வருகையின் ஆராதனைமாதிரி
மகிழ்ச்சி.
புதிய கண்டுபிடிப்பு தரும் மகிழ்ச்சியிலும் மேலான மகிழ்ச்சி வேறெதுவுமில்லை.
“இந்த புதிய உணவுவிடுதியை நான் இப்பொழுதுதான் கண்டுபிடித்தேன்!”
“இந்த புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை நான் இப்பொழுதுதான் கண்டுபிடித்தேன்!”
“இந்த புதிய இன்னிசைக் குழுவை நான் இப்பொழுதுதான் கண்டுபிடித்தேன்!”
“எனக்கு கூடுதலான விடுமுறை காலம் இருப்பதை இப்பொழுதுதான் கண்டுபிடித்தேன்!”
“எனக்கு ஒரு பணக்கார உறவினர் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து விட்டுச்சென்றிருப்பதை இப்பொழுதுதான் கண்டுபிடித்தேன்!”
மகிழ்ச்சிதான் எப்பொழுதுமே எல்லா மக்களின் மிகஆழமான, மற்றும் மிகப்பொதுவான உந்துசக்தியாக இருக்கக்கூடும். மகிழ்ச்சியாயிருக்கவும், சந்தோஷமாயிருக்கவும் நாம் நம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்கிறோம். நல்ல விஷயம் எதையாவது கண்டுபிடிக்கும்போது, உங்களால் சும்மா இருக்கமுடியாது. அது உங்களுக்குள் ஒரு குதூகல உணர்வைக் கொண்டுவருகிறது. நல்ல விஷயத்தினிமித்தம் ஏற்படுகின்ற அந்த குதூகல உணர்வே மகிழ்ச்சியாகும்.
அநேகநேரங்களில் நாம் நம்முடைய மகிழ்ச்சியை பயத்தினால் இழக்கிறோம்.
கிறிஸ்துமஸ் கதை என்பது, ஒரு உண்மையான நல்ல விஷயத்தைக் கண்டுபிடிப்பதைக் குறித்ததாகும். நம்முடைய பயங்களின் மத்தியிலும், நாம் தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் இருக்கும்போது மகிழ்ச்சியைக் கண்டடைகிறோம், அந்த மகிழ்ச்சி நமக்குள் துதியைக் கொண்டுவருகிறது.
லூக்கா 2:8-20
“…மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.”
மேய்ப்பர்கள்தான் இந்த நற்செய்தியை முதலாவது கேள்விப்பட்டவர்கள். அவர்களைக் குறித்து விசேஷமாய் சொல்வதற்கு எதுவுமில்லை. அவர்கள் தங்கள் வேலையை செய்துகொண்டிருந்தார்கள். கதைப் பின்னணி மிகச்சாதாரணமானது. ஆனால் அதின் கருத்துக்கள் முக்கியமானவை.
தேவன் நீங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறார். அவர் உங்களை அழகாக உடுத்தியிருக்கும்படி சொல்லவில்லை. அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி, உலகத்தின் ஏதோ ஒரு மூலையிலுள்ள முகவரியை அவர் கொடுக்கவில்லை. பதிலாக அவர் உங்களைத் தேடி வருகிறார். அவர் வருவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லாத இடத்திற்கு மிகத் துல்லியமாக வருகிறார்.
அவர் வரும்போது, நீங்கள் அவரை அறிகிறீர்கள்.
லூக்கா 2:9
“அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.”
தேவனுடைய பிரசன்னம் வரும்போது அதனோடு சேர்ந்து வருகின்ற மற்றொரு காரியம் பயம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தேவனுடைய மகிமையும், மனிதனின் பயமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவைகளாகும்.
பயத்தை நாம் கொள்ளைநோயைத் தவிர்ப்பது போல் தவிர்க்கிறோம். நல்லதுதான். யார் பயப்படுவதை விரும்புவார்கள்? ஆனால் பயத்தைத் தவிர்க்க நினைக்கும் நம்முடைய மனப்பான்மை ஒரு எதிர்பாராத பின்விளைவை ஏற்படுத்துகிறது.
பயத்தின் மீதான நம்முடைய வெறுப்புணர்வு பயப்படுதலின் மூலமாக மட்டுமே கேட்கவல்ல நல்ல செய்தியைக் கேட்ககூடாதபடிக்கு நம்முடைய செவியை மந்தமாக்கியிருக்கிறது. நாம் நம்முடைய பயத்தைத் தவிர்க்க முற்படுகிறோம், அப்படி செய்வதினால், நம்முடைய மகிழ்ச்சியை இழக்கிறோம்.
லூக்கா 2:10முன்பகுதி
“தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்…”
பயம், நம்மை விழிப்புடன் இருக்கச்செய்கிறது. அது நமக்கு ஜாக்கிரதையுணர்வைக் கொடுக்கிறது. திடீரெனக் கேட்கும் ஓர் உரத்த சத்தம் ஒருவரைத் தட்டி எழுப்புவது போல, நீங்கள் திடீரென தட்டிஎழுப்பப்படுகிறீர்கள்.
