கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்மாதிரி

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

4 ல் 2 நாள்

இரட்டை அணுகுமுறை

‘நியூ லிவிங் ட்ரான்ஸ்லேஷன்’ என்ற வேதாகம திருப்புதலில் பிலிப்பியர் 4 ஆம் அதிகாரம்  6 ஆம் வசனம் இவ்வாறாக இருக்கிறது “எதற்காகவும் கவலைப்படாதீர்கள். எல்லாவற்றுக்காகவும் ஜெபம் செய்யுங்கள்.”

குழப்பம் இல்லாத எத்தனை நேரடியான கட்டளையாக இது இருக்கிறது? ஆனாலும் ஏன் இது கீழ்ப்படிய கடினமான கட்டளையாக இருக்கிறது? கவலையுடன் இருக்கும் நம் போராட்டம் என்னவென்றால், கவலை நம் மனதையும், இதயத்தையும் மிக வேகமாக ஓடச் செய்கின்றது. அதாவது நம் சூழ்நிலைக்கு எது தேவையோ அதையும் தாண்டி நாம் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே தான் அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர் 4 ஆம் அதிகாரம் 8 ஆம் வசனத்தில் இவ்வாறு சொல்கிறார்,  “உண்மையானவைகள், ஒழுக்கமுள்ளவைகள், நீதியுள்ளவைகள், கற்புள்ளவைகள், அன்புள்ளவைகள், நற்கீர்த்தியுள்ளவைகள், புண்ணியம், புகழ் ஆகியவற்றின் மீது மட்டுமே சிந்தனைகளைப் பதித்து வைக்க வேண்டும்.”  பல செய்திகளால் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் நம் மனதை அமைதியடையச் செய்து, உண்மையிலேயே முக்கியமானவற்றில் கவனம் செலுத்தச் செய்வதுவே அதிக முக்கியமானதாகும். தேவைப்பட்டால் நம் மனதிற்குள் செல்லும் செய்திகளை நாம் கட்டுப்படுத்துவதும் முக்கியமாக இருக்கிறது. நம் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவது என்பது, வெட்கப்படாமல், வேண்டுமென்றே எதிர்மறையானதும், பயங்காட்டுவதும், கவலை தருவதுமான சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு, அதற்குப் பதிலாக உண்மை, மதிப்பு, பரிசுத்தம் போன்றவற்றைத் தரும் சிந்தனைகளை நிறைத்துக் கொள்வது தான். ஆனாலும் இங்கே ஒரு சவால் நமக்குக் காத்திருக்கிறது. இந்த மாற்றுதல் என்பது நேரடியாக நடக்கக் கூடியது அல்ல. கணினியைப் போல நாம் எளிதாக எதிர்மறைக்கருத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து, அவை இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியான சிந்தனைகளைக் கொண்டு வைத்துவிட முடியாது.  இதில் முன்னேறுவதற்கான வழி என்ன? இதற்கு ஒரு விடை இல்லையா? ஆம், இதில் துதித்தல் முதலானதாக இருக்கிறது. நமது சிந்தனைகளின் சுழலில் இருந்து வெளியே வந்து, கர்த்தர் யார் என்றும், அவர் என்ன செய்திருக்கிறார் என்றும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறாரோ அவற்றையும், நம் மேல் அவர் வைக்கும் நித்திய அன்பு போன்றவைகளையும் சொல்லி அவரைத் துதிப்பதில் தான் இந்த விடை இருக்கிறது. அவரைத் துதிக்க இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன. நம் மேல் இருக்கும் கவனத்தைக் கர்த்தர் மீது திருப்புவதற்கு திட்டமிட்டு, வேண்டுமென்றே நாம் துதிக்க வேண்டும். இருண்டு போன, கனத்த சூழ்நிலையிலிருந்து நம்பிக்கையும், மகிழ்ச்சியுமான சூழ்நிலைக்கு நம்மை துதியானது கடத்திச் செல்லும். துதியானது கர்த்தரை அவருக்குரிய சரியான இடத்தில் - நம் வாழ்க்கையின் சிம்மாசனத்தில், வைத்துவிடும். நாம் ஏற்கனவே அனுமதித்திருந்த ஆரோக்கியமில்லாதவற்றை அந்த சிம்மாசனத்தில் இருந்து கீழே தள்ளிவிடும் வல்லமை துதிக்கு இருக்கிறது.

