மாற்கு 14:43-72
மாற்கு 14:43-72 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு கூட்ட மக்கள் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும், யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே இயேசு; அவரைக் கைதுசெய்து, காவலுடன் கூட்டிச் செல்லுங்கள்” என்று சொல்லியிருந்தான். யூதாஸ் இயேசுவுக்கு அருகில் வந்து, “போதகரே!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். அப்பொழுது அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைக் கைது செய்தார்கள். அவ்வேளையில், அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை வெட்டினான்; அவனுடைய காது வெட்டுண்டது. இயேசு அவர்களைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்? ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு, உங்களோடு தானே இருந்தேன். அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆம், வேதவசனங்கள் நிறைவேற வேண்டுமே” என்றார். அப்பொழுது எல்லோரும், இயேசுவைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன், மென்பட்டு மேலுடையை உடுத்திக் கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது, அவன் தன்னுடைய மேலுடையை விட்டுவிட்டு, நிர்வாணமாய்த் தப்பி ஓடினான். அவர்கள் இயேசுவை பிரதான ஆசாரியனிடம் கொண்டுப் போனார்கள். அங்கே எல்லா தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் ஒன்றுகூடி இருந்தார்கள். பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றத்திற்குள் போனான். அங்கே, அவன் காவலாளிகளுடன் நெருப்பின் அருகே உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான். தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை. பலர் இயேசுவுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னவை, ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லை. பின்பு சிலர் எழுந்து நின்று, இயேசுவுக்கு எதிராக பொய்ச்சாட்சி கொடுத்தார்கள்: “மனிதருடைய கைகளினால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை நான் இடித்துப்போட்டு பின்பு மூன்று நாட்களில், நான் கைகளினால் கட்டப்படாத, வேறொரு ஆலயத்தைக் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள். அப்பொழுதுங்கூட, அவர்களுடைய சாட்சி ஒன்றுக்கொன்று வேறுபட்டது. அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான். ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார், பதில் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து, “நீ போற்றப்பட்டவரின் மகனான கிறிஸ்துவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நானே அவர், மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ? இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் கேட்டீர்களே. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றான். அவர்கள் எல்லோரும் இயேசுவை, இவன் சாக வேண்டியவன் எனத் தீர்ப்புக் கூறினார்கள். அப்பொழுது சிலர், இயேசுவின்மேல் துப்பத் தொடங்கினார்கள். அவர்கள் அவருடைய கண்களைக் கட்டிவிட்டு, தங்களுடைய கைகளால் அவரை குத்தி, “தீர்க்கதரிசனம் சொல்!” என்று சொன்னபின்பு, காவலாளிகளும் அவரைப் பிடித்துக் கொண்டுபோய் அடித்தார்கள். அவ்வேளையில் பேதுரு கீழே அந்த முற்றத்திலேயே இருந்தான். அப்பொழுது பிரதான ஆசாரியனின் வேலைக்காரிகளில் ஒருத்தி அவ்வழியாய் வந்தாள். அவள் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள். அவனை உற்றுப்பார்த்து, “நீயும் நாசரேத் ஊரானாகிய அந்த இயேசுவோடுகூட இருந்தவன்” என்றாள். ஆனால் அவனோ, “எனக்குத் தெரியாது, நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு விளங்கவும் இல்லை” என்று மறுதலித்தான். அவன் இவ்வாறு சொல்லிவிட்டு, முற்றத்தின் வாசல் பக்கமாய் போனான். அப்பொழுது சேவல் கூவிற்று. அந்த வேலைக்காரி அவனை அங்கேயும் கண்டு, அங்கே சுற்றி இருந்தவர்களைப் பார்த்து, “இவனும் அவர்களில் ஒருவன்” என்றாள். பேதுரு மீண்டும் அதை மறுதலித்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவைப் பார்த்து, “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். ஏனென்றால் நீ ஒரு கலிலேயன்” என்றார்கள். அப்பொழுது பேதுரு, “நீங்கள் சொல்கிற அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் இரண்டாம் முறையாக கூவியது. அப்பொழுது, “சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தான். அவன் மனம்வருந்தி அழுதான்.
மாற்கு 14:43-72 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உடனே, அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனுடன் பிரதான ஆசாரியர்களும், வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான். இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார். அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான். இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை. அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை. அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள். அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா? தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள். அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரை அடிக்கவும், தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள். அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து, குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள். அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது. வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். அவன் மீண்டும் மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு மீண்டும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: உண்மையாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான்.
மாற்கு 14:43-72 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே யூதாஸ் அங்கே வந்தான். அவன் பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன். அவனோடு பலர் வந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், வேதபாரகராலும், மூத்த யூதத்தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்களிடம் வாள்களும், தடிகளும் இருந்தன. யூதாஸ் அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்து வைத்திருந்தான். அதன்படி, “நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர்தான் இயேசு. அவரைக் கைது செய்து பத்திரமாய்க் கொண்டு செல்லுங்கள்” என்று சொல்லி இருந்தான். அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர். இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன். இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள். நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார். அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள். ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான். இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைப் பிராதன ஆசாரியனின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அனைத்து தலைமை ஆசாரியர்களும் முதிய யூதத்தலைவர்களும் வேதபாரகர்களும் கூடினர். பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றான். ஆனால் இயேசுவை நெருங்கவில்லை. தலைமை ஆசாரியனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அப்போது சில காவலர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். பேதுருவும் நெருப்பருகில் சென்றான். தலைமை ஆசாரியரும், மற்றவர்களும் இயேசுவைக் கொல்லக் குற்றங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். யூத ஆலோசனைச் சங்கத்தினரால் இயேசுவைக் கொல்வதற்குரிய எவ்விதக் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. பலர் வந்து அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லை. பின்பு சில மக்கள் எழுந்து அவர்மேல் தவறாகக் குற்றம் சாட்டினர். “‘நான் இந்த ஆலயத்தை இடித்துப் போடுவேன். இது மனிதர்களால் கட்டப்பட்டது. நான் வேறு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன். அது மனிதர்களால் கட்டப்படாதது’ என்று இவன் கூற நாங்கள் கேட்டோம்” என்றார்கள். ஆனால் அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படாமல் போயிற்று. தலைமை ஆசாரியன் அவர்களுக்குமுன் எழுந்து நின்றான். அவன் இயேசுவிடம், “இந்த மக்கள் உமக்கு எதிராகக் கூறுகின்றனர். இவற்றுக்கு உம் பதில் என்ன? இவர்கள் சொல்வது உண்மையா?” என்று கேட்டான். ஆனால் இயேசு எதுவும் கூறவில்லை. தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நீர் கிறிஸ்துவா? ஆசீர்வதிக்கப்பட்ட தேவனின் குமாரனா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டான். இயேசுவோ, “ஆம். நான் தேவ குமாரன்தான். எதிர்காலத்தில் மனித குமாரன் சர்வ வல்லவரின் வலது பக்கத்தில் இருப்பதைக் காண்பீர்கள். பரலோக இராஜ்யத்தில் மேகங்களின் நடுவே மனித குமாரன் வருவதைப் பார்ப்பீர்கள்” என்றார். இதைக் கேட்டதும் தலைமை ஆசாரியனுக்குக் கோபம் வந்தது. அவன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நமக்கு மேலும் சாட்சிகள் தேவையில்லை. தேவனுக்கு எதிராக இவன் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். அனைத்து மக்களும் இயேசுவைக் குற்றவாளி என்றனர். அவரைக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளி என்றனர். சிலர் இயேசுவின் மீது காறித்துப்பினார்கள். அவரது கண்களை மூடினர், அவரைக் குட்டினர். “நீ தீர்க்கதரிசி என்பதை எங்களுக்கு நிரூபித்துக் காட்டு” என்று சொன்னார்கள். பிறகு காவற்காரர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோய் அடித்தனர். அப்போது பேதுரு வீட்டின் முற்றத்தில் இருந்தான். அம்மாளிகையில் உள்ள வேலைக்காரப் பெண் பேதுருவிடம் வந்தாள். பேதுரு நெருப்பு காய்ந்துகொண்டிருந்தான். அவள் பேதுருவை மிகவும் நெருக்கத்தில் பார்த்தாள். “நாசரேத் ஊரானாகிய இயேசுவோடு நீயும் இருந்தாய் அல்லவா?” என்று கேட்டாள் அவள். ஆனால் பேதுருவோ “நான் இயேசுவோடு இருந்ததே இல்லை” என்று மறுத்தான். மேலும், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குத் தெரியவுமில்லை, புரியவுமில்லை” என்று கூறினான். பிறகு பேதுரு விலகி வெளியே வாசல் மண்டபத்துக்குச் சென்றான். மீண்டும் அந்த வேலைக்காரப் பெண் பேதுருவைக் கவனித்தாள். அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் அவள், “இயேசுவின் சீஷர்களுள் இவனும் ஒருவன்” என்றாள். பேதுரு, மீண்டும் அவள் சொல்வது உண்மையில்லை என்று கூறினான். கொஞ்ச நேரம் சென்றதும், பேதுரு அருகில் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பேதுருவிடம், “இயேசுவின் சீஷர்களுள் நீயும் ஒருவன். நீயும் கூட கலிலேயாவில் இருந்து வருகிறவன்” என்றனர். பேதுரு சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கி, “நான் தேவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீங்கள் பேசுகிற அந்த மனிதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான். பேதுரு இவ்வாறு சொன்னதும் சேவலானது இரண்டாம் முறையாகக் கூவியது. இயேசு சொல்லி இருந்ததைப் பேதுரு நினைத்துப் பார்த்தான். “இன்று இரவு சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னால் நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய்” என்று சொல்லி இருந்தார். இதனால் துயருற்று பேதுரு கதறியழுதான்.
மாற்கு 14:43-72 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான். இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான். இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைசங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை. அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை. அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள். அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள். அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து, குளிர்க்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள். அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று. வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவுகூர்ந்து, மிகவும் அழுதான்.