கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

20 ல் 17 நாள்

17. பேசுவதில் விவேகம்!

1 சாமுவேல் 25: 36 .....அவன் மிகவும் வெறித்துமிருந்தான்.ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும்,பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

அபிகாயில் தாவீதை சந்தித்துத் திரும்பும்போது ராஜ விருந்து நடந்து கொண்டிருந்தது என்று பார்த்தோம். நாபால் குடித்து வெறித்திருந்தான். அதனால் அபிகாயில் அவனிடம் ஒன்றையும் அறிவிக்கவில்லை என்று வேதம் கூறுகிறது.

இந்தப்பகுதி மறுபடியும் அபிகாயிலுடைய விவேகத்தை நமக்கு தெளிவு படுத்துகிறது.

தாவீதை சந்தித்துத் தன்னுடைய மதிகேட கணவனையும், ஊழியரையும் தலைக்கு வந்த ஆபத்திலிருந்து மீட்டு, அவள் வீட்டுக்குத் திரும்பியபோது நடந்தவற்றை யாரிடமாவது கூற அவள் ஆசைப்பட்டிருப்பாள். ஆனால் அவள் அங்கு கண்டது குடித்து வெறித்திருந்த கணவனையும், அவனோடு களியாட்டம் போட்ட குடிகார நண்பர்களையும் தான்.

ஒரு நிமிடம்! நாம் இப்படி ஒரு பெரிய காரியத்தை செய்துவிட்டு களைப்பாக வீட்டுக்குத் திரும்பும்போது, நம் வீட்டில் உள்ளவர்கள் சத்தமாக மியூசிக் போட்டு, நடந்த எதுவுமே தெரியாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? நாம் பயங்கர கோபத்துடன் திட்டி, ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்க மாட்டோமா?

அபிகாயிலுக்கு நாபாலைத் திட்ட எல்லா உரிமையும் இருந்தது! ஆனால் அவள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை! அமைதியாக இருப்பதைப் பார்க்கிறோம். நீங்களோ அல்லது நானோ அங்கு இருந்திருந்தால் ஒரு வார்த்தை அல்ல ஒரு அணை போல வார்த்தைகளைக் கொட்டியிருப்போம்!

நாம் ஒன்று சொல்ல அது வார்த்தைத் தவறி மற்றொன்றாக முடிய , நிச்சயமாக வார்த்தைகள் பலத்த சண்டையில்தான் முடிவடைந்திருக்கும்! இது நம்மில் பலர் அனுபவவிப்பது தானே! அதுவும் நாம் அதிகமாக சோர்பாக வீட்டுக்குத் திரும்பும்போது இப்படி நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது அல்லவா!

ஆனால் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை! தன்னுடைய கோபம் அடங்கும்வரை அவள் பேசவேயில்லை! வேதம் சொல்கிறது, பொழுது விடியுமட்டும் அவள் பேசவில்லை என்று.

ஒருநாள் நான் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது என்னைப் பார்த்துக்கொண்டிருந்த என் அம்மா என்னிடம், நீ இப்பொழுது படுத்து தூங்கு, காலையில் இதைப் ப்ற்றி யோசி! காலையில் இதே பிரச்சனை உனக்கு வேறுமாதிரித் தோன்றும்! என்றார்கள். இதை என் வாழ்க்கையில் நான் மறந்ததே கிடையாது.

அபிகாயில் காலை வரைக் காத்திருந்தாள். அது அவளுக்கு கோபத்தை தணிக்க, நடந்ததை மறுபடியும் சிந்திக்க போதுமான நேரத்தைக் கொடுத்தது.

சாலொமொன் ராஜா , (நீதிமொழிகள் 25:11) ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் என்று வார்த்தையின் விவேகத்தைப் பற்றிக் கூறுகிறார். இது எவ்வளவு உண்மை!

அபிகாயில் நடந்து கொண்டது நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இல்லையா? நாம் கோபத்தில் இருக்கும்போது பேசவேக் கூடாது என்பது எவ்வளவு விவேகமானக் காரியம்!

கர்த்தர் தாமே இந்த வார்த்தைகளைக்கொண்டு உங்களை ஆசீர்வதிக்கட்டும்!

நாள் 16நாள் 18

இந்த திட்டத்தைப் பற்றி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com