இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?மாதிரி

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?

7 ல் 2 நாள்

இயேசு தாமே தமது மரணத்தைத் திட்டமிட்டாரா?

1960ஆம் ஆண்டில் ஹியு ஜெ. ஸ்கான்ஃபீல்ட் எழுதிய “த பாசோவர் ப்ளாட்” என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த புத்தகத்தின் மைய அனுமானம், தமது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை இயேசு தாமே துல்லியமாக திட்டமிட்டு நிறைவேற்றினார் என்பதே. 

இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல், வேதாகம தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக இருக்கும்படி கவனமாக திட்டமிடப்பட்டது என்று ஸ்கான்ஃபீல்ட் கருதினார். “ஓய்வுநாளுக்கு முன்பாகவே சிலுவையில் அறையப்பட்டவர்களின் சரீரங்கள் இறக்கப்படவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு, யூதர்களின் பஸ்கா பண்டிகைக்கு முன்பாகவே இயேசுவின் சிலுவை மரணம் திட்டமிடப்பட்டது. யோவான் 19:29ல் சிலுவையில் தொங்கும் போது இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட “கடற்காளான்“ ஒரு போதை மருந்து. அது இயேசுவின் இருதய துடிப்பை குறைத்து, அவரை ஒருவித மயக்க நிலைக்கு கொண்டு சென்றது. அவரின் நண்பர்களும் சீடர்களும் பின்னர் அவர் சரீரத்தை இறக்கி, அவருக்கு மயக்கத்தை தெளிவிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரு ரோம சேவகன் தனது ஈட்டியை அவரின் விலாவில் குத்தியதால் (யோவான் 19:34) அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது” என்றும் ஸ்கான்ஃபீல்ட் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

இயேசு தனது மரணத்தை மூன்று முறை முன் அறிவித்தார் (மத்தேயு 16:21; 17:22-23; 20:17-19). அவர் சிலுவையில் அறையப்பட்ட அந்த ஆண்டு, பஸ்காவை ஆசரிப்பதற்காக எருசலேமுக்குள் நுழையும் போதே, தாம் எதற்காக செல்கிறோம் என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார்.

ஆனால் அது ஒரு திட்டமல்ல, மாறாக அது ஒரு தீர்க்கதரிசனம். எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன்னுரைப்பதே தீர்க்கதரிசனம். அதில் ஒன்றும் குறையாமல், சொல்லப்பட்ட அத்தனையும் நடந்து முடிவது, தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் ஆகும்.

பீட்டர் ஸ்டோனர் எழுதிய “விஞ்ஞானம் பேசுகிறது” என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டிய ஜாஷ் மெக்டோவெல், ஒரு தனிமனிதன் எட்டு தீர்க்கதரிசனங்களை, தனி ஆளாக நிறைவேற்ற, எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்கிறார். அதற்கு வாய்ப்பு 1017ல் 1 மட்டுமே இருப்பதாக ஜாஷ் மெக்டோவெல் முடிவுசெய்கிறார். அப்படி நடக்குமானால் அது 6,95,662 சதுர கிலோமீட்டர் அளவுடைய அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் போன்ற மிகப்பெரிய இடத்தில், இரண்டு அடி உயரத்துக்கு கொட்டப்பட்ட வெள்ளி நாணயங்களிலிருந்து, ஒரு குறிப்பிட்ட வெள்ளி நாணயத்தைக் கண்டெடுப்பதைப் போன்றது என்றும் வர்ணிக்கிறார்.

ஸ்கான்ஃபீல்ட் சொல்வதைப் போல ஒரு சாதாரண மனிதனால் இயேசு நிறைவேற்றியதை செய்திருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. “மியர் கிறிஸ்டியானிட்டி” என்ற புத்தகத்தில் சி.எஸ்.லூயிஸ் இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்:

“இயேசு கிறிஸ்து ஒரு அறநெறி ஆசிரியர் மட்டுமே, அவர் கடவுள் என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று சிலர் முட்டாள்தனமாக சொல்வதை நான் தடுக்க விரும்பவில்லை. ஒரு சாதாரண மனிதன் இயேசு சொன்ன காரியங்களைப் போலவே பேசினால், அவன் ஒரு பெரிய அறநெறி ஆசிரியர் ஆகிவிட முடியாது. ஒன்று அவன் மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும் அல்லது, அவன் நரகத்தின் பிசாசாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஒன்று, இந்த மனிதன் (இயேசு) தேவ குமாரன், அல்லது அவர் ஒரு பைத்தியக்காரனை விட மோசமானவர். ஒன்று ஒரு முட்டாள் என்று சொல்லி, அவர் மேல் துப்பி, பிசாசென்று சொல்லி கொல்லப்பட வேண்டும். அல்லது அவர் காலில் விழுந்து ஆண்டவரே என் கர்த்தரே என்று நீங்கள் சொல்ல வேண்டும். மாறாக அவர் ஒரு பெரிய அறநெறி ஆசிரியர் என்று முட்டாள் தனமாக பேச வேண்டாம். அப்படி பேசும் வாய்ப்பை அவர் நமக்கு விட்டு வைக்கவில்லை. அது அவரது நோக்கமும் அல்ல”.

தம்மைக் குறித்து சொல்லப்பட்ட பல்வேறு குறிப்பான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியதால், இயேசு எதை நமக்கு நிருபிக்கிறார்? அவர் தமது மரணத்தை தாமே திட்டமிட்டார் என்பதல்ல. அவர் கடவுளாயிருந்தும் நமக்காக தமது ஜீவனை மனமுவந்து ஒப்புக் கொடுத்தார். ஏனெனில் கடவுள் ஒருவருக்கு மட்டுமே தமது ஜீவனை ஒப்புக் கொடுக்கவும், மீண்டும் அதை எடுத்துக் கொள்ளவும் அதிகாரம் உண்டு.

மேற்கோள்

“முழு பரலோகமும் இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் மேல் கவனம் செலுத்துகிறது. நரகம் அதைக் குறித்து அஞ்சி நடுங்குகிறது. ஆனால் மனிதர்கள் மட்டுமே அதன் உண்மையான அர்த்தத்தை புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள்” – ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்.

ஜெபம் : 

ஆண்டவரே, உம்மைக் குறித்து சொல்லப்பட்ட அனைத்து தீர்க்கதரிசனங்களையும் நீர் நிறைவேற்றியதற்காக நன்றி. ஒரு சாராதண மனிதனால் அதை செய்திருக்க வாய்ப்பே இல்லை. எனக்காக நீர் மரித்து, என்னுடைய பாவங்களுக்கு ஏற்ற பலியாக உமது மரணம் அமைந்ததற்காக நன்றி செலுத்துகிறேன். ஆமென். 

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?

இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டாரா? ஒரு சதித்திட்டத்தினால் அவர் பாதிக்கப்பட்டவரா? இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு யார் காரணம்? இயேசு கிறிஸ்துவின் மரணம் எப்படி நல்ல வெள்ளி என்று அழைக்கப்பட முடியும்? அது நல்லது என்றால், நாம் துக்கப்பட வேண்டுமா அல்லது கொண்டாட வேண்டுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு இந்த 7 நாட்கள் தியானத்திட்டத்தில் விடைகளைக் காணலாம்.

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Vijay Thangiah க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.facebook.com/ThangiahVijay க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்