வருகையின் ஆராதனைமாதிரி
அன்பு.
லூக்கா 1:26-28
ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்னும் நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
நமக்கு விருப்பமில்லாத பரிசுகளையே நாமெல்லோரும் அநேக நேரங்களில் பெற்றிருக்கிறோம். அவைகளெல்லாம் மிக மோசமான பரிசுகள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு வகையில் மோசமான பரிசு. பண்டிகைக் கால பரிசு தாள்களில் பொதிந்து வைக்கப்பட்டு, நமக்குள் ஒருவித ஆவலை ஏற்படுத்தும் பரிசுகளைப் பற்றி நான் சொல்கிறேன். இவ்விதமான பரிசுகளெல்லாம் உண்மையில் பரிசுகளே அல்ல என்றுதான் சொல்லவேண்டும். அவைகளெல்லாம் கொடுக்கல்-வாங்கல் பரிமாற்றல்கள், அநேக நேரங்களில், அவைகள் சுயநலம் நிறைந்தவைகளாயிருக்கின்றன.
மரியாளும்கூட இத்தகைய மோசமான பரிசுகளையே முன்பு பெற்றிருத்தாள். அவளுடைய பதில் இதைத்தான் சொல்லுகிறது.
லூக்கா 1:29
“அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்”
இது ஏரத்தாள மரியாள், “இந்தப் பரிசு என்னமாயிருக்குமோ? என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதென்ன? நல்லது போல் தோன்றுகிற இந்தக் காரியத்தினால் எனக்கு என்ன நேரிடப்போகிறது?” என்பனபோன்ற கேள்விகளினால் தனக்குள்ளே கலங்கியதைப்போல் இருக்கிறது.
வாழ்க்கை நமக்கு எதிர்மறையான காரியங்களை எதிர்பார்க்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது. காரியங்களெல்லாம் எப்பொழுதுமே நமக்கு சாதகமாக அமையாது என்பதனை நாம் அறிந்திருக்கிறோம். பணம் செலுத்தவேண்டிய நேரம் வரும்போது, நம்மால் பணம் செலுத்தமுடியாதோ என்ற எண்ணம் வருகிறது. வாழ்க்கையின் பாரங்களைக் குறித்த சிந்தனை வரும்போது, நம்மால் இவைகளையெல்லாம் சமாளிக்கமுடியாதோ என்று எண்ணம் வருகிறது. மற்றவர்கள்மேல் நம்பிக்கை வைத்து, அவர்கள் அதற்கேற்றவாறு நடந்துகொள்ளாதபோது ஏமாற்றமடைகிறோம்.
இவையெல்லாம் பலனை எதிர்பார்த்து வாழும் வாழ்க்கையாகும்.
ஆனால் தேவனுடைய அன்பு வித்தியாசமானது. அது “எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது” என்பதனை அவர் மரியாளுக்கு நினைவூட்டுவதுடன் நமக்கும் நினைவூட்டுகிறார்
லூக்கா 1:30
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
“கிருபை பெற்றவள்” என்று பெயர்பெற்ற அவளுக்கு அவள் “தேவனிடத்தில் தயவைப் பெற்றவள்” என்ற நினைவூட்டல் தேவைப்பட்டது. நமக்கும்கூட அதே நினைவூட்டல் தேவைப்படுகிறது.
சி.எஸ். லெவிஸ் என்பவர் “நான்குவிதமான அன்புகள்” என்ற தம்முடைய புத்தகத்தில், கிருபையின் அன்பு என்ற ஒருவிதமான அன்பைக் குறித்து விவரித்துள்ளார்.
கிருபையின் அன்பு என்பது பலனை எதிர்பார்க்கும் அன்பிற்கு அப்படியே எதிர்மாறானது. கிருபையின் அன்பு என்பது பிரதிபலனை எதிர்பார்க்கவோ, அல்லது அதற்கான தேவையோ இல்லாத ஒரு அன்பு. இது முற்றிலுமாக கொடுப்பவரையே சார்ந்தது. இவ்விதமான அன்பில், பெறுபவர் பெற்றுக்கொள்ள மட்டுமே செய்யவேண்டும்.
இவ்விதமான அன்பையே தேவன் நமக்காக வைத்திருக்கிறார். இத்தகைய அன்பிற்குச் சரியான பிரதிபலன் என்னவென்றால் மனப்பூர்வமாக அதை ஏற்றுக்கொள்வது மட்டுமே. பெற்றுக்கொள்ளும்படிக்கு இருதயம் ஆயத்த நிலையில் இருக்கவேண்டும். இது “நான் இதை செய்துமுடிப்பேன்,” என்று சொல்வதல்ல, மாறாக, “அப்படியே ஆகக்கடவது” என்று சொல்வதாகும்.
லூக்கா 1:38
“அதற்கு மரியாள்: இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.”
