அன்னாள்மாதிரி

அன்னாள்

5 ல் 4 நாள்

குணநலன் 4 : உண்மையுள்ளவள்

அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள். ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

1 சாமுவேல் 1:25‭, ‬28

நீண்ட நாள் காத்திருந்து வாய்க்கும் எந்த ஒரு காரியமும் நமக்கு பொக்கிஷமாக இருக்கும்.அதை திரும்ப நம்மிடமிருந்து வாங்கிக் கொள்ளும் பொழுது நமக்கு கொடுக்க மனதே இருக்காது. ஆனால் அன்னாளோ போராடிப் பெற்றுக் கொண்ட தன் முதல் ஆண் பிள்ளையை, தன் மனதில் நிர்ணயித்த ஒரு நாளில் தேவாலயத்தில் கர்த்தருக்காக ஒப்புக்கொடுக்க அவளே கொண்டு போய் விட்டாள். அதில் பின்வாங்கவே இல்லை.

பொருத்தனை செய்த பின் அநேகர் யோசிப்பது உண்டு. காரியம் வாய்த்தவுடன் நிறைவேற்றாமல் இருப்பவர்கள் அநேகர் உண்டு. ஆனால் தேவன் எப்படி உண்மையுள்ளவராய் கேட்டதை கொடுத்தாரோ அப்படியே நானும் சொன்னதை செய்வேன் என்று உண்மையுள்ளவளாய் அன்னாள் இருந்தாள்.

நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.

பிரசங்கி 5:4‭-‬5

சிலர் பொருத்தனை செய்து அதை நிறைவேற்றும் போது மனதில் புலம்பிக் கொண்டு செய்வார்கள். அன்னாளோ சாமுவேலை தேவாலயத்தில் விட்ட பின் அங்கு ஜெபம் பண்ணி ஒரு பாட்டை பாடுகிறாள்( 1 சாமுவேல் 2:1-10 ). இப்பாட்டை தியானிக்கும் பொழுது, பொருத்தனையை அவள் வேண்டா வெறுப்பாய் செய்யாமல் மிகுந்த சந்தோஷத்தோட செய்தாள் என்று பார்க்க முடியும். அவளுடைய இந்த விலையேறப்பெற்ற குணம் உண்மையாகவே மெச்சிக்கப்படத்தக்கது.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

அன்னாள்

அன்னாள் என்பவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி. இவள் சக்களத்தியாகிய பெனின்னாளுக்கு பிள்ளைகள் உண்டு. இந்தக் குடும்பம் முழுவதும் வருஷந்தோறும் சிலோவிலே கர்த்தரை பணிந்து கொள்ளவும் பலியிடவும் போய் வருவார்கள். ஆகவே இவர்கள் தேவபக்தியுள்ளவர்களாகவும், காளைகளை பலியிடுவதனால் (1 சாமு 1:24) இவர்கள் ஐஸ்வர்யவான்கள் என்றும் விளங்குகிறது. கர்த்தரோ அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தார் என்று வேதம் சொல்லுகிறது(1 சாமு 1:5). ஆனால் அன்னாள், தன் மலட்டுத்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையில் இருந்த விசாரத்தை அவள் எப்படி வெற்றியாக மாற்றினாள் என்பதை தியானிக்கலாம் . இன்று உங்களுக்கு இருக்கும் நிந்தை, அவமானம், தோல்வி விரக்திக்கு காரணம் என்ன? அவைகளை ஜெயிக்கும் வழி அன்னாளின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். சங்கீதம் 84:6. அதோடு கூட,அவள் கடந்து போன இச்சூழ்நிலையின் மூலமாக அவளுடைய குண நலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/