திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வுமாதிரி

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு

5 ல் 5 நாள்

கானானில் திருமணம்- அடிமைத்தனத்திலிருந்து ஜெயம் கொள்ளும் தம்பதியர்

11 - ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். 12 - நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால், 13 - உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.யோசுவா 23:11-13

கானானில் இஸ்ரவேலர்: தேவன் பல அற்புத அடையாளங்களைச்செய்து, இஸ்ரவேலரை எகிப்திலிருந்து கானானுக்கு அழைத்து வந்தார். செங்கடலைப் பிரித்து அவர்களை வழிநடத்தினார். வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசமான கானானுக்குள் நுழைய தேவன் யோசுவாவின் தலைமையின் கீழ் யோர்தான் நதியைப் பிரித்து, அவர்களுக்கு உதவினார்.அந்த இடத்திற்குச் சொந்தமில்லாதவர்கள் அங்கே வாழ்ந்ததினிமித்தம் அவர்கள் கானான் தேசத்தை சுதந்தரிக்க வேண்டியதாய் இருந்தது. தேவன் கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றனர். அவர்கள் இனி அடிமைகளல்ல, ஜெயம் கொள்ளுகிறவர்கள்.

யோசுவா 23:12,13ன் படி, கானானில் பல்வேறு தேசத்தார் மீந்திருந்தார்கள். எனவே, இஸ்ரவேல் புத்திரர் அவர்களோடு சம்பந்தங்கலக்கவோ, உறவாடவோ கூடாது என்பது தேவனின் கட்டளை. இக்கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் அவர்களோடு சமரசம் செய்வதின் விளைவுகள் கடுமையானவை.

கானானில் திருமணம்: கானானில் திருமணம் என்பது ஒரு லேசான அனுபவம் அல்ல. வெற்றி பெற வேண்டிய ஆவிக்குரிய போராட்டங்கள் இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள அவிசுவாச நண்பர்களுக்காக நமது நம்பிக்கைகளை சமரசம் செய்ய சோதிக்கப்படலாம்; அவிசுவாசிகளை திருமணம் செய்ய தூண்டப்படலாம். ஆனால் இஸ்ரவேலருக்கு சொல்லப்பட்ட கட்டளை இன்றைக்கு நமக்கும் பொருந்தும். கொரிந்து பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் இதை மீண்டும் வலியுறுத்துகிறார். "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?” 2 கொரிந்தியர் 6: 14-16

அவிசுவாசிகளோடு திருமணம் செய்வது பரிசுத்த வித்தை களங்கப்படுத்துகிறது என்று எஸ்ரா 9:2ல் வாசிக்கிறோம். இந்த கட்டளைகளை பயபக்தியோடு ஏற்றுக் கொண்டு அவற்றை நம் பிள்ளைகளுக்கும் போதிக்க வேண்டும். இன்றைக்கு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தெரிந்தெடுப்பதை ஏற்றுக் கொண்டு, அவர்கள் எடுக்கும் எல்லா தீர்மானங்களுக்கும் ஒத்துப் போகிறார்கள். இது தேவனுக்கேற்ற பிள்ளை வளர்ப்பு அல்ல.தேவன் தன் எதிர்பார்ப்புகளையும், கட்டளைகளையும் அடுத்த தலைமுறைக்கு நாம் போதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

நியாயாதிபதிகள் 2:1 "அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று." இப்படிப்பட்ட ஒரு தலைமுறை எழும்ப என்ன காரணம்? பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறிய பெற்றோர்களே. இது நமக்கு ஓர் எச்சரிக்கை - நம் பிள்ளைகளுக்கு இயேசுவைப் பற்றி கற்பிக்கத் தவறினால், கர்த்தரை அறியாத, எது சரி, எது தவறு என்று தெரியாத ஒரு தலைமுறையே உருவாகும். இவர்கள் உலகம் சொல்கிறபடியே செய்வார்கள்.

எனவே, கிறிஸ்தவ திருமணம் என்பது நாம் நினைப்பதைவிட மேலானது. இது இயேசுவை நமது யுத்த தளபதியாகக் கொண்ட ஒரு பயணம். தேவனின் வார்த்தையே நம் திசைகாட்டி. பரிசுத்த ஆவியானவர் நம் வழிகாட்டி மற்றும் ஆலோசகர். நம் பயணத்தில் எதிரிகளை எதிர்த்துப் போராட, தேவன் நமக்கு ஆவிக்குரிய ஆயுதங்களையும் கொடுத்திருக்கிறார்.

ஜெபம்: அன்புள்ள பிதாவே, என்னை இதுவரை நடத்தி வந்ததற்கு நன்றி. எனது திருமண வாழ்க்கையில், நான் உமது வார்த்தையைப் பின்பற்றி உமது பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட ஜெபிக்கிறேன். மனிதரை பிரியப்படுத்த எனது கிறிஸ்தவ கோட்பாடுகளை சமரசம் செய்ததற்காக என்னை மன்னியும். அந்த பாவத்திற்காக நான் வருந்துகிறேன். இயேசுவுக்காக பிரகாசித்து, அவர் அன்பை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் தேவபக்தியுள்ள சந்ததியை உருவாக்க எனக்கு உதவி செய்தருளும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு

திருமணம் என்பது ஒரு வாழ்க்கை பயணத்தின் துவக்கம். ஆனால் அது ஒரு பயணத்தின் முடிவாக(destination) கருதும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதினிமித்தம் அந்த ஒரே நாளுக்காக ஆடம்பரமான செலவுகள் நடக்கின்றது. ஆனால் இந்த திருமண பயணத்தில் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பது ஒருவருக்கும் தெரிவதில்லை. திருமண வாழ்க்கையை எகிப்திலிருந்து கானானுக்கு இஸ்ரவேலர் மேற்கொண்ட பயணத்துடன் நாம் ஒப்பிடலாம். இந்த வாழ்க்கை பயணத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடையாளம் காண ஆண்டவர் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் ஜெபம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக SOURCEக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://sourceformarriage.org/