வெளிப்படுத்தின விசேஷம் 13:16-17
வெளிப்படுத்தின விசேஷம் 13:16-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:16-17 பரிசுத்த பைபிள் (TAERV)
இரண்டாவது மிருகமும் மக்கள் அனைவரையும் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் சுதந்தரமானவர்களாக இருந்தாலும் சரி, அடிமைகளாக இருந்தாலும் சரி அவர்களின் வலக்கையிலாவது நெற்றியிலாவது முத்திரை பெறும்படியும் வலியுறுத்தியது. எந்த ஒரு மனிதனுக்கும் அந்த அடையாளக்குறி இல்லாமல் விற்கவோ, வாங்கவோ முடியவில்லை. அந்த அடையாளம் என்பது மிருகத்தின் பெயர் அல்லது பெயரின் எண்ணாகும்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:16-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அத்துடன், இந்த இரண்டாவது மிருகம் சிறியவர், பெரியவர், செல்வந்தர், ஏழைகள், குடியுரிமை பெற்றோர், அடிமைகள் எல்லோரையுமே தங்களுடைய வலதுகையிலோ, அல்லது தங்களுடைய நெற்றியிலோ, ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியது. இதனால், அந்த அடையாளத்தைப் பெறாமலிருந்த யாராலும் வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தது. அந்த மிருகத்தின் பெயர் அல்லது அதன் பெயருக்குரிய எண்தான் அந்த அடையாளம்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:16-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது.