கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!மாதிரி
தன்னுடைய சிறந்த நண்பனுக்குத்துரோகியாக அகித்தோப்பேல் மாறியதன் காரணம் என்ன?
தாவீதின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நண்பனாகிய அகித்தோப்பேல் எவ்வாறு ஒரு துரோகியாக மாறினான் என்பதைப்புரிந்து கொள்வது கடினம். ஆனால் வேத வசனம் அறிவு புகட்டும் சில தகவல்களை வெளிப்படுத்துகிறது.
மக்கள் தங்களுக்குள் ஒரு கசப்புத் தன்மையை உருவாக்கிக் கொள்வதற்கு எப்போதும் ஒரு காரணம் உண்டு. இது ஒருவேளை தவறாக பயன்படுத்தப்பட்டதி னாலேயோ அல்லது முறைகேடாக நடத்தப்பட்டதினாலேயோ அல்லது கைம்மாறு செய்யப்படாத அன்பினாலேயோ என்று பல காரணங்கள் இருக்கலாம்.
அகித்தோப்பேல் தன் மனக் கசப்புக்கு ஒரு காரணம் கொண்டிருந்தான் என்று நாம் காண்கிறோம். 2 சாமுவேல் 11:3 -ல் இவ்விதமாய் பார்க்கிறோம். “அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும் ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.”
மிக்க வருத்தமான இந்த சம்பவங்கள் நடந்ததைப் புரிந்துகொள்ள முக்கிய குறிப்பு எலியாம் யார் என்று தெரிந்து கொள்வது தான். 2 சாமுவேல் 23 - ஆம் அதிகாரத்தில் தாவீதுடன் இருந்த பராக்கிரமசாலிகளின் பட்டியலைப் பார்க்கிறோம். 2 சாமுவேல் 23:34 - ஆம் வசனத்தின் பிற்பகுதியில் பராக்கிரமசாலியான “கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்“ குறிக்கப்பட்டிருக்கிறான்.
அகித்தோப்பேல் பத்சேபாளின் தாத்தா! தாவீது ராஜாவின் அக்கிரமச் செய்கையினாலே அகித்தோப்பேலின் குடும்பமே பாழாய்ப் போயிற்று.
தாவீது பத்சேபாளுடன் செய்த விபச்சாரமும் உரியாவைக்கொலை செய்ததும் மிகவும் வெறுக்கப்படத்தக்கது. எனவே அகித்தோப்பேல் மிக்க சினம் கொண்டான். உரியா கல்லறையில் இருந்தான். அவனுடைய அழகிய மனைவி பத்சேபாள் ஏமாற்றப்பட்டாள். அதனால் கோபம் நிறைந்த அகித்தோப்பேல் தாவீதை விட்டு, தன் கழுதையில் ஏறி, கீலோவில் இருந்த தன் வீட்டிற்குச் சென்றான்.
தனக்கும் தன் குடும்பத்துக்கும் இவ்விதமாக தாவீது துரோகம் செய்தபடியால் அகித்தோப்பேலுக்கு ஒரு பெரிய அடி விழுந்தது போலாயிற்று! அகித்தோப்பேல் மரியாதையுடனும், மேன்மையுடனும் தாவீதுக்கு சேவை செய்திருந்தான். தன் மகனை யுத்தத்துக்கு அனுப்பினது மட்டுமின்றி மகனுடைய மருமகனாகிய உரியாவையும் கூட யுத்தத்துக்கு அனுப்பி இருந்தான். (ஏனெனில் உரியா தாவீதுக்கு உதவியாக இருந்த பராக்கிரமசாலிகளில் ஒருவன்).
பின்னர் நடந்த தாவீதின் கசப்பான மனந்திரும்புதலின் கதை அகித்தோப்பேலின் இருதயத்தை கடினத்துக்குள் தான் ஆக்கியது. இறந்துபோன உரியாவை திரும்பி வரவழைக்க கண்ணீரால் இயலுமா? மயக்கி ஏமாற்றப்பட்ட பெண்ணின் ஆத்துமாவினின்று கறையை கண்ணீரால் நீக்க இயலுமா? ஒருபோதும் முடியாது.