பயத்தைக் குறைக்கும்பொருட்டு, நாம் அநேக நேரங்களில் பயங்களிலிருந்து நம்மை மறைத்துகொள்ளப் பார்க்கிறோம், அல்லது அவைகளுக்கு நம்மை மரத்துப்போகச் செய்கிறோம், அல்லது பயத்திற்கான மூலக்காரணத்தைக் கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்துவதற்கான எல்லா வழிமுறைகளையும் செய்கிறோம். ஆனால், விழிப்பாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்கும் பொருட்டு, தேவன் இந்த பயங்களை நமக்குக் கொடுத்திருந்தால் என்னசெய்வது?
நம்முடைய பயங்களின் மத்தியிலும் நாம் தேவனுக்குச் செவிகொடுப்போமானால், நமக்குக் கிடைக்கும் மிக உன்னதமான செய்தி, பயப்படாதிருங்கள் என்பதே.
லூக்கா 2:10பின்பகுதி
“…இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.”
மகிழ்ச்சி என்பது நாம் எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை என்பதை மட்டும் உள்ளடக்கியதல்ல, மாறாக எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றவல்ல, நம்முடைய மிகச்சிறந்த விருப்பம் எப்படி உண்மையாகியிருக்கிறது என்பதை உற்றுநோக்குவதாகும்.
இதோ! நீங்கள் சாட்சி கொடுக்க வேண்டியதான நற்செய்தி இங்கே இருக்கிறது! நீங்கள் அதைச் செய்யும்போது, அதுவே உங்களுடைய மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கும்!
லூக்கா 2:11
“இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்."
இதோ! தேவன் இங்கே இருக்கிறார். அவர் உங்களை முற்றும்முடிய இரட்சிக்கும்படி வந்திருக்கிறார். அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும்படி வந்திருக்கிறார். உங்களுடைய தீங்கு நாட்கள் முடிந்துபோகும், உங்களுடைய கவலைகள் மாறும், உங்கள் நீதிக்கேற்ற பலன் கிடைக்கும். பயம் இனி இல்லை. நீங்கள் இவைகளை மறக்கும்போது, அவரே அதை உங்களுக்கு நினைவூட்டுவார். நீங்கள் உங்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை. உங்கள் பாவங்களுக்காக நீங்கள் பதிலளிக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் கேட்கவேண்டுமென்று விரும்பிய "மகிழ்ச்சி" என்ற தீர்க்கமான வார்த்தை பேசப்பட்டுவிட்டது.
முழுஉலகிற்குமான மிகுந்த சந்தோஷம் இங்கே இருக்கிறது.
நீங்கள் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் இது வித்தியாசமானதாக இருக்கலாம்.
லூக்கா 2:12
“பிள்ளையைத் துணிகளிலே சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.”
இது அரண்மனையில் இல்லை.
இது பகட்டாக இல்லை, இது பிரமாண்டமாக இல்லை.
இது மேசிஸ் போன்ற பெரிய கடைகளில் வைக்கப்பட்டுள்ள பலகணி கண்காட்சியில் இல்லை.
இது மிகப்பெரிய வீட்டிலோ அல்லது அழகான காரிலோ இல்லை.
இது ஆசைகாட்டி மோசம்பண்ணும் வெற்று வாக்குறுதியில் இல்லை.
இது பணக்கார, மற்றும் பிரபலமான மக்களின் ஆடம்பர வாழ்க்கையில் இல்லை.
இது நல்வனாகும்படி நீங்கள் எடுக்கின்ற உங்கள் சொந்த முயற்சிகளில்கூட இல்லை.
இது சிறிதும், எளிதில் தொலைந்துபோகக்கூடியதுமாய் இருக்கிறது.
இது யாரும் எதிர்பாராத இடத்தில் ஒளிந்திருக்கிறது.
அங்கே, அந்த மாட்டுத்தொழுவத்தில்தான், நீங்கள் நீண்டகாலமாய் எதிர்நோக்கியிருந்த மகிழ்ச்சி இருக்கிறது.
லூக்கா 2:15-16
“தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லேகம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்."
பார்த்தப் பிறகு, மேய்ப்பர்கள் துணிச்சலான காரியமொன்றை செய்தனர். இந்த நற்செய்திக்கு தங்களை அர்ப்பணம் செய்தனர்.
பயத்தை எதிர்கொள்வதை கடினமாக்குகின்ற காரியங்கள் இவைகள்தான்.
