கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

20 ல் 19 நாள்

19. காயப்பட்ட உள்ளம்!

1 சாமுவேல்: 25: 39 - 43 நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது,......அபிகாயிலை விவாகம் பண்ணுகிறதற்காக அவளோடு பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.

பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து.... அவனுக்கு மனைவியானாள். யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான். அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவியானார்கள்.

அபிகாயிலின் கணவன் கர்த்தர் வாதித்ததினால் மரித்ததை நேற்றுப் பார்த்தோம். அதைக் கேள்விப்பட்ட தாவீது அபிகாயிலை மணக்க விரும்பி தூது அனுப்புகிறான்.

இந்த அதிகாரத்தைப் படிக்கும்போது என்ன காரணத்தினால் தாவீது அபிகாயிலை விவாகம் செய்ய முடிவெடுத்திருப்பான் என்று என்னால் யூகம் பண்ணவே முடியவில்லை. ஆனால் இந்த சம்பந்தத்தில் லாபம் தாவீதுக்குத்தான் என்று மட்டும் புரிந்தது. அபிகாயிலிடம் பணம் இருந்தது! தாவீதுக்கு அது தேவைப்பட்டது.

அபிகாயிலின் பணம் செழித்தக் குடும்பத்தில் அவள் வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருந்தது என்று நாம் பார்த்தோம். அவளுடைய விவேகமும், புத்திசாலித்தனமும் அவளைத் தனிப்படுத்திக் காட்டியபோதிலும், அவளுடைய புத்திகெட்ட, துராக்கிரதனான கணவனால், அவள் உள்ளம் எவ்வளவு தூரம் காயப்பட்டிருந்திருக்கும் எனபதை நாம் சிந்திக்கவில்லையானால் அவள் கதைக்கு நாம் நியாயம் செய்ய மாட்டோம் அல்லவா!

அவளுடைய புண்பட்ட உணர்ச்சிகளை மேலும் காயப்படுத்தியது அவளுடைய கணவனின் திடீர் மரணம். அவளுக்கும், நாபாலுக்கும் பிள்ளைகள் இருந்ததாக வேதம் கூறவில்லை. அவளுடைய கண்ணீரின் ஈரம் காயுமுன்னரே தாவீதின் ஆட்கள் அவளை நெருங்கி தாவீது அவளை விவாகம் செய்ய விரும்புவதாகக் கூறினர்.

நாபாலுக்கும் தாவீதுக்கும் எத்தனை வித்தியாசம்! நாபால் ஒரு பேலியாளின் மகன், முட்டாள், துராகிருதன். தாவீதோ அழகும், ஆண்மையும் கொண்டவன். அவனைப் பார்த்தவுடன் பெண்கள் தெருவில் கூடி அவனைப் புகழ்ந்து பாடும் ஈர்ப்பு தன்மை கொண்டவன்!

அடுத்த வசனத்தில் அவள் உடனே தாவீதுடைய அழைப்புக்கு இணங்கி, தன்னுடைய தாதிகளோடு அவனைத் திருமணம் செய்ய செல்வதாகப் பார்க்கிறோம்.

ஆனால் என்னுடைய மனதை முள்ளைப்போல குத்தியது அடுத்த வசனம்தான். தாவீது அவளை மட்டும் விவாகம் செய்யவில்லை, இன்னுமொரு பெண்ணையும் அதே சமயத்தில் மணந்தான். அவனுடைய இன்னொரு விவாகத்தைப் பற்றி அபிகாயிலுக்குத் தெரியுமோ இல்லையோ தெரியவில்லை. விவாகம் செய்தவுடன் தாவீது அவளிடம், இது என்னுடைய இன்னொரு மனைவி என்று அறிமுகப்படுத்தியிருப்பானோ என்னவோ!

என்ன மரியாதை அந்தப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டது என்று பாருங்கள்!

ஒருவேளை நீங்கள்கூட, அந்தக்காலத்தில் இரண்டு, மூன்றுபேரை மணம் செய்வது சகஜம் தானே. இதில் தாவீது செய்தது என்ன தவறு என்று நினைக்கலாம்!

நோவா இரண்டாவது மணம் செய்யவில்லை! ஈசாக்கு செய்யவில்லை! நம்முடைய முற்பிதாக்களில் எவரெவர் இரண்டாவது பெண் கொண்டார்களோ அவர்கள் எல்லாரும் ஒவ்வொருமுறையும் தங்கள் கால்களில் தாங்களே கொதி நீரை ஊற்றிய மாதிரி கஷ்டப்பட்டார்கள், ஏனெனில், ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஆதியில் ஏதேனில் கர்த்தர் நமக்காக ஏற்படுத்திய நியமம்!

அபிகாயிலின் காயப்பட்ட உள்ளம் ஆறுதலைத் தேடியது! அவள் தாவீது தன்னிடம் ஆள் அனுப்பியவுடனே எதையும் சிந்திக்காமல் அதற்கு சம்மதிக்கிறாள். ஆனால் ஒருவேளை அவள் காயம் ஆற நேரம் எடுத்து, சிந்தித்து முடிவை எடுத்திருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

நாம் ஏதோ ஒரு காரியத்தில் காயப்பட்ட வேளையில், யாராவது நம்மிடம் ஆறுதலாய் நடந்து கொண்டால், நாம் நம் உள்ளத்தை பறிகொடுப்பதில்லையா! விவாகரத்தைக் கடந்து வரும் ஒரு பெண் அல்லது ஆண், அந்த காயப்பட்ட சூழ்நிலையில் தனக்குத் துணையாக நின்றவருடன் திருமணம் செய்வதை பார்த்திருக்கிறேன்.

ஆனால் எந்த முடிவையும், கண்ணில் நீர் காயும் முன்னர் எடுக்கவேண்டாம் என்பதே என்னுடைய ஆலோசனை!

கர்த்தர் உங்களை இந்த வார்த்தையின் மூலம் ஆசீர்வதிப்பாராக!

வேதவசனங்கள்

நாள் 18நாள் 20

இந்த திட்டத்தைப் பற்றி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com