கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

20 ல் 9 நாள்

9.உன்னை நடத்தும் தேவன்!

1 சாமுவேல் 25: 26 - 27 இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்தவும்,உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும் கர்த்தர் உமக்கு இடம்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டும், உம்முடைய ஜீவனைக் கொண்டும் சொல்லுகிறேன்..... இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக் கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. உமது அடியாளின் பாதகத்தை மன்னியும்.

எத்தனையோ வருடங்கள் வேதத்தை ஆழமாகப் படித்திருந்தாலும், வற்றாத நீரோடை போல, ஒவ்வொரு நாளும் நமக்கு புதிதாக ஒரு பாடத்தைத் தருவதே இதன் சிறப்பு என்பதை இன்று இந்த வசனங்களைப் படிக்கும்போது மறுபடியும் ஒருமுறை உணர்ந்தேன்.

அபிகாயில் தாவீதைப் புகழாமல், அவனைப் பணிந்து, தான் வாழ்க்கைப்பட்ட இடம் எப்படிபட்டது என்பதை தாவீதுக்கு சாந்தமாக எடுத்துரைத்தாள் என்று கடந்த நாட்களில் பார்த்தோம்.

இன்று அபிகாயில் தாவீதைப் புகழ்ந்து பேசுவதைப் பார்க்கிறோம். எப்படிப்பட்ட புகழ்ச்சி? அவனுடைய மனிதத் தன்மைக்காக அல்ல! அவனோடு தேவனாகியக் கர்த்தர இருப்பதற்காக! தேவையில்லாத வார்த்தைகளால் அவனைத் தன்வசப்படுத்த முயலாமல், தேவன் தாவீதோடு இருந்து அவன் கை வீணாக இரத்தம் சிந்தவும் விடாமல், அவன் தனக்காக யுத்தம் செய்து நீதியை சரிகட்டவும் விடாமல் அவனைப் பாதுகாத்ததை அவனுக்கு நினைப்பூட்டினாள்!

இது என்னை ஆச்ச்சரியமூட்டியது! அந்த இடத்தில் நானோ அல்லது நீங்களோ இதுந்திருந்தால் நாம் நமக்குத்தானே மகிமையை எடுத்திருப்போம்!

தாவீதே! கொஞ்சம் கவனி! நான் இங்கு வந்து உன்னைத் தடுக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வீணான இரத்தப்பழி உன்மேல் விழாமலும், உன்னை எதிர்த்தவர்களைப் பழிவாங்கி நீயே உனக்கு நீதியை சரிக்கட்டினாய் என்ற பெயர் உனக்கு வராமலும் இருக்கத்தான் நான் ஓடி வந்தேன்! - என்று நமக்கு நல்ல பெயர் பெற்றிருக்க மாட்டோமா?

ஆனால் அந்தவேளையில் அபிகாயில் தனக்கு நல்ல பெயரைத் தேடாமல், கர்த்தர் இதை உனக்காக செய்தார் ஏனெனில் அவர் உன்னோடு இருக்கிறார், அவர் உன்னை வழிநடத்துகிறார் என்று தேவனை மகிமைப் படுத்துவதைப் பார்க்கிறோம்.

இதுவே ஒருவர் தேவனுடைய சித்தத்துக்குள் நடப்பதின் அடையாளம்! அவள் செய்த எந்தக் காரியத்திலும், தன்னுடைய ஞானத்தினால் இது நடந்தது என்று தனக்கு புகழைத்தேடாமல், கர்த்தருடைய வழிநடத்துதலினால் தான் இது நடந்தது என்று கர்த்தரை நோக்கி அவருக்கு மகிமையைக் கொடுத்தாள்!

நாம் வெற்றிகரமாக செய்யும் எல்லா செயலிலும் நாம் கர்த்தரை மகிமைப் படுத்துகிறோமா?

அப்பப்பா! எவ்வளவு கஷ்டமான ப்ராஜெக்ட், நான் எவ்வளவு கடினமாக உழைத்து வெற்றியோடு முடித்திருக்கிறேன் தெரியுமா? என் படிப்பு, என் அறிவுதான் இதற்கு உதவியது என்று நினைப்பதில்லையா?

நீ தானாய் உருவாகவில்லை! நீ உருவாக்கப்பட்டதே தேவனுடைய சித்தத்தை செய்வதற்காகத்தான்! அதை மறந்து விடாதே!

ஒவ்வொரு சிறிய காரியத்திலும் உன்னை நடத்துபவரை மகிமைப்படுத்து!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!

வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com