துதிக்குப் பின்னர் ஜெபம் வருகிறது. நாம் நேற்று சொல்லியிருந்தபடி எல்லாவற்றையும் கர்த்தரிடம் ஒப்படைப்பது ஜெபத்தில் தான் நடக்கின்றது. இந்த ஜெபம் தான் நமது கவலைகளை முழுமையாக, எல்லாம் வல்லவராகிய கர்த்தரிடம் அர்ப்பணிப்பது ஆகும். அவர் எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், எல்லா இடங்களிலும் எப்போதும் இருக்கிறவர். நம் கவலைகளை சுமக்க இந்த மகத்துவமான மீட்பரைவிட மேலான யாரும் இருக்க முடியுமா? கவலையின் மிகவும் உக்கிரமான வேதனையில் நாம் இருக்கும் போது,  கவலைகளை ஜெபங்களாக மாற்றுவது மிகவும் முக்கியமானதாகும். நம் பயங்களை எல்லாம் கர்த்தர் கையாளுவார். அவரால் நிச்சயமாக அதைச் செய்ய முடியும். பரிசுத்த ஆவியானவர் நம் தேற்றரவாளன் என்று அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட ஜெப வேளைகளில் அவரே ஆறுதலை நமக்குக் கொண்டு வருகிறவர். தனது வார்த்தையால் உங்களுக்கு ஆலோசனை தருகிறவரும் அவரே. நீங்கள் சிந்திப்பது போல நீங்கள் தனிமையாக இல்லை. நீங்கள் உதவிக்கு அப்பாற்பட்ட நிலையிலும் இல்லை. உங்களது உணர்வுப்பூர்வமான ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது ஆகும். நாம் நமது மனதையும் இதயத்தையும் துதி மற்றும் ஜெபத்தால் சீரமைத்துக் கொண்டிருக்கும் போது, நம் ஆன்மாவை புகழ், புண்ணியம், உண்மை நிறைந்த சிந்தனைகள் கழுவி நம்மை உள்ளே இருந்து புதுப்பிக்கும். கவலையுடன் போரிட்டு அது வந்த இடத்துக்கே அதை அனுப்புவதற்கு இந்த இரட்டை அணுகுமுறையைப் பின்பற்ற நீங்கள் ஆயத்தமா? 


ஜெபம்:

அன்புள்ள கர்த்தாவே,

உலகம் உருவாகும் முன்பே என்னை அன்பு செய்கின்ற, இத்தனை உண்மையுள்ள கர்த்தராக நீர் இருப்பதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.  எனக்காக உம் குமாரனாகிய இயேசுவை அனுப்பிய தாராள குணமுள்ள ஒரு தகப்பனாக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. என் மேல் நம்பிக்கை இழக்காமல் நீர் இருந்ததற்காக உமக்கு நன்றி. என் கவலைகளின் மேல் வெற்றி கொள்ள எனக்கு உதவி செய்யும்படியாக நான் ஜெபிக்கிறேன். என் வாழ்க்கையிலும் என் வாழ்க்கையின் மூலமாகவும் நீரே மகிமைப்படும். 

பரம தகப்பனே நான் உம்மை நேசிக்கிறேன்.

இயேசுவின் பெயரால்,

ஆமென். 

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

கவலை என்பது அதன் எல்லா வடிவங்களிலும் நம்மை பலகீனமாக்கிவிடக் கூடியது. அது நம்மைத் தடுமாறச் செய்து பயத்திலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடக்கூடியது. ஆனாலும் இதுவே கதையின் முடிவு அல்ல. இயேசுவில் நாம் சுதந்தரத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள முடியும். நாம் அதை வெற்றி கொள்வது மட்டுமல்ல, அதன் மூலமாக இன்னும் சிறப்பானவர்களாக மாற முடியும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan