கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

20 ல் 14 நாள்

14. பழிவாங்குதல் என்றால்?

1 சாமுவேல் 25:33 ... என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக!

ஆலோசனையைக் கொடுப்பதும், ஆலோசனையை ஏற்றுக்கொள்வதும் ஒரு நல்ல உறவுக்கு தேவையான அஸ்திபாரம் என்று அபிகாயில், தாவீதின் வாழ்க்கையிலிருந்து பார்த்தோம்.

இன்றைய வசனத்தில் தாவீது அபிகாயிலிடம், ' என்னுடைய வாழ்வில் யார் எதற்கு பொறுப்பு என்று சற்று ஞாபகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி அபிகாயில்' என்று கூறுவது போல் உள்ளது!

கண்ணுக்கு கண் என்ற வேத வசனத்தை இறுகப்பிடித்துக் கொண்டு யாராவது நமக்கு ஒரு அடி கொடுத்தால் மறு அடியை வச்சு வாங்கி விடுவதுதான் நமக்குப் பழக்கம்.

நல்லவேளை, பழிவாங்கும் வெறியோடு வந்த தாவீதிடமும், அவனுடைய 400 ஊழியரிடமும், பழிவாங்குவது கர்த்தருடைய வேலை, உன்னுடையது அல்ல என்று அபிகாயில் என்றப் பெண் ஞாபகப்படுத்தியதால் அவன் தப்பித்தான்! இல்லையானால் கர்த்தர் செய்ய வேண்டிய வேலையை அவன் செய்ய சென்றிருப்பான்.

பழிவாங்குதல் என்னுடையது என்று ஏன் கர்த்தர் சொன்னார் என்று என்றாவது என்னைப்போல நீங்களும் யோசித்ததுண்டா?

இதற்காக எபிரேய மொழியில இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று படித்தேன். நான் அதற்கு தண்டனை என்ற அர்த்தத்தைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் தாவீது உபயோகப்படுத்தின இந்த எபிரேய மொழியில் ஆச்சரியப்படும்படியாய் பழிவாங்குதல் என்பதற்கு, அவர் இந்தப் பிரச்சனையை சந்திப்பார் அல்லது அவர் இதை மேற்பார்வையிடுவார் என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது என் மனதில் ஒரு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. என் கர்த்தர் என்னைத் துன்பப்படுத்தும் எல்லா பிரச்சனைகளையும் அவரே சந்திப்பார்! அல்லேலூயா!

அதனால்தான் தாவீது தான் பழிவாங்காதபடி தடை செய்த அபிகாயிலுக்கு நன்றி சொல்கிறான்.

மனிதராகிய நாம் தேவனாகிய கர்த்தரைப்போல் எல்லாவற்றையும் காணமுடியாது, எல்லாவற்றையும் அறியவும் முடியாது! நம்முடைய குறுகிய பார்வையால், அநியாயத்தைத் தட்டிக்கேட்கிறேன் என்று நாம் பழிவாங்க முயன்றால் அது நம்மையே திருப்பியடித்து விடும். அதனால்தான் நம்மை நேசிக்கும் தேவன் இந்தப் பிரச்சனையை அவரே மேற்பார்வையிட்டு, அவரே இதை சந்திப்பதாக நமக்கு வாக்குக் கொடுக்கிறார்.

நம்மை எதிர்க்கும் அல்லது நமக்கு எதிராக செயல்படுபவர்களைக்கூட அவர் சந்தித்து அவர்களையும் தம்முடைய மந்தைக்குள் கொண்டுவர அவரால் கூடும்!

பழிவாங்குதல் கர்த்தருடையது என்று அறிவாயா? யாரையாவது சொல்லாலோ, செயலாலோ பழிவாங்கக் காத்துக்கொண்டிருக்கிறாயா? இது நீ செய்ய வேண்டியது இல்லை! விசுவாசத்தோடு கர்த்தரிடம் ஒப்புவித்துவிடு!

அவர் உன் காரியத்தை தானே மேற்பார்வையிட்டு சந்திப்பார்!

வேதவசனங்கள்

நாள் 13நாள் 15

இந்த திட்டத்தைப் பற்றி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com