எஸ்தர் 6:1-2
எஸ்தர் 6:1-2 பரிசுத்த பைபிள் (TAERV)
அதே இரவில், ராஜாவால் தூங்க முடியவில்லை. எனவே, அவன் ஒரு வேலைக்காரனிடம் வரலாற்று புத்தகத்தைக் கொண்டுவந்து வாசிக்கும்படி கட்டளையிட்டான். ( ராஜாக்களது வரலாற்று புத்தகத்தில் ராஜாக்களின் ஆட்சியில் நடைபெற்றவற்றின் பட்டியல் இருந்தது.) வேலைக்காரன் ராஜாவிடம் அதை வாசித்தான். அவன் ராஜா அகாஸ்வேருவை கொல்வதற்கான தீய திட்டத்தையும் வாசித்தான். அது மொர்தெகாய் கண்டுபிடித்த பிக்தானா மற்றும் தேரேசின் திட்டமாகும். அந்த இரண்டு பேரும் ராஜாவின் வாசல் கதவை காக்கிற அதிகாரிகள். அவர்கள் ராஜாவைக் கொல்லவேண்டும் எனத் திட்டம் போட்டனர். ஆனால் மொர்தெகாய் அத்திட்டத்தைப்பற்றி அறிந்து அதனை யாரோ ஒருவரிடம் சொன்னான்.
எஸ்தர் 6:1-2 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அன்று இரவு அரசனால் நித்திரை செய்ய முடியவில்லை, எனவே அவன் தனது அரசாட்சியின் நிகழ்வுகளின் பதிவேடாகிய வரலாற்றுப் புத்தகத்தைக் கொண்டுவந்து தனக்கு வாசித்துக் காட்டும்படி கட்டளையிட்டான். அதில், அகாஸ்வேரு அரசனைக் கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருந்த வாசல் காவலர்களான, அரசனின் அதிகாரிகள் பிக்தானா, தேரேசு ஆகிய இருவரையும், மொர்தெகாய் காட்டிக் கொடுத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
எஸ்தர் 6:1-2 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்த இரவில் ராஜாவிற்கு தூக்கம் வராததினால், அவனுடைய ராஜ்ஜியத்தின் நிகழ்வுகள் எழுதியிருக்கிற பதிவு புத்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது. அப்பொழுது வாசற் காவலாளர்களில் ராஜாவின் இரண்டு அதிகாரிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு தீங்கு செய்ய நினைத்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
எஸ்தர் 6:1-2 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்த இராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது. அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.