ரோமர் 14:19-23

ரோமர் 14:19-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே நாம் சமாதானத்தை நம் மத்தியில் கொண்டுவரும் காரியங்களிலும், ஒருவரையொருவர் பக்தியில் பலப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபட முயற்சிசெய்வோம். உணவுக்காக இறைவனுடைய வேலையை அழித்துப்போட வேண்டாம். எல்லா உணவும் சுத்தமானதுதான், ஆனால் ஒருவன் சாப்பிடும் உணவு மற்றொருவனுக்குத் தடையாக இருக்குமானால், அதை அவன் சாப்பிடுவது தீயதுதான். இறைச்சியைச் சாப்பிடுவதோ, திராட்சை இரசத்தைக் குடிப்பதோ, அல்லது வேறு எதைச் செய்வதோ, உனது சகோதரன் பாவத்தில் விழுவதற்குக் காரணமாய் இருக்குமானால், அவற்றைச் செய்யாதிருப்பது நல்லது. இந்த விஷயத்தில் நீ கொண்டிருக்கும் விசுவாசம் உனக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கட்டும். தான் சரியென்று ஏற்றுக்கொண்டதைக்குறித்து தனக்குள் குற்ற உணர்வு ஏற்படாதிருப்பவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். ஆனால், யாராவது தான் சாப்பிடுவதைக்குறித்து அது சரியென்று விசுவாசம் இல்லாதிருந்தால், அவன் தன்னைத்தானே குற்றப்படுத்துகிறான். ஏனெனில் அவன் அதைச் சாப்பிடும்போது விசுவாச வாழ்வின் அடிப்படையில் சாப்பிடவில்லை; விசுவாசத்திலிருந்து வராததெல்லாம் பாவமே.

ரோமர் 14:19-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனவே, சமாதானத்திற்குரியவைகளையும், ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம். ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே. எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான்; ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும். இறைச்சி சாப்பிடுவதும், மதுபானம் அருந்துகிறதும், வேறு எதையாவது செய்கிறதும், உன் சகோதரன் இடறுவதற்கோ, தவறுவதற்கோ, பலவீனப்படுகிறதற்கோ காரணமாக இருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமல் இருப்பதே நன்மையாக இருக்கும். உனக்கு விசுவாசம் இருந்தால் அது தேவனுக்குமுன்பாக உனக்குள்மட்டும் இருக்கட்டும். நல்லது என்று நிச்சயித்த விஷயத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே.

ரோமர் 14:19-23 பரிசுத்த பைபிள் (TAERV)

அதனால் சமாதானத்துக்கேற்றவற்றை சிரமப்பட்டாவது செய்ய முயற்சி செய்வோம். ஒருவருக்கொருவர் உதவியானவற்றைச் செய்ய முயல்வோம். உணவு உண்ணுவதால் தேவனுடைய வேலையை அழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து உணவும் உண்பதற்கு ஏற்றதே. ஆனால் நாம் உண்ணும் உணவு மற்றவர்கள் பாவத்தில் விழுவதற்கு ஏதுவாக இருந்தால் அது தவறாகும். நீ மாமிசம் உண்பதும், மது குடிப்பதும், உனது சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யுமானால் அவற்றைச் செய்யாமல் இருப்பது நல்லது. உன் சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யும் எதனையும் செய்யாமல் இருப்பாயாக. இவை பற்றிய உன் நம்பிக்கைகள் எல்லாம் உனக்கும் தேவனுக்கும் இடையில் இரகசியமாய் வைக்கப்பட வேண்டும். நல்லதென்று ஒருவன் நினைக்கும் காரியங்களில் ஒருவன் குற்றவளியாக இல்லாமல் இருப்பது பெரும் பாக்கியமாகும். சரியானதுதான் என்ற நிச்சயமில்லாமல் ஒருவன் ஒரு உணவை உண்பானேயானால் அவன் தனக்குத் தானே தப்பானவனாகிறான். ஏனென்றால் அவனுக்கு அவனது செயலில் நம்பிக்கை இல்லை. எனவே நம்பிக்கை இல்லாமல் செய்யும் எச்செயலும் பாவமானதே.

ரோமர் 14:19-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும். மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும். உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.