கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!மாதிரி
அகித்தோப்பேல் யார்?
அகித்தோப்பேல் தாவீது ராஜாவின் நம்பிக்கையான ஆலோசகராக இருந்தான். அவனுடைய ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது என்று 2 சாமுவேல் 16:23 சொல்கிறது. அகித்தோப்பல் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய வாயிலிருந்து நேரடியாக வந்தது போல் அவ்வளவு ஞானமாக இருந்தது என்று மற்றொரு மொழிபெயர்ப்பில் வாசிக்கிறோம். அப்படியென்றால், அவன் கடவுளுடைய ஒரு வல்லமையான, அபிஷேகம் பெற்ற பேச்சாளராய் இருந்திருக்கிறான். அவனை “ மிகச்சிறந்த புத்திசாலியான மனிதன்” என்று கூட அழைக்கக் கூடும்.
சங்கீதம் 55:12 -14 வசனங்கள், அவனுக்கும் தாவீதுக்கும் இருந்த உறவைக் குறிக்கிறது. அப்பகுதி அகித்தோப்பேல் பற்றி இவ்விதமாய் வர்ணிக்கிறது - “எனக்கு சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனும் ஆகிய நீயே அவன். நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடு தேவாலயத்துக்குப்போனோம்.”
அகித்தோப்பேல் பெயருக்கு முட்டாள்தனத்தின் சகோதரன் என்று பொருள். இந்த ஞானமுள்ள மனிதன் எவ்வாறு முட்டாள்தனத்தின் சகோதரனாய் மாறினான்? அவன் செய்த முட்டாள்தனமான காரியம் என்ன?
அகித்தோப்பேல் தாவீதுக்குப் பணிவிடை செய்திருந்தாலும், எபிரோனில் அவருடைய ஆட்சியின் துவக்கத்திலிருந்து, பல ஆண்டுகளாக அவரோடு நெருக்கமாக இருந்தபோதும், 2 சாமுவேல் 16:15-ல் அவன் ராஜாவுக்கு துரோகியாக மாறி அப்சலோமின் சதித்திட்டத்தில் சேர்ந்தான் என்று நாம் காண்கிறோம். அப்சலோம் தன் தகப்பனுக்கு விரோதமாகக் கலகம் செய்தபோது, அகித்தோப்பேல், பக்கம் மாறி, அப்சலோமின் ஆலோசகனாக மாறிவிட்டான்.
அகித்தோப்பேல் அப்சலோமுக்கு தனக்குச் சாதகமான இரண்டு ஆலோசனைகளை கொடுத்தான். முதலாவது, ராஜாவைக் காட்டிலும் தான் வல்லமை உள்ளவன் என்று காட்ட பகிரங்கமாக ராஜாவுடைய மறுமனையாட்டிகளை உடைமை எடுத்துக்கொள்வது. இரண்டாவதாக, தாவீது ராஜாவை தொடர்ந்து போய், அவர் அப்சலோம் கைக்குத் தப்ப ஓடும் வேளையில் அவரைக்கொலை செய்வது. தாவீதைத் துரிதமாக கொலை செய்ய அப்சலோமுக்கு அகித்தோப்பேல் சொன்னது மட்டும் இன்றி, தானே முன்நின்று தாவீதைக் கொன்றுபோடவும் முன் வந்தான். (2 சாமுவேல் 17: 1-4)
யூதருடைய இலக்கியமான தால்மூத், அகித்தோப்பேல் பற்றி இவ்வாறு சொல்கிறது. "அவன் பிலேயாம் போன்ற ஒரு மனிதன், ஆண்டவரிடம் இருந்து பெற்ற பெரிய ஞானத்தை, பரத்தில் இருந்து கிடைத்த பாக்கியம் என்று தாழ்மையோடு கருதாத படியால், அது அவனுக்கு ஒரு தடையாக அமைந்து விட்டது.” அவன், “தங்களுக்கு அல்லாத பொருட்களின் மீது உள்ள இச்சையினால் தங்களுடைய சொந்த பொருட்களையும் இழந்துபோகும் மக்களில் ஒருவன்.”
அகித்தோப்பேல் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால் புத்திசாலியான மக்கள் சிலவேளைகளில் முட்டாள்தனமான முடிவுகள் எடுக்கக்கூடும். அகித்தோப்பேல் இதுவரை வாழ்ந்த ஞானமுள்ள மனிதர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவனுடைய ஞானம், அவனுடைய வாழ்க்கையில் பெரிய தவறு செய்யாத படிஅவனுடைய இருதயத்தைத்தடுக்க இயலவில்லை. அதன் விளைவாக தன் வாழ்வையே இழந்து போனான்.
உன்னுடைய வாழ்க்கையை நோக்கும் போது, உன் உறவுகளில் நீ தவறான முடிவுகளை எடுத்தது உண்டா? உன்னுடைய நல்ல நண்பர் உன்னை மறுதலித்தது உண்டா?
அகித்தோபாலின் வாழ்க்கையின் அனுபவங்களில் இருந்து அநேக பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.
மேற்கோள்: "சில நேரங்களில் யாருக்காக நீங்கள் எதிரியின் ஒரு துப்பாக்கிக் குண்டை உங்கள் மீது ஏற்றுக்கொள்ள தயாராய் இருக்கிறீர்களோ அவர்களே உங்களைச் சுட துப்பாக்கி விசை வில்லின் பின்னால் இருப்பவர்கள் ஆவர்.”
ஜெபம்: ஆண்டவரே, வாழ்க்கையில் சரியான முடிவுகள் எடுக்க எனக்கு உதவி புரியும். என் மீது பிறர் கொண்டிருக்கிற நம்பிக்கையை என்னுடைய சுயநல நோக்கங்களுக்காக துரோகம் செய்து விடாத படி எனக்கு உதவி செய்யும். ஆமென்
இந்த திட்டத்தைப் பற்றி
அகித்தோப்பேல் தாவீது ராஜாவின் ஒரு நம்பிக்கையான ஆலோசகராக இருந்தான். ஆனால், அவனுக்கு இருந்த கசப்புத் தன்மையால் அப்சலோமின் சதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து தாவீதுக்கு துரோகம் செய்தான். இறுதியில் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான். மனக்கசப்பு உன்னைக்கொல்ல விடாதபடி, அதன் காரணங்களையும், குணப்படுத்தும் முறையையும் இந்த ஐந்து நாட்கள் தியானப்பகுதியில் படித்து பயன் பெறுங்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக விஜய் தங்காவை நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.facebook.com/ThangiahVijay