மீட்பைத் தெரிவு செய்யுங்கள் மாதிரி

மீட்பைத் தெரிவு செய்யுங்கள்

5 ல் 1 நாள்

வழக்கமாக இடையூறுகளின் முடிவில்தான் மீட்பு வருகிறது

தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்த பின்னர் எழுதிய சங்கீதம்தான் 51ம் சங்கீதம் ஆகும். அவருடைய செய்கைகளால் கடும் பின்விளைவுகள் ஏற்பட்டன. அந்தப் பின்விளைவுகளில் ஒன்று, அவருடைய பாவத்தின் விளைவாக உற்பவித்த கைக்குழந்தையின் மரணம் ஆகும். இந்த சங்கீதத்தில், வழிவிலகியதால் இழந்துபோன இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பத் தருமாறு தாவீது தேவனிடம் கேட்கும் மனந்திரும்புதலின் ஜெபவரிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவர் தேவனோடுள்ள தன் உறவை இழக்கவில்லை என்பதை நன்றாக அறிந்திருந்தபோதும்,அந்த உறவினால் அவருக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த சந்தோஷத்தை இழந்ததை உணர்ந்தார்.

தேவன் உண்மையுள்ளவராக இருந்து, அவரை மன்னித்து,தங்களுக்குள் இருந்த உறவை மீட்டார். இது,சாலொமோனின் பிறப்பினால் நிரூபணமானது; “அவனிடத்தில் கர்த்தர் அன்பாக இருந்ததால்” அவனுடைய பெயர் யெதிதியா எனப்பட்டது.

நம் தேவன் மீட்டெடுப்பதில் மும்முரமாக இருக்கிறார். மீட்பை நம்மால் தயாரிக்கவோ,உருவாக்கவோ முடியாது, அதற்கு நாம் இடம் கொடுத்து,முனைப்புடன் பங்கேற்க மட்டுமே முடியும். மதியீனமாக வழிவிலகிப் போனதால் ஒருவேளை உங்கள் வாழ்க்கை சீரழிந்து போனதாகத் தோன்றலாம். அல்லது நீங்கள் செய்யாத ஒரு தவறின் நிமித்தம் பாதிப்படைந்திருக்கலாம். நீண்ட காலத்திற்கு முன்னர் நடந்த சில காரியங்கள் இன்னும் உங்களுக்கு வேதனையையும்,தீங்கையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கக் கூடும்.

இயேசு 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது தாம் சந்தித்த மக்கள் மீது கரிசனை கொண்டிருந்தது போலவே இன்றும் உங்கள் மீது கரிசனையாயிருக்கிறார். சரீரத்தில் சுகவீனமாக இருந்தவர்களை மட்டுமல்ல,மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தவர்களையும்,ஆவிக்குரிய விதத்தில் மரித்திருந்தவர்களையும் குணமாக்கிய அவர் காணக்கூடியதான மனித சரீரத்தில் மட்டுமல்ல,முழு நபர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். மனிதர்களின் இருதயத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புறப்பட்டு வருவதால்,அவர்கள் தங்கள் இருதயங்களை நோக்கிப் பார்க்கும்படி வலியுறுத்தினார். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும்,முழு ஆத்துமாவோடும்,முழு மனதோடும்,முழு பலத்தோடும் தம்மில் அன்புகூருமாறு கட்டளையிட்டார். இதைவிட முழுமையான ஒன்று இருக்க முடியாது.

சிந்தனைக்கு:

நீங்கள் சுகமடைய தேவன் மீது நம்பிக்கை வைப்பீர்களா?

ஜெபிக்க:

அனுதினமும் சிறிது சிறிதாக முற்றிலும் உங்களை மீட்டெடுக்கும்படி அவரிடம் கேட்பீர்களா?

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

மீட்பைத் தெரிவு செய்யுங்கள்

இயேசுவைப் போல மாறும்படிக்கு நாம் அனுதினம் புதிதாக்கப்படுவதிலும், மறுரூபமடைவதிலும் தேவனுடைய ஆவியானவர் ஈடுபாடு கொண்டிருக்கிறார். இந்தப் புதிதாக்கும் செயலின் அங்கமாகிய மீட்பு என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக உள்ளது. அது இல்லாதபட்சத்தில், நம்மால் பழைய மாதிரிகள், மனப்பான்மைகள், பழக்கங்கள் மற்றும் நடத்தைகளிலிருந்து விடுபட முடியாது. வாழ்நாள் மீட்புப் பயணத்தின் முதல் அடிகளை எடுத்து வைக்க இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom