நீதிமொழிகள் 19:13-29
நீதிமொழிகள் 19:13-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மதிகெட்ட மகன் தன் தகப்பனுக்கு அழிவு; வாக்குவாதம் செய்யும் மனைவி, ஓட்டைக் கூரையிலிருந்து ஓயாமல் ஒழுகும் நீரைப்போல் இருக்கிறாள். வீடுகளும் செல்வமும் பெற்றோரிடமிருந்து உரிமைச்சொத்தாய் கிடைக்கின்றன; ஆனால் விவேகமுள்ள மனைவியோ யெகோவாவிடமிருந்து கிடைக்கிறாள். சோம்பல் ஆழ்ந்த நித்திரையைக் கொண்டுவரும். வேலைசெய்ய மறுப்பவர்கள் பசியாயிருப்பார்கள். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்; ஆனால் தங்கள் வழிகள்மேல் கவனமாயிராதவர்கள் சாவார்கள். ஏழைக்கு உதவுகிறவர்கள் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறார்கள், அவர்கள் உதவியதற்கு சரியாக அவர்களுக்கு திரும்பக் கொடுப்பார். உன் பிள்ளைகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும்போதே கண்டித்துத் திருத்து; இல்லாவிட்டால் நீ அவர்களின் வாழ்க்கை அழிய காரணமாகி விடுவாய். முற்கோபமுள்ள மனிதர் தனக்குரிய தண்டனையைப் பெறவேண்டும்; அவரைத் தப்புவித்தால், திரும்பவும் தப்புவிக்க வேண்டிவரும். ஆலோசனையைக் கேட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்; முடிவில் நீ ஞானமுள்ளவராவாய். மனிதனின் இருதயத்தின் திட்டங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவின் நோக்கமே நிறைவேறுகிறது. எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்; பொய்யராய் இருப்பதைவிட ஏழையாய் இருப்பது சிறந்தது. யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்விற்கு வழிநடத்தும்; அவ்வாறு இருந்தால் பிரச்சனை இல்லாமல், மனநிறைவுடன் இருக்கலாம். சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; ஆனால் அதைத் தங்கள் வாய்க்குக்கூட கொண்டுபோகமாட்டார்கள். ஏளனம் செய்பவர்களுக்கு அடி கிடைக்கும், அப்பொழுது அறிவற்றவர்கள் விவேகத்தைக் கற்றுக்கொள்வார்கள்; பகுத்தறிவுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள்மேலும் அறிவைப் பெறுவார்கள். தங்கள் தகப்பனின் பொருட்களை அபகரித்து, தங்கள் தாயைத் துரத்திவிடுகிறார்கள் வெட்கமும் அவமானமும் கொண்டுவருகிற பிள்ளைகள். என் பிள்ளையே, நீ அறிவுரைகளைக் கேட்பதை நிறுத்தினால், அறிவுள்ள வார்த்தைகளிலிருந்து விலகிப்போவாய். சீர்கெட்ட சாட்சி நீதியைக் கேலி செய்கிறது, கொடியவர்களின் வாயோ தீமையை விழுங்குகிறது. ஏளனம் செய்வோருக்கு தண்டனையும், மூடருடைய முதுகிற்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.
நீதிமொழிகள் 19:13-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு. சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான். கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான். ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே. கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும். உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும். நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன். யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேட்காதே. அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.
நீதிமொழிகள் 19:13-29 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு முட்டாள் குமாரன் தன் தந்தைக்கு வெள்ளம்போல நிறையத் தொல்லைகளைக்கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும். ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும். ஒரு சோம்பேறி மிகுந்த உறக்கத்தைப் பெறலாம். ஆனால் அவனுக்கு மிகுந்த பசி இருக்கும். ஒருவன் சட்டத்திற்குப் பணிந்திருந்தால், அவன் தன்னைத்தானே காத்துக்கொள்கிறான். ஆனால் ஒருவன் அதனை முக்கியமில்லை என்று கருதினால், பின் அவன் கொல்லப்படுவான். ஏழைகளுக்குப் பண உதவி செய்வது கர்த்தருக்குக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். அவர்கள் மீது தயவாய் இருந்ததற்காக கர்த்தர் அவற்றைத் திருப்பித் தருவார். உன் குமாரனுக்குக் கற்றுக்கொடு, அவன் தவறு செய்யும்போது தண்டனைகொடு. அதுதான் ஒரே நம்பிக்கை. இதனை நீ செய்ய மறுத்தால், பிறகு அவன் தன்னையே அழித்துக்கொள்ள நீ உதவுவதாக இருக்கும். ஒருவன் மிக எளிதில் கோபம் கொண்டால், அதற்குரிய விலையை அவன் கொடுக்க வேண்டியதிருக்கும். அவனை நீ துன்பத்திலிருந்து தப்புவித்தால், அவன் அதனையே மீண்டும், மீண்டும் செய்வான். அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய். ஜனங்களுக்கு பலவித எண்ணங்கள் தோன்றலாம். எனினும் கர்த்தருடைய திட்டங்களே நிறைவேறும். ஜனங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவனை விரும்புகிறார்கள். எனவே ஜனங்களால் நம்பப்படாதவனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல். கர்த்தரை மதிக்கிறவன் நல்ல வாழ்வைப் பெறுகிறான். அவன் தன் வாழ்வில் திருப்தியடைகிறான். அவன் துன்பங்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. சோம்பேறி, தன் உணவிற்குத் தேவையான வேலைகளைக்கூடச் செய்யமாட்டான். தட்டிலிருந்து உணவை எடுத்து வாயில் வைக்கவும் சோம்பல்படும் அளவுக்கு அவன் முழுச் சோம்பேறி ஆவான். சிலர் எதற்கும் மரியாதை காட்டமாட்டார்கள். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அறிவற்றவன் தன் பாடத்தைக் கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறான். ஆனால் சிறு சிட்சையே அறிவாளிகளைக் கற்றுக்கொள்ளச் செய்யும். ஒருவன் தன் தந்தையிடமிருந்து திருடி, தன் தாயை பலவந்தமாக வெளியேற்றினால் அவன் மிகவும் மோசமானவன். அவன் தனக்குத்தானே அவமானத்தையும் அவமரியாதையையும் தேடிக்கொள்கிறான். போதனைகளைக் கவனமாகக் கேட்பதை நிறுத்தினால் நீ முட்டாள்தனமான தவறுகளைச் செய்துகொண்டே இருப்பாய். சாட்சி சொல்ல வருகிறவன் நேர்மையற்றவனாக இருந்தால், தீர்ப்பும் சரியானதாக இராது. தீயவர்கள் சொல்வது தீமையைத் தரும். மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைப்பவன் தண்டிக்கப்படுவான். அறிவற்றவன் தனக்கான தண்டனையைப் பெறுகிறான்.
நீதிமொழிகள் 19:13-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு. வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான். கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே. கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும். உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி. கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான். பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே. பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். பரியாசக்காரருக்கு தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.