நவீன வியாபார யுக்திகள் மகிழ்ச்சியின் மேல் நமக்கிருக்கும் நாட்டத்தை எப்பொழுதும் வியாபார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றன. "இந்த உறவுமுறைக்கு நீங்கள் உட்பட்டால்.., இந்த வாழ்க்கைப் பணியைத் தேர்வுசெய்தால்.., இந்த புது தொலைபேசியை வாங்கினால்.., இந்த அரசியல் தலைவரைத் தேர்ந்தெடுத்தால்.., குழந்தை வளர்ப்பிற்கான இந்த புதிய முறையை பயன்படுத்தினால்…நீங்கள் விரும்பிய சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்!” என்பனபோன்ற பொய்யான வாக்குறுதிகளினால் நம்முடைய மனங்கள் வஞ்சிக்கப்படுகின்றன.
ஆகவே நாம் அவைகளை வாங்குகிறோம். ஒரு சிறிய வாக்குறுதியை நம்பி நாம் திரும்பத் திரும்ப மிகப்பெரிய தொகையை முதலீடு செய்கிறோம், பின்னர் சோர்ந்துபோகிறோம். மிகச்சிறிய வரவிற்காக நாம் மிகஅதிக செலவு செய்கிறோம். நாம் விரும்பும் அரசியல் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார், ஆனால் சிறிது நாட்களிலேயே நாம் திரும்பவும் எதோ ஒன்றை இழந்ததுபோல் உணருகிறோம். நல்லசெய்தியைக் கேட்பதென்பது மிகக்கடினமானது என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. ஆகவே நாம் சந்தேகப்படுவதிலும் எவ்வித ஆச்சரியமுமில்லை.
ஆனால் தேவனிடத்தில் நாம் சந்தேகமாய் இருக்கவேண்டிய அவசியமில்லை. அவருடைய வார்த்தை ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை. அவருடைய வார்த்தையானது “மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் ஒரு நற்செய்தி.”
மிக அருமையான கண்டுபிடிப்பாகிய, இந்த நற்செய்திக்கு நாம் நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிப்போமானால், மிகுந்த சந்தோஷத்தைக் கண்டடைவோம். இந்த சந்தோஷம் நம்மை துதியினால் நிரம்பச்செய்யும்.
லூக்கா 2:20
“மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.”
மகிழ்ச்சி என்பது எப்பொழுதுமே துதிக்கு முன்பு வருகிற ஒரு காரியமாயிருக்கிறது. ஒரு நல்ல உணவு போன்ற, ஓரளவு மகிழ்ச்சி தரும் காரியங்களில்கூட, நீங்கள் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், “ம்ம்ம்! பிரமாதமாயிருக்கிறது!” என்று சொல்லி உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடுகிறீர்கள். அப்படியானால், இந்த எல்லையில்லா மகிழ்ச்சி நம்மில் எவ்வளவு அதிகமான துதியைக் கொண்டுவருவதாயிருக்கும்?
இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில், உங்கள் பயங்களின் மத்தியிலும், தேவனுடைய வார்த்தையில் உறுதியாயிருக்கப் பயப்படாதிருங்கள். இந்த நற்செய்தியை நோக்கிப்பார்த்து, மகிழ்ச்சியைக் கண்டடையுங்கள்! இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, உங்கள் வாழ்க்கையை சமர்ப்பணம் செய்யுங்கள்.
நீங்கள் கைவிடப்படுவதில்லை. உங்களுக்கு உண்டாகும் சந்தோஷத்தினால், நீங்கள் துதியினால் நிரம்பி வழிவீர்கள்.
...
ஜெபம்:
தேவனே, எனக்குப் பயமாயிருந்தாலும், உம்முடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்ள எனக்கு உதவிசெய்யும். நான் மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள உதவிசெய்யும்.
செய்முறை:
மிகச்சிறிய வரவிற்காக, நீங்கள் மிகஅதிக முதலீடு செய்த காரியங்களைப் பட்டியலிடுங்கள். இந்த நற்செய்திக்குக் கவனமாய் செவிகொடுக்கவும், பயப்படாதிருக்கவும் தேவன் உங்களுக்கு உதவிசெய்யும்படி அவரிடம் கேளுங்கள்.
——————————
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நம்பிக்கை, அன்பு, சமாதானம், களிப்பு. பண்டிகை காலங்களில் இவ்வார்த்தைகள் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் ஏன் என நமக்கு ஞாபகம் இருக்கிறது? கிறிஸ்துமஸின் கதை, கர்த்தர் வரலாற்றில் எவ்வாறு இயேசுவின் பிறப்பு மூலம் இடைபட்டார் என்பதன் கதையாகும். மரியாள், யோசேப்பு மற்றும் மேய்ப்பர்களின் வாழ்வுகள் இந்த நிகழ்வின் மூலம் முற்றிலும் மாற்றப்பட்டது. இவர்கள் நம்பிக்கை, அன்பு, சமாதானம் மற்றும் களிப்பை கண்டுகொண்டனர்; இயேசுவின் வழியாக இவற்றை எவ்வாறு நாமும் கண்டடையலாம் என்பதை நினைவுகூறலாம்.
More