தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 63 நாள்

சண்டே சண்டை

ஞாயிறன்று காலை கோவிலுக்குப் போகாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த மகனைப் பார்த்து அம்மா சொன்னார். மகனே நீ இப்போது உடனடியாக எழுந்திருக்க மூன்று காரணங்கள் இருக்கின்றன. என்றார். என்ன என்று கேட்ட மகனிடம் அம்மா சொன்னார், முதலாவதாக உனக்கு 40 வயது ஆகின்றது. இரண்டாவது நீ உன் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டுமென்றால் முதலாவதாக எழுந்து கிளம்ப வேண்டும். மூன்றாவதாக நீ தான் ஆராதனையை நடத்தவேண்டிய சபைகுரு.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு சரியான நேரத்துக்குப் போகிறோம். மகிழ்ச்சியுடன் செல்கிறோம். வேலைக்கோ, அதிகாரிகளை சந்திப்பதற்கோ, பயணத்திற்குச் செல்லும் போதோ சரியான நேரத்துக்கும் முன்பதாகவே போய்விடுகிறோம். பயத்துடன் செல்கிறோம். ஆனால் ஆண்டவருடைய ஆலயத்திற்குப் போகும் போது அந்த மகிழ்ச்சியும் பயபக்தியும் நேரம் தவறாமையும் இருப்பது போலத் தெரியவில்லை.

தாவீது ஆலயத்துக்குப் போவது பற்றி மகிழ்ச்சியாக இருந்ததாகச் சொல்கிறார். ஏனென்றால் ஆலயம் செல்வது என்பது அவருக்குக் கடமையாகவோ, பொழுது போக்காகவோ இல்லை. அது கடவுளுடன் உறவாடும் ஒரு இடமாக இருந்தது. 

உங்களுக்குப் பிரியமானவர்களை சந்திக்கப் போவதோ, அவர்களுடன் தொலைபேசியில் பேசுவதோ எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். நம்மை நேசித்து நமக்காகத் தன் உயிரையே தந்தவர் நம்மைக் காண மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருக்கிறார். நாமும் மகிழ்ச்சியுடன் அவரைக் காணச் செல்லுவதுவே பொருத்தமானது.

சிந்தனை : கடவுளுடன் உள்ள உறவு தான் ஆலயம் செல்வதை மகிழ்ச்சிகரமாக்குகின்றது. அவருடன் உறவில்லையென்றால் ஆலயத்தில் பயன் அதிகம் இல்லை.

ஜெபம் : ஆண்டவரே உம்மைத் தொழுது கொள்ளவும் உமது ஆலயத்துக்குப் போகவும் என்னை உற்சாகப்படுத்தும். உம்முடன் உள்ள உறவை உறுதிப்படுத்தும். ஆமென்.

நாள் 62நாள் 64

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org