யாக்கோபு 2:14-26

யாக்கோபு 2:14-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லிக்கொண்டு, அதற்கேற்ற செயலைச் செய்யாதிருந்தால், அதனால் பயன் என்ன? அப்படிப்பட்ட விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது உடையின்றியும் அன்றாட உணவின்றியும் இருக்கும்போது, உங்களில் யாராவது அவர்களைப் பார்த்து, “சமாதானத்தோடு போய்வா; குளிர்காய்ந்துகொள், திருப்தியாகச் சாப்பிடு” என்று சொல்லியும், அவனது உடலுக்குரிய தேவைகளைக் கொடுத்து உதவாவிட்டால், அதனால் பயன் என்ன? இவ்விதமாய் விசுவாசமும் அதற்கேற்ற செயலற்றதாய் வெறுமனே இருந்தால், அது செத்துப்போன விசுவாசமே. ஒருவன், “உங்களிடம் விசுவாசம் இருக்கிறது; என்னிடமோ, செயல்கள் இருக்கின்றது” என்று சொல்வானாகில், அதற்கு நான், “செயலில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காட்டு என்றும், நான் என்னுடைய விசுவாசத்தை என்னுடைய செயல்களின் மூலமாய் உனக்குக் காட்டுவேன்” என்றும் சொல்வேன். ஒரே ஒரு இறைவன்தான் இருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாய். அது நல்லதுதான். பிசாசுகளுங்கூட அதை விசுவாசிக்கின்றனவே, விசுவாசித்து நடுங்குகின்றனவே. புத்தியில்லாத மனிதனே, செயலற்ற விசுவாசம் வீணானது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ? நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம், தன்னுடைய மகனாகிய ஈசாக்கை, பலிபீடத்தின்மேல் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபோது, தன்னுடைய செயலினால் அல்லவோ நீதிமான் என்று எண்ணப்பட்டான்? ஆபிரகாமினுடைய விசுவாசமும் அவனுடைய செயல்களும் ஒன்றாகச் செயலாற்றின. அவன் செய்த செயலினாலேயே, அவனுடைய விசுவாசம் முழுநிறைவு பெற்றது. இவ்விதமாய், “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்று வேதவசனம் சொல்கிறபடி நிறைவேறிற்று. ஆபிரகாம் இறைவனின் நண்பன் எனவும் அழைக்கப்பட்டான். எனவே, ஒருவன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, அவன் செய்கின்ற செயலினாலும் நீதிமானாக்கப்படுகிறான் என்று பார்க்கிறீர்கள். அவ்வாறே, வேசியாகிய ராகாபும் இஸ்ரயேல் ஒற்றர்களுக்குத் தங்குவதற்கு இடமளித்து, வேறு வழியாய் அவர்களை அனுப்பிவைத்த செயலினால் நீதியுள்ளவள் என்று எண்ணப்பட்டாள் அல்லவா? உயிரற்ற உடல் செத்துப்போன ஒன்றே; அதுபோலவே, செயலற்ற விசுவாசமும் செத்துப்போனதே.

யாக்கோபு 2:14-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் சகோதரர்களே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், செயல்களில்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது, ஆடையில்லாமலும், அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானத்தோடு போங்கள், குளிர்காய்ந்து பசியாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பயன் என்ன? அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும். ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்கு செயல்களும் உண்டு; செயல்களில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் செயல்களினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனிதனே, செயல்களில்லாத விசுவாசம் உயிரில்லாதது என்று நீ அறியவேண்டுமா? நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் வைக்கும்போது, செயல்களினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய செயல்களோடுகூட முயற்சிசெய்து, செயல்களினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று பார்க்கிறாயே. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறியது; அவன் தேவனுடைய நண்பன் எனப்பட்டான். ஆதலால், மனிதன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, செயல்களினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான் என்று நீங்கள் பார்க்கிறீர்களே. அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாக அனுப்பிவிட்டபோது, செயல்களினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? அப்படியே, ஆவியில்லாத சரீரம் உயிரில்லாததாக இருக்கிறதுபோல, செயல்களில்லாத விசுவாசமும் உயிரில்லாததாக இருக்கிறது.

யாக்கோபு 2:14-26 பரிசுத்த பைபிள் (TAERV)

எனது சகோதர சகோதரிகளே, ஒருவன் விசுவாசம் கொண்டவனாக தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு காரியரீதியாக எதுவும் செய்யாமல் இருப்பானேயானால் அவனது விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை. அத்தகைய விசுவாசம் யாரையாவது இரட்சிக்குமா? கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ சகோதரியோ உண்ண உணவும் உடுக்க உடையும் தேவைப்பட்டவராக இருக்கலாம். நீங்கள் அவனிடம் “தேவன் உன்னோடு இருக்கிறார். இருக்க வசதியான இடமும், உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இது போலத்தான் விசுவாசமும், செயலின்மையால் இறந்து விடுகிறது. ஒருவன், “உன்னிடம் விசுவாசம் உள்ளது. ஆனால் நான் செயல் புரிகிறேன். செயல்களற்ற உன் விசுவாசத்தை நீ காட்டு. நான் செய்கிற செயல்கள் மூலம் நான் என் விசுவாசத்தைக் காட்டுவேன்” என்று கூறலாம். ஒரே ஒரு தேவன் தான் இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? நல்லது. ஆனால் பிசாசுகள் கூட அதை நம்பி பயத்தால் நடுங்குகின்றன. நீ புத்தியில்லாதவன். செயலற்ற விசுவாசம் என்பது உயிரற்றது என்பதை நீ அறியமாட்டாயா? தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தில் காணிக்கையாக்கியபோது செயல்கள் மூலம் ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டான். இதனால் நீ ஆபிரகாமின் விசுவாசமும் அவனது செயலும் ஒருங்கே செயல்பட்டதைக் காண இயலும். அவனது செயல்கள் அவனது விசுவாசத்தை முழுமையாக்கியது. எனவே “ஆபிரகாம் தேவனை நம்பினான். அது அவனை நீதிமானாக்கியது” என்கிற பகுதிக்கு இது முழுமையான பொருளைத் தருகிறது. மேலும் இதனால்தான் “தேவனின் நண்பன்” என்று அவன் அழைக்கப்பட்டான். எனவே ஒருவன் வெறும் விசுவாசத்தால் மட்டுமல்ல, தான் செய்கிற காரியங்களால் நீதிமானாக்கப்படுகிறான் என்பதை நீங்கள் பார்க்கமுடியும். ராகாப் இன்னொரு எடுத்துக்காட்டாகும். அவள் ஒரு விலைமகள். ஆனால் அவள் தனது செயல்களால் தேவனுக்கு முன் நீதியுள்ளவளாக்கப்பட்டாள். அவள் தேவனுடைய பிள்ளைகளான ஒற்றர்களைத் தன் வீட்டிற்குள் வைத்திருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவினாள். எனவேதான் ஆவி இல்லாத ஓர் சரீரம் இறந்ததாயிருக்கிறதைப்போலச் செயல்கள் அற்ற விசுவாசம் கூட இறந்ததாயிருக்கிறது.

யாக்கோபு 2:14-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என்கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.