வெளிப்படுத்தின விசேஷம் 13:5-12

வெளிப்படுத்தின விசேஷம் 13:5-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த மிருகத்திற்கு பெருமை பேச்சுகளையும், இறைவனை அவமதித்து பேசவும், ஒரு வாய் கொடுக்கப்பட்டது. நாற்பத்திரெண்டு மாதங்களுக்கு, எதையும் செய்வதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அது இறைவனை அவமதித்துப் பேசுவதற்காகவும், அவருடைய பெயரையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாழ்கிறவர்களையும் தூசிப்பதற்காகவும் தன் வாயைத் திறந்தது. பரிசுத்தவான்களை எதிர்த்து யுத்தம்செய்து, அவர்களை வெற்றிகொள்வதற்கும், அதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும், மக்கள்மேலும், மொழியினர்மேலும், நாட்டினர்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஆட்டுக்குட்டியானவருக்குச் சொந்தமான ஜீவப் புத்தகத்தில், பெயர் எழுதப்படாமல் இருந்த எல்லோருமே, அந்த மிருகத்தை வணங்குவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். ஏனெனில், “யாராவது சிறைப்பட்டுப்போக குறிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சிறைப்பட்டே போவார்கள். யாராவது வாளினால் கொல்லப்பட குறிக்கப்பட்டிருந்தால், அவர்கள் வாளினால் கொல்லப்படுவார்கள்.” ஆகவே பரிசுத்தவான்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் மனந்தளராமல் இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் பொறுமையையும், விசுவாசத்தையும் அப்பொழுது காட்டவேண்டும். பின்பு பூமியிலிருந்து, இரண்டாவது மிருகம் வெளியே வருவதை நான் கண்டேன். அதற்கு ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப்போல் இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் இது இராட்சதப் பாம்பைப்போலவே பேசியது. அவ்வாறு இது அந்த முதலாவது மிருகத்தின் சார்பாக, அதனுடைய முழு அதிகாரத்தையுமே தான் பிரயோகித்தது. இது பூமியையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அந்த முதல் மிருகத்தை வணங்கும்படி செய்தது. அந்த முதலாவது மிருகமே, சாவை விளைவிக்கக்கூடிய காயமடைந்து, குணமடைந்திருந்த மிருகமாகும்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பெருமையானவைகளையும் அவதூறான வார்த்தைகளையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; மேலும், நாற்பத்திரண்டு மாதங்கள் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அது தேவனை அவமதிப்பதற்காகத் தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய இருப்பிடத்தையும், பரலோகத்தில் வசிக்கிறவர்களையும் அவமதித்து. மேலும், பரிசுத்தவான்களோடு யுத்தம்செய்து அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது, ஒவ்வொரு கோத்திரம், மொழி, தேசம் மற்றும் மக்களின்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. உலகம் உண்டானதுமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியில் வசிக்கின்ற மக்கள் எல்லோரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவன் எவனோ அவன் கேட்கவேண்டும். சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே வெளிப்படும். பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்புவதைப் பார்த்தேன்; அது ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இரண்டு கொம்புகளை உடையதாக இருந்து, இராட்சசப் பாம்பைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடத்திக்காட்டி, மரணத்திற்குரிய காயத்திலிருந்தும் குணமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதில் வாழும் மக்களையும் வணங்கும்படிச் செய்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5-12 பரிசுத்த பைபிள் (TAERV)

அம்மிருகம் பெருமையானவற்றையும், தீய வார்த்தைகளையும் பேச அனுமதிக்கப்பட்டது. நாற்பத்திரண்டு மாதங்கள் தன் அதிகாரத்தைச் செலுத்த அம்மிருகம் அனுமதிக்கப்பட்டது. அம்மிருகம் தன் வாயைத் திறந்து தேவனுக்கு எதிரானவற்றைப் பேசியது. அது தேவனுடைய பெயருக்கு எதிராகவும், தேவன் வாழும் இடத்துக்கு எதிராகவும், பரலோகத்தில் வாழ்பவர்களுக்கு எதிராகவும் பேசியது. தேவனுடைய பரிசுத்த மக்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெறும் அதிகாரமும் அந்த மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. உலகில் உள்ள ஒவ்வொரு குல, இன, மொழி, நாட்டின் மீதும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. உலகில் வாழும் அத்தனை மக்களும் அந்த மிருகத்தை வழிபடுவார்கள். இவர்கள், உலகத்தின் துவக்கக்காலம் முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர்கள் எழுதப்படாத மக்கள் ஆவார்கள். கேட்கிற சக்தி உள்ளவன் எவனும் இதனைக் கேட்பானாக. எவனொருவன் சிறைப்படுத்திக்கொண்டு போகிறானோ அவன் சிறைபட்டுப் போவான். எவனொருவன் வாளால் கொல்பவனாக இருக்கிறானோ அவன் வாளால் கொல்லப்பட்டுப் போவான். இதன் பொருள், “தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும்” என்பதாகும். பிறகு வேறொரு மிருகம் பூமிக்குள் இருந்து வெளிவருவதைப் பார்த்தேன். அதற்கு ஆட்டுக்குட்டியைப்போன்று இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் அது இராட்சச பாம்பினைப் போன்று பேசியது. இது முதல் மிருகத்தின் முன்னே நிற்கிறது. முதல் மிருகம் பயன்படுத்திய அதே சக்தியை இதுவும் பயன்படுத்துகிறது. அது பூமியில் வாழ்கிற மக்கள் அனைவரையும் அந்த முதல் மிருகத்தை வழிபடுமாறு தன் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அந்த முதல் மிருகமே குணப்படுத்தப்பட்ட மரணக் காயத்தைக் கொண்டிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டுமாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன். சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும். பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படிச்செய்தது.