கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

20 ல் 7 நாள்

7.பொன்னைவிட மின்னிய சாந்தம்!

1 சாமுவேல் 25: 24 ........உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும்.

நாபாலைத் திருமணம் செய்த குற்றம் அல்லாமல் வேறு குற்றம் அறியாத ஒரு பெண்தான் நம்முடைய அபிகாயில். இந்த அழகியப் பெண்ணின் குணநலன்களைத் தான் நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். அவளுடைய புத்திசாலித்தனம், கவனித்து செயல் படும் குணம், நேரத்தை வீணாக்கமல் செயல் படும் தன்மை, தாழ்மையான குணம் என்று பல நற்குணங்களை பார்த்துவிட்டோம்.

அலைபாயும் நீருக்கு அணை கட்டுவதுபோல, பாய்ந்து வந்து கொண்டிருந்த தாவீதின் கோபத்துக்கு தன்னுடைய சாந்தத்தால் அணை போட்டாள் அபிகாயில். எத்தனை சாந்தமான, மென்மையான வார்த்தைகளால் அவள் தாவீதிடம் பேசுகிறாள் பாருங்கள்!

அந்த ஒருத்துளி நேரம் அவள் தன்னைபற்றியோ, தன் பெருமையைப்பற்றியோ சிந்திக்கவேயில்லை. அந்தப் பாலைவனத்தில் அபிகாயிலின் சாந்த குணம் பொன்னைவிட அதிகமாக மிளிர்ந்தது ஏனெனில் அது அவள் குடும்பத்தையும் அவளுடைய ஊழியர் அனைவரையும் பேரழிவிலிருந்து இரட்சித்தது அல்லவா!

சாந்தகுணம் என்பது ஒருவரின் பெலவீனம் அல்ல! கர்த்தராகிய இயேசுவில் காணப்பட்ட அழகிய குணம்தான் அது. அவர் தேவனுடைய குமாரனாயிருந்தும், இந்த உலகத்தில் வாழும் நம்மை பாவத்தினால் ஏற்படும் நித்திய மரணத்திலிருந்து இரட்சிக்க தம்மைத் தாழ்த்தி சிலுவை பரியந்தம் ஒப்புவித்தாரே!

சாந்தகுணமுள்ளவர்கள் பாகியவான்கள்! அவர்கள் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்! ( மத் 5:5) என்று கர்த்தராகிய இயேசு கூறியது மனதில் ஒலிக்கவில்லையா?

இந்த உலகில் பெருமையுள்ளவர்கள் மேன்மையான இடத்தை அலங்கரிக்கும் இந் நாட்களில் நம்முடைய இயேசுவின் இந்த வார்த்தைகள் ஆச்சரியத்தைக் கொடுக்கும்! ஆனால் பெருமையுள்ளவர்கள் இன்று பூமியை அலங்கரிக்கலாம், சாந்தகுணமுள்ளவர்களே அதை சுதந்தரிப்பார்கள் என்பது அவருடைய வாக்குத்தத்தம்!

அபிகாயில் தன்னுடைய குடும்பத்துக்காகவும், தன்னுடைய ஊழியரின் நலனுக்காகவும் தன்னுடைய பெருமைகளையெல்லாம் களைந்து எறிந்தாள். தான் யார், தன்னுடைய சொத்தின் மதிப்பு என்ன என்ற எண்ணம் அவளுக்குள் எழும்பவேயில்லை! சண்டை வேண்டாம், சமாதானம் வேண்டும் என்பதே அவள் எண்ணமாயிருந்தது.

இந்த குணம் நமக்கு உண்டா? குடும்பத்துக்குள் சண்டை வேண்டாம் என்று உன்னுடைய பெருமைகளையெல்லாம் களைந்து சாந்தமாய் நடந்து கொள்கிறாயா? சாந்தமான வார்த்தைகளைப் பேசுகிறாயா அல்லது உன் பெருமையினால் குடும்பத்தை ப்ரித்துக்கொண்டிருக்கிறாயா?

சாந்தமே ரூபமாய் வந்த நம்முடைய ஆண்டவராகிய இயேசுவிடம் இந்த சாந்த குணத்தை எனக்குத் தாரும் என்று கேட்போமா!

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com