கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

20 ல் 18 நாள்

18. கல்லைப்போலான இருதயம்!

1 சாமுவேல் 25:37-38 பொழுது விடிந்து நாபாலின் வெறி தெளிந்தபின்பு அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள். அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப் போலானான். கர்த்தர் நாபாலை வாதித்ததினால் ஏறக்குறைய பத்து நாளுக்கு பின்பு அவன் செத்தான்.

நாபாலின் வீட்டில் ராஜவிருந்து நடந்துமுடிந்தது. மதுபானத்தை அதிகமாக அருந்தியிருந்ததால், அன்று இரவு நாபாலிடம் அபிகாயில் எந்தக்காரியத்தையும் சொல்லவில்லை என்று பார்த்தோம். மறுநாள் காலையில், எல்லாவற்றையும் நாபாலுக்கு அவள் அறிவித்தாள்.

நாம் அவளுடைய காலத்துக்கு செல்ல முடிந்தால், ஒரு ஈயாகவாவது மாறி அவளுடைய அறையில் என்ன நடக்கிறது என்று பார்க்க நமக்கு ஆவல் உண்டல்லவா!

அபிகாயில் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல சொல்ல, அவள் ஆயத்தம் பண்ணின விருந்தையும், அவள் தாவீதை சந்தித்து பேசின எல்லா வர்த்தமானங்களையும் அவன் அறிந்தபோது, கோபம் உச்சியை எட்டியது. சில வேதாகம வல்லுநர் இதை மாசிவ் ஹார்ட் அட்டாக் என்றே கூறுகின்றனர்.

கட்டுக்கடங்காத கோபமா அல்லது வேறே ஏதாவது மருத்துவ காரணமோ தெரியவில்லை ஆனால் அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்தது, அவன் கல்லைப் போனாலானான் என்று வேதம் கூறுகிறது. அதுமட்டுமல்ல கர்த்தர் அவனை வாதித்ததினால் பத்து நாளுக்கு பின்பு அவன் இறந்தே போனான்.

கர்த்தர் அவனை வாதித்தார் என்ற வார்த்தையை நான் படித்த போது லூக்கா 12 ம் அதிகாரம்தான் நினைவுக்கு வந்தது!

அதில் ஒருவன் தன்னுடைய ஆஸ்தியை பாகம் பிரித்துக் கொடுக்கும்படி இயேசுவானவரிடம் கேட்கிறான். அதற்கு அவர் தன்னுடைய பாணியில் அவர்களுக்கு ஒரு உவமையைக் கூறுகிறார்.

ஒரு ஐஸ்வரியவானின் நிலம் நன்றாய் விளைந்தது. அவன் நான் என்ன செய்வேன்? என் களஞ்சியங்களை பெரியதாய்க் கட்டி அவற்றில் இதை சேர்த்து வைத்து, அநேக நாட்களுக்கு வேண்டிய பொருள்கள் இருக்கிறது ஆகையால், புசித்து, குடித்து, இளைப்பாறு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று நினைத்தான்.

தேவனோ அவனை நோக்கி, மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார் ( லூக் 12: 20)

இந்த உவமையில் கர்த்தராகிய இயேசு நாபாலுடைய பெயரை உபயோகப்படுத்தியிருக்கலாம் என்று நினைத்தேன். நாபால் என்ற ஒரு ஐஸ்வரியவான் இருந்தான். அவன் ஆடுகளை மயிர் கத்தரிக்கும் வேளை அவனுக்கு மிகுந்த பலன் கிடைத்தது. அதற்குக் காரணம் தாவீது அவனுடைய ஆடுகளைப் பாதுகாத்ததினால் தான்.

அவன் அதை தாவீதோடு பகிர்ந்து கொள்ளாமல் தனக்கென்று சேமிக்க நினைத்தான். ஆனால் கர்த்தர் அவனை நோக்கி, மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்று அவனை வாதித்ததினால் அவன் மரித்தான், என்று கூட கூறியிருக்கலாம்!

நான் நாபாலின் கதையையும், இந்த உவமையையும் படித்தபோது கர்த்தர் இன்று என்னிடம், நீ இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்ப்பட்டால், நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றால் என்ன சொல்லுவேன் என்று நினைத்தேன்.

இந்த வசனத்தை நாம் ஒவ்வொருநாளும் படுக்கும் முன் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

நம்மில் பலருக்கு இதைக் கேட்கவே பிடிக்காது ஏனெனில் இதற்கு பின்னணியில் பொருளாசை என்னும் பாவம் ஒளிந்து கொண்டிருக்கிறது! அது தேவனுக்கும் நமக்கும் உள்ளத் தொடர்பைத் துண்டித்து, நாம் பரலோக தேவனின் முகத்தைக் காணாமல் மறைத்துவிடும்!

இன்று உங்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டால் என்ன பதில் கொடுப்பீர்கள்! சிந்தித்து பாருங்கள்!

நாள் 17நாள் 19

இந்த திட்டத்தைப் பற்றி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com