மரியாள், எந்த ஒரு வற்பறுத்தலினாலோ, கடமையுணர்வினாலோ அல்லது மன அழுத்தத்தினாலோ தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை, மாறாக, அன்பினால் மட்டுமே அவள் தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தாள். தேவனுடைய கிருபையின் அன்பு மரியாளுக்குள் அன்பை உருவாக்கியது.
இது பதிலுக்குப் பதில் அன்பை விரும்பும் நமக்கு ஒரு மிக முக்கியமான சவாலாகும்.
கிருபையின் அன்பு உற்பத்தி திறனுள்ளது! இது அன்பை உருவாக்குகிறது! கிருபையின் அன்பு இருதயத்திலிருந்து பெருக்கெடுத்து ஓடுவதாயிருக்கிறது, ஆனால் பதிலுக்குப் பதில் செய்யும் அன்பானது எப்பொழுதுமே போலியாகவே இருக்கிறது.
நீங்கள் நம்பவில்லையென்றால், தேவனுடைய கிருபையின் அன்பிற்கு மரியாளுடைய பதிலைப் பாருங்கள்:
லூக்கா 1:46-55
அப்பொழுது மரியாள்:
என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூறுகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னை பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். நம்முடைய பிதாக்களுக்கு அவர்சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.
இந்த சிறிய கரந்துறைப் பாடலில் மரியாள், “அவரே இதை செய்தார்!”என்ற அர்த்தம் கொள்ளும்படியான சொற்றொடரை ஒன்பது வெவ்வேறான தருணங்களில் பயன்படுத்துகிறாள். இவையெல்லாமே அவரைப் பற்றியும், அவர் செய்தவைகளைப் பற்றியுமே இருக்கின்றன! கிருபை நிறைந்த இந்த தேவனைப் பற்றிப் பேசும்போது, அவர் அன்பின் தன்மைகளை உங்களால் கவனியாமல் இருக்கமுடியாது. உங்களால் அவரைத் துதிக்காமல் இருக்கமுடியாது. உங்களால் அவரை நேசிக்காமல் இருக்கமுடியாது.
இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில், தேவனுடைய அன்பானது கிருபையின் அன்பு என்பதை நினைவில்கொள்ளுங்கள். எப்பொழுதுமே அது கிருபையின் அன்புதான்.
அப்படியே ஆகட்டும்.
…
ஜெபம்:
கர்த்தாவே, உம்முடைய கிருபையின் அன்பை எனக்கு நினைவூட்டும். அதைப் பெற்றுக்கொள்ள எனக்கு உதவிசெய்யும். அப்படியே ஆகட்டும்!
செய்முறை:
தேவனோடு உங்களுக்குள்ள உறவு பிரதிபலன் எதிர்பார்க்கும் அன்பு என்பதாக நீங்கள் உணரும் காரியங்களைப் பட்டியலிடுங்கள். “இப்படி ஆகவேண்டும், இல்லையென்றால்” அல்லது “இதை செய்யும், இல்லாவிட்டால்” என்பன போன்ற நீங்கள் ஒத்துக்கொள்ளக்கூடிய, மற்றும் நீங்கள் மனந்திரும்ப வேண்டிய பழக்கவழக்கங்கள் அல்லது எண்ணங்கள் என்னென்ன?
உங்களின் பிரதிபலன் எதிர்பார்க்கும் அன்பினை நீங்கள் ஒத்துக்கொண்டதும், தேவனுடைய அன்பு உங்களுடையது போல் இல்லாததற்காக அவருக்கு நன்றிசெலுத்துங்கள்.
தேவனுடைய கிருபையின் அன்பிற்கு நன்றிசெலுத்தி, துதிகளால் நிறைந்த ஜெபத்துடன் கூடிய கரந்துறைப் பாடல் ஒன்றை எழுதுங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
நம்பிக்கை, அன்பு, சமாதானம், களிப்பு. பண்டிகை காலங்களில் இவ்வார்த்தைகள் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் ஏன் என நமக்கு ஞாபகம் இருக்கிறது? கிறிஸ்துமஸின் கதை, கர்த்தர் வரலாற்றில் எவ்வாறு இயேசுவின் பிறப்பு மூலம் இடைபட்டார் என்பதன் கதையாகும். மரியாள், யோசேப்பு மற்றும் மேய்ப்பர்களின் வாழ்வுகள் இந்த நிகழ்வின் மூலம் முற்றிலும் மாற்றப்பட்டது. இவர்கள் நம்பிக்கை, அன்பு, சமாதானம் மற்றும் களிப்பை கண்டுகொண்டனர்; இயேசுவின் வழியாக இவற்றை எவ்வாறு நாமும் கண்டடையலாம் என்பதை நினைவுகூறலாம்.
More