சங்கீத புத்தகம் 80
80
“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று.
1இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் ராஜாவாக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
2இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
3தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
4சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
5உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
6எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
7சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9“திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12தேவனே, உமது “திராட்சைக்கொடி” யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி” யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
16உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
17தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது குமாரனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங்கீத புத்தகம் 80: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International