தப்பிப் பிழைக்கும் கலைமாதிரி
கொண்டிருக்க வேண்டிய மனப்பான்மை
யுத்த கைதி ஒருவர் சிறையில் ஒன்பது கொடூரமான ஆண்டுகளைக் கழித்திருந்தார். அவர் விடுதலையான பின்னர், அவருடைய நண்பர்களில் சிலர் பிழைக்காத நிலையில் அவர் மட்டும் எப்படி தப்பிப் பிழைத்தார் என்று யாரோ ஒருவர் அவரிடம் கேட்டார். அதற்கு அவர் எவ்விதத் தயக்கமும் இன்றி, துரிதமான விடுதலை அல்லது மீட்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து ஏமாந்து போய், தைரியத்தையும், நம்பிக்கையையும், ஜீவனையுமே இழந்து போனார்கள்.
பொறுமையுடனிருக்கத் தீர்மானித்தவர்கள் மனதளவில் கஷ்டங்களை சந்திக்கத் தங்களை ஆயத்தமாக்கிக் கொண்டார்கள். நேர்மறை எண்ணம் கொண்டிருந்தவர்கள் ஆண்டுகள் செல்லச் செல்லத் தாங்கள் எதிர்பார்த்தபடி நடக்காததால், தங்கள் கவனத்தைச் சிதறவிட்டு, “இன்று” என்பதை பொறுமையுடன் கடக்கத் தவறிவிட்டார்கள் என்றார்.
நேர்மறை எண்ணம் கொண்டிருப்பதில் தவறொன்றும் இல்லை! நாம் நம்பிக்கையுடன் வாழும்படி வேதம் நமக்கு அழைப்பு விடுக்கிறதேயன்றி, எப்போதும் எல்லாமே நன்றாக நடக்கும் என்னும் பொய்யான எதிர்பார்ப்புகளுடன் வாழும்படி நாம் அழைக்கப்படவில்லை.
நம் விசுவாசத்திற்கு வரும் சோதனை தேவன் மீதான நம் கவனத்தை அதிகரித்து, பொறுமையை உருவாக்குகிறது என்று யாக்கோபு கூறுகிறார். பளுதூக்குபவர் பயிற்சி செய்யும்போது அவருடைய தசைநார்கள் கிழிவது அடுத்தப் போட்டிக்கு முன் அவரை மேலும் பலப்படுத்தி வளரச் செய்வது போல, ஒவ்வொரு முறையும் நாம் ஒன்றைப் பொறுத்துக் கொள்ள நேரிடும்போது நம்முடைய விசுவாசம் வளர்கிறது. அதுவே நம் பொறுமையையும் கட்டி எழுப்புகிறது!
நம் பொறுமையை மேம்படுத்த உதவும் மூன்று கேள்விகள் பின்வருமாறு.
கேள்வி 1: என்னுடைய உலகமே ஒன்றுமில்லாமல் போகிற நிலை வரும்போது நான் எதைக் கட்டுப்படுத்த முடியும்?
பதில் 1: நீங்கள் உங்களுடைய மனப்பான்மையைக் கட்டுப்படுத்தலாம். தேவனுடைய நன்மை மற்றும் கிருபையினால், கடினமான நேரங்களின் மத்தியிலும் நீங்கள் சந்தோஷமாக இருக்கத் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை, சந்தோஷமாக இல்லாதது போல நீங்கள் உணரலாம்; மனப்பான்மையை உணர்ச்சிகளுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள். மனம் தளர்ந்து போக மறுத்துவிடுங்கள்.
கேள்வி 2: இன்றைய நாளைக் கடந்து செல்ல நான் என்ன செய்ய முடியும்?
பதில் 2: நீங்கள் பொறுமையுடனிருக்க வேண்டும். எந்த அளவிற்கு நாம் தேவன் மீது நம்பிக்கை வைத்து, உண்மையுடன் நிலைத்திருக்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் பலப்படுவோம். நாளைய தினத்தைக் குறித்த கவலையினாலேயே நாம் பெரும்பாலும் இன்று சோர்ந்து போகிறோம். ஆனால், நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படும்படி தேவன் நமக்குச் சொல்லவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளாகக் கடந்து செல்ல நாம் தேவகிருபையை சார்ந்து கொள்ள வேண்டுமென்றே சொல்லப்பட்டிருக்கிறது.
கேள்வி 3: நாளைய தினத்தைக் குறித்து எனக்கிருக்கும் நம்பிக்கை என்ன?
பதில் 3: தேவன் யாராக இருக்கிறார் என்பதில் நங்கூரமிடப்பட்டிருக்கும் நம்பிக்கை உங்களுக்கு உண்டு என்பதே இதற்கான பதில். அவர் நமக்கு மிகச் சிறப்பானது நேரிட வேண்டும் என்பதையே எப்போதும் மனதில் கொண்டிருக்கிறார். நம் வாழ்க்கையின் மிகவும் சோர்வான நேரங்களைப் பயன்படுத்தி, அவற்றின் மூலம் தம் நோக்கங்களை நிறைவேற்றி, அவற்றை நமக்கு சாதகமாக மாற்றுகிறார்.
சந்தோஷம் மற்றும் விசுவாசத்தின் மனப்பான்மையை இன்றே கொள்ளுங்கள். உங்கள் பலவீனத்தில் தேவனுடைய பெலன் பூரணமாக விளங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தாலும், அதைக் கையாளும் கிருபை உங்களுக்கு இருக்கும். அவர் அதைக் கொடுப்பார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இவ்வுலக வாழ்க்கை சோதனைகள் நிறைந்தது. நீங்கள் கூட தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து, “ஏன்?” என்றோ அல்லது “இதிலிருந்து நான் எப்படித் தப்பிப் பிழைப்பேன்?” என்றோ கேட்டுக் கொண்டிருக்கலாம். யாக்கோபு புத்தகத்தில் இதற்கான பதில்கள் உண்டு! இந்த ஐந்து-நாள் வாசிப்புத் திட்டத்தில், தப்பிப் பிழைக்கும் கலையை அறிந்து, கடினமான நேரங்களிலும் எவ்வாறு தேவனுடைய சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் என்பதைப் பற்றி சிப் இங்ராம் பகிர்ந்து கொள்கிறார்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜ்க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/product/art-of-survival-book/