நீதிமொழிகள் 4:1-27

நீதிமொழிகள் 4:1-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள். நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு. அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும். ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும். அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும். என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன். துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ. பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோகும். அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும். துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள். என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும். வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது. உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.

நீதிமொழிகள் 4:1-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்; கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன், எனவே நீங்கள் எனது போதனைகளைக் கைவிடாதிருங்கள். நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய், என் தாய்க்கு அருமையான ஒரே பிள்ளையாய் வளர்ந்து வந்தேன். அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது: “நான் சொல்லும் வார்த்தைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்; நீ என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது நீ வாழ்வாய். ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்; எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு. நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்; அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும். ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்; உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள். நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும். அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும், அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.” என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும். நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி, நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன். நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது; நீ ஓடும்போது இடறி விழமாட்டாய். அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு. கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே. அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல். ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்; யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள். அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு, வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள். நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது. ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள். என் மகனே, நான் சொல்வதைக் கவனி; நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு. அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்; அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்; அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும். வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று, சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு. உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்; உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து. உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்; அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும். நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே; உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள்.

நீதிமொழிகள் 4:1-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள். நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு. அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாக இரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும். ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும். அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும். என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ. தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும். அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும். துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள். என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும். வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும். உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும். வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.

நீதிமொழிகள் 4:1-27 பரிசுத்த பைபிள் (TAERV)

பிள்ளைகளே, உங்கள் தந்தையின் போதனைகளைக் கவனமுடன் கேளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். ஏனென்றால் நான் உங்களுக்குப் போதிப்பவையெல்லாம் மிக முக்கியமானவை, நல்லவை. எனவே எனது போதனைகளை எக்காலத்திலும் மறக்கவேண்டாம். ஒரு காலத்தில் நானும் இளமையாக இருந்தேன். நான் என் தந்தையின் சிறிய பையனாகவும், என் தாயின் ஒரே குமாரனாகவும் இருந்தேன். என் தந்தை இவற்றை எனக்குக் கற்றுத்தந்தார். அவர், “நான் சொல்லுகின்றவற்றை நினைவில் வைத்துக்கொள். எனது கட்டளைகளுக்கு அடிபணி. அப்போது நீ வாழ்வாய். ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள். என் வார்த்தைகளை மறக்காதே. எப்பொழுதும் என் அறிவுரைகளைப் பின்பற்று. ஞானத்திலிருந்து விலகாதே. பிறகு ஞானம் உன்னைக் காப்பாற்றும். ஞானத்தை நேசி, ஞானம் உன்னைப் பாதுகாக்கும்” என்றார். நீ ஞானத்தைப் பெற விரும்பும்போதே உன்னில் ஞானம் துவங்கும். எனவே, ஞானத்தைப் பெற உனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் பயன்படுத்து. பின்னர் நீ ஞானத்தைப் பெறுவாய். ஞானத்தை நேசி, ஞானம் உன்னைப் பெரியவனாக்கும். ஞானத்தை முக்கியமுள்ளதாக்கு. ஞானம் உனக்கு மதிப்பைக்கொண்டுவரும். உன் வாழ்வில் நிகழும் அனைத்திலும் ஞானமே மிக உயர்ந்ததாக இருக்கும். மகனே, நான் சொல்வதைக் கவனி. நான் சொல்லுகிறபடி செய்தால் நீ நீண்ட காலம் வாழலாம். நான் உனக்கு ஞானத்தைப்பற்றிப் போதித்திருக்கிறேன். நான் நேரான பாதையில் உன்னை வழிநடத்திச் சென்றிருக்கிறேன். இப்பாதையில் தொடர்ந்து செல், உனது கால்கள் எந்த வலைக்குள்ளும் அகப்படாது. இடறிவிழாமல் உன்னால் ஓடமுடியும். நீ செய்ய முயலுகிற செயல்களில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம். எப்போதும் இந்த அறிவுரைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றை மறக்காதே. அவை உனது ஜீவனாகும். தீயவர்கள் நடந்துசெல்லுகிற பாதையில் நீ போக வேண்டாம். அவர்களைப்போல வாழாதே. அவர்களைப் போன்று இருக்கவும் முயலவேண்டாம். பாவத்திலிருந்து விலகி இரு. அதன் அருகில் போகாதே. நேராகக் கடந்துசெல். தீமையைச் செய்துமுடிக்கும்வரை கெட்டவர்களால் தூங்கமுடியாது. அடுத்தவனைப் புண்படுத்தாமல் அவர்களால் தூங்கமுடியாது. அவர்களால் மற்றவர்களுக்குத் தீமை செய்யாமலும் மற்றவர்களைப் புண்படுத்தாமலும் வாழமுடியாது. நல்லவர்கள் அதிகாலை வெளிச்சத்தைப் போன்றவர்கள். சூரியன் உதிக்கும்போது நாளானது பிரகாசமும், மகிழ்ச்சியும் அடைகின்றது. ஆனால் தீயவர்களோ இருண்ட இரவைப் போன்றவர்கள். அவர்கள் இருளில் காணாமற்போவார்கள். அவர்கள் தங்களால் பார்க்க முடியாதவற்றில் விழுந்துவிடுவார்கள். என் மகனே, நான் சொல்லுகின்றவற்றைக் கவனி. என் வார்த்தைகளை ஜாக்கிரதையுடன் கேள். என் வார்த்தைகள் உன்னைவிட்டுப் போகாதபடி பார்த்துக்கொள். நான் சொல்லுகின்றவற்றை நினைவுபடுத்திக்கொள். என்னைக் கவனிக்கின்றவர்களுக்கு எனது போதனைகள் வாழ்வைத் தரும். எனது வார்த்தைகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும். உண்மையை வளைக்காதே. சரியில்லாதவற்றைச் சரியென்று சொல்லாதே. பொய்களைச் சொல்லாதே. நல்ல மற்றும் ஞானமுள்ள உன் குறிக்கோள்களிலிருந்து விலகிவிடாதே. நீ செய்கின்றவற்றில் எச்சரிக்கையாக இரு. நல்ல வாழ்க்கையை நடத்து. நேரான பாதையில் இருந்து விலகாதே. அப்பாதையே நல்லதும் சரியானதும் ஆகும். ஆனால் எப்பொழுதும் தீமையில் இருந்து விலகியிரு.