வாழ்க்கையின் உக்கிராணத்துவம்மாதிரி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

7 ல் 7 நாள்

நான் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்

ஒவ்வொரு நிர்வாகியும் தனது மேலதிகாரியால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். நித்தியத்தைக் குறித்த முன்னோக்கத்துடன் நீங்கள் வாழ்ந்தால், கடவுள் உங்களுக்கு பரிசாக கொடுத்துள்ள இந்த உலக வாழ்க்கையை எப்படி மூதலீடு செய்கிறீர்கள் என்றும், அதைக் குறித்த கணக்கை ஒப்புவிக்க வேண்டும் என்பதையும் உணர்வீர்கள்.

மனிதனின் இயல்பான பாவ சிந்தனையால், கடவுளுக்கு கணக்கு ஒப்புவிப்பதை விட, மனிதன் தான் கடவுளாகவே இருக்க விரும்புகிறான். மனுஷீக சிந்தனையால் கடவுளைக் குறித்த எண்ணம் சிதைக்கப்பட்டு, எதையும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உருவாகி வருகிறது. வாழ்க்கையைக் குறித்த இந்த சுயநல சிந்தனை, மனிதன் கடவுளுக்கு விடுதலையுடனும் மகிழ்ச்சியுடனும் கீழ்ப்படிவதை விட, பாவத்துக்கு பரிதாபமான அடிமையாக மாற்றி விடுகிறது. 

விடுதலை என்பது நீங்கள் விரும்புவதை செய்வது அல்ல, மாறாக எது சரியோ அதை செய்யக்கூடிய ஆற்றலே உண்மையான விடுதலை. உக்கிராணத்துவத்தைக் குறித்த உண்மையே நமக்கு நிஜமான விடுதலையைக் கொண்டு வருகிறது.

பரிசுத்த வேதாகமத்தின் தெளிவும், தராதரமும் நிறைந்த அடிப்படை போதனைகள் நிராகரிக்கப்படும் ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே தனது வசதிக்கும், சுகத்துக்கும் கடவுள் தன்னிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று மனிதன் நினைக்கிறான்.

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நியாயத்தீர்ப்பு நாளொன்று வருகிறது என்று இயேசு கிறிஸ்து திட்டமும் தெளிவுமாக கூறியுள்ளார். எனவே தான் மத்தேயு 12:36ல் “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். 

செல்வச்செழிப்புடன் வாழ்ந்த இஸ்ரவேல் தேசம் ஆவிக்குரிய காரியங்கள் தனக்கு தேவையே இல்லை என்று எண்ணியிருந்த காலக்கட்டத்தில் ஆமோஸ் தீர்க்கதரிசி “தீங்குநாள் தூரமென்று எண்ணுகிறீர்களோ” என்று ஆமோஸ் 6:3ல் கேள்வி கேட்கிறார்.

ஒருவேளை அந்த நாட்களில் வாழ்ந்த மக்கள் கடவுளுக்கு நாம் ஒரு நாள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தாலும், அந்த நாள் வெகுஅருகில் இருக்கிறது என்பதை நம்பவில்லை. எனவே அவர்கள் ஆவிக்குரிய நிர்விசார நிலைக்கும், பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கும், சிற்றின்பத்துக்கும் தங்களை விற்றுப் போட்டனர்.

கணக்கு ஒப்புவிக்கும் நாளுக்கு நாம் எப்படி நம்மை ஆயத்தம் செய்ய முடியும்?

எனவேதான் எபிரேயர் நிருப ஆக்கியோன் எபிரேயர் 10:24-25 வசனங்களில் “மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்” என்று எழுதியிருக்கிறார். நாம் ஒருவருக்கு ஒருவர் கணக்கு ஒப்புவித்து, ஒருவரை ஒருவர் கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காகவே தம்முடைய சரீரமாகிய சபையில் ஆண்டவர் நம்மை வைத்திருக்கிறார்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் முதல் முறையாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் ஊக்குத்துடனும், கிரமமாகவும் தனிப்பட்ட வேதவசன தியானம், மற்றும் ஜெபத்தை மேற்கொண்டனர். ஒவ்வொருவருக்கும் அடர்ந்த புல்வெளியில் தனித்தனியே முழங்காலிட்டு ஆண்டவரிடம் தங்கள் இருதயத்தை ஊற்றி ஜெபிப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல இந்த ஜெப இடத்திற்கு அவர்கள் நடந்து சென்ற பாதை மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. ஒருவேளை ஏதோ ஒரு விசுவாசி தனது ஜெப நேரத்தை அலட்சியம் செய்தால், அது மற்றவர்களுக்கு பட்டவர்த்தனமாக தெரிந்து விடும். அவர்கள் ஜெபத்தை தவற விட்டவரைப் பார்த்து, “சகோதரனே, உங்கள் பாதையில் புல் வளர ஆரம்பித்து விட்டது” என்று அன்புடன் கடிந்து கொள்வார்கள்.

வேதாகம உக்கிராணத்துவம் என்பது உங்களின் ஒவ்வொரு செயலுக்கும், நடத்தைக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டு, சரியானதை செய்ய மற்றவர்கள் உங்களுக்கு உதவிட நீங்கள் அனுமதிக்க தீர்மானிப்பதாகும். 

நமக்கு ஒப்புவிக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கு நல்ல உக்கிராணக்காரர்களாக நாம் விளங்கிட வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். நாம் வாழ்ந்த வாழ்க்கையைக் குறித்து ஒரு நாள் நாம் அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். அந்த நாளுக்காக நாம் இன்றே நம்மை ஆயத்தம் செய்து கொள்வோம்.

மேற்கோள் : மற்றவர்களைக் குறித்த பொறுப்பு நமக்கு உண்டு என்ற போதிலும், நாம் அடிப்படையில் கடவுளுக்கு மட்டுமே கணக்கு ஒப்புவிக்க வேண்டும். அவர் முன்பாக ஒரு நாள் நாம் நின்று நம் வாழ்க்கையின் கணக்கை ஒப்புவிக்க வேண்டும். எனவே மனிதருடைய அபிப்பிராயங்களுக்கு மிகவும் மதிப்பளித்து, குறைசொல்லப்படும் போது மனமுடைந்து போவதும், பாராட்டப்படும் போது மிகவும் துள்ளிக்குதிப்பதும் கூடாது” – ஜாண் ஸ்டாட்.

ஜெபம் : ஆண்டவரே, எனக்கு சிறந்தது வேண்டும் என்று நீர் விரும்புகிறதற்காக உமக்கு நன்றி. இன்றே நான் எனது வாழ்க்கையை சீர்தூக்கிப்பார்த்து, என்னுடைய சிறந்ததை உமக்கு ஒப்புவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம். இதில் பணமும் அடங்கும். இந்த வாழ்க்கையும் நம்மிடம் உள்ள அனைத்தும் நமக்கு சொந்தமானவை அல்ல, அவை கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவை, அவைகளைக் குறித்த கணக்கை நாம் கடவுளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்ற உண்மையை இந்த 7 நாட்கள் தியானத் திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இதுவே வாழ்க்கையின் உக்கிராணத்துவம்.

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Vijay Thangiah க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய 
http://www.facebook.com/ThangiahVijay க்கு செல்லவும்.

சம்பந்தப்பட்ட திட்டங்கள்