத் தண்டித்துக்கொண்டு கடந்துபோவேன்” என்று யெகோவா சொல்கிறார்.

ஆமோஸ் 5:4-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள். பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலிலும் சேராதீர்கள், பெயெர்செபாவுக்கும் போகாதீர்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான இடமாகவும் போகும். யெகோவாவை தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அணைக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதை எரிக்கும். நியாயத்தைக் கசப்பாக மாற்றி, நீதியைத் தரையிலே விழச்செய்கிறவர்களே அவரைத் தேடுங்கள். அவர் நட்சத்திரங்களையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை அதிகாலையாக மாற்றி, பகலை இரவாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் பரப்பின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம். பாதுகாப்பான இடத்தின்மேல் அழிவு வரும்படியாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாக இலகுவடையச் செய்கிறவர். பட்டணத்தின் நுழைவுவாயிலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாகப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள். நீங்கள் தரித்திரனை மிதித்து, அவனுடைய கையிலே தானியத்தைச் சுமைசுமையாக வாங்குகிறபடியினால், நீங்கள் வேலைப்பாடுள்ள கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சைத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை. உங்களுடைய மீறுதல்கள் மிகுதியென்றும், உங்களுடைய பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, லஞ்சம் வாங்கி, பட்டணத்தின் நுழைவுவாயிலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள். ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாக இருக்கவேண்டும்; அந்தக்காலம் தீமையான காலம். நீங்கள் பிழைக்கும்படி தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய யெகோவா உங்களுடன் இருப்பார். நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, நுழைவுவாயிலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய யெகோவா யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார். ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத் தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ, ஐயோ, என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாடத்தெரிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள். எல்லாத் திராட்சைதோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

ஆமோஸ் 5:4-17 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் இதனை இஸ்ரவேல் நாட்டிடம் கூறுகிறார்: “என்னைத் தேடிவந்து, வாழுங்கள். ஆனால் பெத்தேலைப் பார்க்காதீர்கள். கில்காலுக்கும் போகாதீர்கள். எல்லையைக் கடந்து பெயர்செபாவிற்குப் போகாதீர்கள். கில்காலிலுள்ள ஜனங்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். பெத்தேல் அழிக்கப்படும். கர்த்தரிடம் போய் வாழுங்கள். நீங்கள் கர்த்தரிடம் போகாவிட்டால் பிறகு யோசேப்பின் வீட்டில் நெருப்பு பற்றும். அந்நெருப்பு யோசேப்பின் வீட்டை அழிக்கும். பெத்தேலில் அந்நெருப்பை எவராலும் நிறுத்தமுடியாது. நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் போக வேண்டும். தேவன் நட்சத்திரக் கூட்டங்களைப் படைத்தார். அவர் இருளைக் காலை ஒளியாக மாற்றுகிறார். அவர் பகல் ஒளியை இரவின் இருளாக மாற்றுகிறார். அவர் கடலிலுள்ள தண்ணீரை அழைத்து, அதனை பூமியில் ஊற்றுகிறார். அவரது நாமம் யேகோவா. அவர் ஒரு பலமான நகரைப் பாதுகாப்பாக வைத்து இன்னொரு பலமான நகரை அழிய விடுகிறார்.” நீங்கள் நன்மையை விஷமாக மாற்றுகிறீர்கள். நீங்கள் நீதியைக் கொல்லுகிறீர்கள், கொன்று தரையில் விழவிடுகிறீர்கள். தீர்க்கதரிசிகளே, பொது இடங்களுக்குச் சென்று ஜனங்கள் செய்கிற தீமைகளுக்கு எதிராகப் பேசுங்கள். அத்தீர்க்கதரிசிகள் நன்மையான எளிய உண்மைகளைப் போதிக்கிறார்கள். ஜனங்கள் அத்தீர்க்கதரிசிகளை வெறுக்கிறார்கள். நீங்கள் நியாயமற்ற வரிகளை எளிய ஜனங்களிடம் வசூலிக்கிறீர்கள். நீங்கள் கோதுமையைச் சுமைச் சுமையாக அவர்களிடமிருந்து எடுக்கிறீர்கள். நீங்கள் செதுக்கப்பட்ட கற்களால் அழகான வீடுகளைக் கட்டுகிறீர்கள். ஆனால் அவ்வீடுகளில் நீங்கள் வாழமாட்டீர்கள். நீங்கள் அழகான திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் அவற்றிலிருந்து மதுவைக் குடிக்கமாட்டீர்கள். ஏனென்றால் நான் உங்களது அநேகப் பாவங்களை அறிவேன். நீங்கள் சில தீயச் செயல்களைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் நேர்மையானவர்களைப் புண்படுத்துகிறீர்கள். நீங்கள் தீமை செய்யப் பணம் வாங்குகிறீர்கள். நீங்கள் ஏழைகளுக்கு வழக்கு மன்றங்களில் நீதி வழங்குவதில்லை. அப்போது ஞானமிக்க ஆசிரியர்கள் அமைதியாக இருப்பார்கள். ஏனென்றால் இது கெட்ட நேரம். நீங்கள் தேவன் உங்களோடு இருப்பதாகச் சொல்கிறீர்கள். எனவே நீங்கள் தீமையையல்ல, நன்மையைச் செய்யவேண்டும். அப்போது நீங்கள் வாழ்வீர்கள். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உண்மையில் உங்களோடு இருப்பார். தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள். வழக்கு மன்றங்களுக்கு நியாயத்தைக் கொண்டு வாருங்கள். பிறகு சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் யோசேப்பு குடும்பத்தில் மீதியிருப்பவர்களிடம் இரக்கமாயிருப்பார். என் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார். “ஜனங்கள் பொது இடங்களில், அழுதுகொண்டிருப்பார்கள். ஜனங்கள் தெருக்களில் அழுதுகொண்டிருப்பார்கள். ஜனங்கள் ஒப்பாரி வைப்பவர்களை வாடகைக்கு அமர்த்துவார்கள். ஜனங்கள் திராட்சைத் தோட்டங்களில் அழுதுகொண்டிருப்பார்கள். ஏனென்றால் நான் அவ்வழியே கடந்துபோய் உன்னைத் தண்டிப்பேன்” என்று கர்த்தர் கூறினார்.