பத்து வருடங்கள் கடந்த பின் அப்சலோமுடைய துரோகத்தைப் பற்றி அகித்தோப்பேல் கேள்விப்பட்டபோது, தாவீதுக்கு பதிலுக்கு பதில் செய்ய, அதை ஒரு வாய்ப்பாக கண்டுகொண்டான்.
அகித்தோப்பேல் இந்த கசப்புணர்வை தன் மனதிலேயே கொண்டிருந்தான் என்பதை அப்சலோம் அறிந்து கொண்டான் என்று 2 சாமுவேல் 15: 12 -இல் வாசிக்கிறோம். “அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக் காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான். அப்படியே கட்டுப்பாடு பலத்து….”
2 சாமுவேல் 16: 20 - இல், அகித்தோப்பேல் அப்சலோமுடைய ஆலோசனைக் காரனாக ஆனான் என்று பார்க்கிறோம். “அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.”
தனக்கு எதிராக ஒருவர் இழைக்கும் தீங்கான செய்கைக்கு இரண்டு தவறான பதில் செயல்கள் உண்டு என்பதாக ஜேய் ஆடாம்ஸ் என்ற ஆலோசகர் குறிப்பிடுகிறார். ஒன்று, நீ உன் உணர்ச்சியை வெளிப்படுத்துவது அல்லது அதை வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே குழம்பி இருப்பது. தங்களுடைய கோபத்தை கையாள்வதற்கு மாறாக மனதுக்குள்ளேயே குழம்பிக் கொண்டிருக்கும் வேளையிலே, பின்னால் அது எப்போதாவது வெளியே வெடித்துவிடும் என்பது ஒரு வருந்தக்கூடிய உண்மை. இதுதான் அகித்தோப்பேலுக்கு நடந்தது. அவன் பத்து வருடங்கள் காத்திருந்தான். இந்த மனக்கசப்பு ஒரு புற்றுநோய் வளர்ச்சி போல அவனுக்குள் வளர்ந்து இறுதியில் அவனைக் கொன்று விட்டது.
பத்சேபாளைக் கவர்ச்சித்ததற்கும், உரியாவை கொலை செய்ததற்கும், தாவீதை பழிவாங்கும் நம்பிக்கையில் அகித்தோப்பேல், ஒரு அநீதியான மன்னிக்கக் கூடாத தவறு செய்துவிட்டான். அவன் தன் ஆத்துமாவுக்குள் கசப்புணர்வை அனுமதித்திருக்கவே கூடாது.
நீங்கள் எவருக்கு எதிராகவாவது பல ஆண்டுகளாக உட்பகை கொண்டுள்ளீர்களா? அது ஒரு புற்று நோய் வளர்ச்சியாக உங்களுக்குள் இருந்து உங்களை கொன்று விட அனுமதிக்காதீர்கள்.
மேற்கோள்: “கசப்புத் தன்மை, தான் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தையே அழித்துவிடும் இரசாயனப் பொருளாகும்.”
ஜெபம்: கர்த்தாவே, யார் எனக்கு எந்த தீங்கிழைத்தாலும், நான் ஒரு போதும் அவர்களுக்கு விரோதமாக என் உள்ளத்தில் மனக்கசப்பு கொண்டிராத படி எனக்கு உதவி செய்யும். ஏனென்றால், அப்படிப்பட்ட கசப்புத்தன்மை அவர்களைக்கொன்று விடாமல் என்னையே கொன்று விடும் என்பதை நான் உணருகிறேன். ஆமென்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அகித்தோப்பேல் தாவீது ராஜாவின் ஒரு நம்பிக்கையான ஆலோசகராக இருந்தான். ஆனால், அவனுக்கு இருந்த கசப்புத் தன்மையால் அப்சலோமின் சதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து தாவீதுக்கு துரோகம் செய்தான். இறுதியில் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான். மனக்கசப்பு உன்னைக்கொல்ல விடாதபடி, அதன் காரணங்களையும், குணப்படுத்தும் முறையையும் இந்த ஐந்து நாட்கள் தியானப்பகுதியில் படித்து பயன் பெறுங்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக விஜய் தங்காவை நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.facebook.com/ThangiahVijay