ஆதியாகமம் 1

1
படைப்பின் வரலாறு
1ஆரம்பத்தில் இறைவன் வானங்களையும் பூமியையும் படைத்தார். 2பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது.#1:2 9, 10 ஆம் வசனங்களின்படி பூமிக்கு உலர்ந்த தரையான நிலம் மற்றும், கடல் என நிலை இருந்ததில்லை. ஆழத்தின் மேற்பரப்பில் இருள் பரவியிருந்தது. இறைவனின் ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
3அதன்பின் இறைவன், “ஒளி உண்டாகட்டும்” என்று சொன்னார்; ஒளி உண்டாயிற்று. 4ஒளி நல்லது என்று இறைவன் கண்டார், அவர் இருளிலிருந்து ஒளியைப் பிரித்தார். 5இறைவன் ஒளிக்குப் “பகல்” என்றும் இருளுக்கு “இரவு” என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
6அதன்பின் இறைவன், “தண்ணீர்திரளுக்கு இடையில் ஒரு வானவெளி உண்டாகட்டும்; அந்த வானவெளி கீழே இருக்கிற தண்ணீரிலிருந்து வானவெளிக்கு மேலே இருக்கிற தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்று சொன்னார். 7இவ்வாறு இறைவன் இந்த வானவெளியை உண்டாக்கி, கீழேயுள்ள தண்ணீரை, மேலேயுள்ள தண்ணீரிலிருந்து பிரித்தார். அது அப்படியே ஆயிற்று. 8இறைவன் வானவெளிக்கு “ஆகாயம்” என்று பெயரிட்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
9அதன்பின் இறைவன், “ஆகாயத்தின் கீழுள்ள தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, உலர்ந்த தரை தோன்றட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. 10இறைவன் உலர்ந்த தரைக்கு “நிலம்” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “கடல்” என்றும் பெயரிட்டார். அது நல்லது என்று இறைவன் கண்டார்.
11அதன்பின் இறைவன், “நிலம் தாவர வகைகளை முளைப்பிக்கட்டும்: விதை தரும் பயிர்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் தன்தன் வகைகளின்படியே முளைப்பிக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. 12நிலம் தாவரங்களை முளைப்பித்தது: விதையை பிறப்பிக்கும் பயிர்களை அவற்றின் வகைகளின்படியும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களை அவற்றின் வகைகளின்படியும் முளைப்பித்தது. அது நல்லது என்று இறைவன் கண்டார். 13அப்பொழுது மாலையும் காலையுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
14அதன்பின் இறைவன், “வானவெளியில் ஒளிச்சுடர்கள் உண்டாகட்டும், அவை இரவிலிருந்து பகலைப் பிரிக்கட்டும்; அவை பூமியில் பருவகாலங்களையும், நாட்களையும், வருடங்களையும் குறிக்கும் அடையாளங்களாகவும், 15அவை பூமிக்கு ஒளி கொடுக்கும்படி, வானவெளியில் ஒளிச்சுடர்களாய் இருக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. 16பகலை ஆளுவதற்குப் பெரிய சுடரும், இரவை ஆளுவதற்குச் சிறிய சுடருமாக, இறைவன் இரு பெரும் ஒளிச்சுடர்களை உண்டாக்கினார். அவர் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17இறைவன் அவற்றைப் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக வானவெளியில் வைத்தார். 18பகலையும் இரவையும் ஆளுவதற்காகவும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதற்காகவும் அவற்றை வைத்தார். அது நல்லது என்று இறைவன் கண்டார். 19அப்பொழுது மாலையும் காலையுமாகி, நான்காம் நாள் ஆயிற்று.
20அதன்பின் இறைவன், “தண்ணீரில் நீந்தும் உயிரினங்கள் பெருகட்டும், பூமிக்கு மேலாக வானவெளியெங்கும் பறவைகள் பறக்கட்டும்” என்று சொன்னார். 21இவ்வாறு இறைவன் பெரிய கடல் விலங்குகளையும், நீரில் நீந்தி வாழும் எல்லா உயிரினங்களையும் அவற்றின் வகைகளின்படியும், சிறகுள்ள எல்லா பறவைகளையும் அதினதின் வகைகளின்படியும் படைத்தார். அது நல்லது என்று இறைவன் கண்டார். 22இறைவன் அவற்றை ஆசீர்வதித்து, “பலுகி எண்ணிக்கையில் பெருகி, கடல்நீரை நிரப்புங்கள், பூமியில் பறவைகளும் பெருகட்டும்” என்று சொன்னார். 23அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஐந்தாம் நாள் ஆயிற்று.
24அதன்பின் இறைவன், “நிலம் உயிரினங்களை அவற்றின் வகைகளின்படி உண்டாக்கட்டும்: வளர்ப்பு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் அதினதின் வகையின்படி உண்டாக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. 25இறைவன் காட்டு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், வளர்ப்பு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், தரையில் ஊரும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அவற்றின் வகைகளின்படியும் உண்டாக்கினார். அது நல்லது என்று இறைவன் கண்டார்.
26அதன்பின் இறைவன், “நமது உருவிலும் நமது சாயலின்படியும் மனிதனை உண்டாக்குவோம்; அவர்கள் கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், எல்லா காட்டு மிருகங்களையும், தரையெங்கும் ஊரும் எல்லா உயிரினங்களையும் ஆளுகை செய்யட்டும்” என்று சொன்னார்.
27அப்படியே இறைவன் தமது சாயலில் மனிதனைப் படைத்தார்,
இறைவனின் சாயலிலேயே அவர் அவர்களைப் படைத்தார்.
அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.
28அதன்பின் இறைவன் அவர்களை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகி எண்ணிக்கையில் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களையும் ஆண்டு நடத்துங்கள்” எனக் கூறினார்.
29அதன்பின் இறைவன், “பூமி முழுவதும் மேற்பரப்பிலுள்ள விதை தரும் தாவரங்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் எல்லா மரங்களையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். அவை உங்களுக்கு உணவாயிருக்கும். 30பூமியிலுள்ள எல்லா மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களுக்கும், அதாவது தன்னில் உயிர்மூச்சு உள்ள எல்லா உயிரினங்களுக்கும் நான் பச்சைத் தாவரங்கள் எல்லாவற்றையும் உணவாகக் கொடுக்கிறேன்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று.
31இறைவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார், அது மிக நன்றாயிருந்தது. அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஆறாம் நாள் ஆயிற்று.

Qhakambisa

Dlulisela

Kopisha

None

Ufuna ukuthi okuvelele kwakho kugcinwe kuwo wonke amadivayisi akho? Bhalisa noma ngena ngemvume