எபேசியர் 3:14-19

எபேசியர் 3:14-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் அவருடைய ஞானத்தையும் திட்டத்தையும் நினைக்கும்போது, பிதாவுக்கு முன்பாக முழங்காற்படியிடுகிறேன். அவரிடமிருந்து பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும், அவருடைய முழுக் குடும்பமும் சிறப்பியல்பைப் பெறுகின்றன. நீங்கள் உங்கள் உள்ளத்தில் உறுதியுடையவர்களாய் இருப்பதற்கு, இறைவன் தமது மகிமையான நிறைவிலிருந்து, தமது ஆவியானவரினாலே வல்லமையினால் உங்களைப் பெலப்படுத்தவேண்டும் என்று நான் அவரிடம் மன்றாடுகிறேன். அதனால் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து உங்கள் இருதயங்களில் குடியிருப்பார். நீங்கள் அன்பிலே வேரூன்றியவர்களாகவும், அதில் அஸ்திபாரம் இடப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். இவ்விதம் நீங்கள் மற்றெல்லாப் பரிசுத்தவான்களோடுங்கூட, கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு விசாலமானதாயும், நீளமானதாயும், உயரமானதாயும், ஆழமானதாயும் இருக்கிறது என்பதை, விளங்கிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்களாக, உங்கள் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்ட கிறிஸ்துவின் அன்பை நீங்கள் அறியவேண்டும் என்றும், நீங்கள் இறைவனின் முழுநிறைவினால் முழுவதும் நிரப்பப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறேன்.

எபேசியர் 3:14-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதற்காக நான் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லாக்குடும்பத்திற்கும் பெயரிட்ட சிருஷ்டிகராகிய, நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, நீங்கள் அவருடைய ஆவியானவராலே உள்ளானமனிதனில் வல்லமையாகப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்களுடைய இருதயங்களில் குடியிருக்கவும், நீங்கள் அன்பிலே வேர் ஊன்றி, நிலைபெற்றவர்களாகி, எல்லாப் பரிசுத்தவான்களோடும் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் என்னவென்று உணர்ந்து; அறிவிற்கு எட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய எல்லாப் பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படி, உங்களுக்கு ஆசியருளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபேசியர் 3:14-19 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆகையால் நான் பிதாவாகிய தேவன் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறேன். அவரிடத்தில் இருந்து பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாக் குடும்பங்களும் தம் உண்மையான பெயரைப் பெறும் உங்கள் ஆவிக்குள் நீங்கள் வல்லமையுடைவர்களாக இருக்க விரும்புகிறேன். நான் பிதாவை அவரது உயர்ந்த மகிமையின் நிமித்தம் கேட்கிறேன். அவர் தமது ஆவியின் மூலமாக அந்த வல்லமையைத் தருவார். கிறிஸ்து உங்கள் இதயத்தில் விசுவாசத்தின் மூலம் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் வாழ்க்கை அன்பால் கட்டப்படவும், அன்பில் வல்லமையாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்களும் தேவனின் பரிசுத்தமான மக்களும் உயர்ந்த கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துக்கொள்ளும் சக்தியைப் பெறவேண்டும். அவரது அன்பு எவ்வளவு அகலமானது, எவ்வளவு நீளமானது, எவ்வளவு உயரமானது, எவ்வளவு ஆழமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.

எபேசியர் 3:14-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.