வெளிப்படுத்தின விசேஷம் 13:14-15
வெளிப்படுத்தின விசேஷம் 13:14-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட அடையாளங்களினாலே பூமியின் மக்களை ஏமாற்றி, வாளினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு உருவம் உண்டாக்கவேண்டும் என்று பூமியின் மக்களுக்குச் சொன்னது. மேலும் அந்த மிருகத்தின் உருவம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் உருவத்தை வணங்காத எல்லோரையும் கொலைசெய்வதற்காகவும், மிருகத்தின் உருவத்திற்கு சுவாசத்தைக் கொடுக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:14-15 பரிசுத்த பைபிள் (TAERV)
அந்த முதல் மிருகத்தின் முன்னிலையில் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆற்றலினால் அற்புதங்களை நிகழ்த்தி, பூமியில் வசிக்கிற மக்களை இம்மிருகம் வஞ்சிக்கிறது. முதல் மிருகத்தை கௌரவிக்க ஒரு விக்கிரகத்தைச் செய்யுமாறு இரண்டாவது மிருகம் மக்களுக்கு ஆணையிட்டது. வாளால் காயம் அடைந்தாலும் கூட இறக்காத மிருகம் இதுவாகும். முதல் மிருகத்தின் உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கிற வல்லமை இரண்டாவது மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த உருவச் சிலையால் பேசவும், அதை வணங்காதவரைக் கொல்லும்படி மக்கள் அனைவருக்கும் ஆணையிடவும் முடிந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:14-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
முதலாவது மிருகத்தின் சார்பாக, அடையாளங்களைச் செய்துகாட்டும் வல்லமை இரண்டாவது மிருகத்திற்கு கொடுக்கப்பட்டதனால், அது பூமியின் மக்களை ஏமாற்றியது. வாளினால் காயமடைந்து, இன்னும் உயிருடன் இருக்கிற, அந்த முதல் மிருகத்தைக் கனம் பண்ணுவதற்காக, அதற்கு ஒரு உருவச்சிலையைச் செய்யும்படி, இரண்டாவது மிருகம் அவர்களுக்கு உத்தரவிட்டது. முதலாவது மிருகத்தினுடைய உருவச்சிலைக்கு உயிர்கொடுக்கும் வல்லமை இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த உருவச்சிலை, பேசும் ஆற்றலுடையதாய் இருந்தது. அந்த உருவச்சிலையை வணங்க மறுத்த எல்லோரையும் அது கொலை செய்யும்படி அனுமதி வழங்கியது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:14-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.