கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

20 ல் 1 நாள்

1. நாபால் என்னும் முட்டாள்!

வேதத்தை வாசிக்க வாசிக்கத்தான் நாம் அது எத்தனை அருமையான பொக்கிஷம் என்பதை உணர முடியும்!

அதை இந்த வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது நான் மிகவும் உணர்ந்தேன். இதை ஒவ்வொருநாளும் நாம் வாசிப்போமானால் எத்தனையோ பொல்லாங்குகளிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளலாம் என்பது சத்தியமான உண்மை!

இன்று இந்த 1 சாமுவேல் 25ம் அதிகாரத்தில் நாம் நாபால் என்ற மனிதனைப் பார்க்கிறோம். நாபாலின் பெயருக்கு முன்னால் அவனுடைய சொத்தின் மதிப்பீடு வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவன் பெரிய பணக்காரன். சமுதாயத்தில் மிகுந்த வல்லமை வாய்ந்தவன். அவனுடைய கால்நடைகளின் எண்ணிக்கைதான் அந்த காலத்தில் அவனுடைய செலவத்தின் அறிகுறி.

நாம் யாராவது பணக்காரரைப் பார்த்தால் என்ன நினைப்போம்? ஒருவேளை பரம்பரையாக வந்த சொத்து போல என்று நினைப்போம்! அல்லது ஒருவேளை அவர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்ததுபோல என்று நினைப்போம்! ஆனால் என்றைக்காவது ஒரு பெரிய பணக்காரரைப் பார்த்து நாம் இவன் ஒரு முட்டாள் என்று நினைத்தது உண்டா?

இந்த நாபாலின் பெயரோடு முட்டாள் என்ற அர்த்தமும் ஒட்டிக்கொண்டு வருகிறது. வேதாகம அகராதியில் நாபால் என்பதற்கு முட்டாள் என்று அர்த்தம்! அவனுக்கு உலக ஆஸ்திகள் எல்லாம் சொந்தமாக இருந்தாலும் ஏதோ ஒரு குறைபாடு இருந்தது!

அவனுடைய முட்டாள்த்தனத்தினால் அவன் நீதிக்குப் பதிலாக அநீதியைத் தெரிந்து கொண்டான்.

ஏனெனில் வேதம் அவன் முரடனும், துராகிருதனுமாயிருந்தான் என்று 3 ம் வசனத்தில் கூறுகிறது. இதே அதிகாரம் 25 ம் வசனத்தில் நாபாலின் மனைவியாகிய அபிகாயில் அவனை பேலியாளின் மகன் என்கிறாள்.

சங்கீதக்காரனாகிய தாவீது, 'தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்'(சங்:14:1) என்று சொல்வதைப் பார்க்கிறோம்.

நாபால் அவனுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் கடவுள் இல்லையென்று அல்லது தனக்குக் கடவுள் வேண்டாம் பணம் மட்டும் போதும், பணத்தைக்கொண்டு எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று மதிகேடான முடிவு செய்து விடான்.

எத்தனையோமுறை நானும் என்னால் இதை சாதிக்கமுடியும், யாருடைய துணையும் வேண்டாம் என்று முடிவு எடுத்ததுண்டு என்று ஆவியானவர் இன்று என்னுடன் பேசினார். அந்த முடிவு நாபாலைப்போல என்னையும் முட்டாள் ஆக்கி விட்டது. நீங்கள் எப்படி?

யாரோ ஒருவர் நீ எதை செய்தாலும் 'தேவனோடு ஆரம்பி 'என்று கூறியதைப் படித்திருக்கிறேன். அதோடு சற்று கூடுதலாக எந்தக் காரியத்தையும் 'தேவனோடு ஆரம்பி, தேவனோடு நிலைத்திரு, தேவனோடு முடிவு செய்' என்று என் உள்ளம் இன்று கூறியது!

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com