கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

20 ல் 15 நாள்

15. அன்றாட வாழ்வில் எதற்கு முக்கியத்துவம்?

1 சாமுவேல் 25:34 ... உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடம்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன்..

நம்மில் எத்தனை பேர் ஒருநாளில் ஒன்றுக்கு இரண்டு வேலையை செய்துகொண்டு பிள்ளைகளோடு இருக்கக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்?

ஒவ்வொருநாளும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றுகூட நமக்குத் தெரியவில்லை! நம்முடைய வேலைகளுக்கே நேரம் ஒதுக்கத் தெரியாதபோது வேதம் வாசிப்பதும், ஜெபிப்பதும் சாத்தியமா என்ன?

அபிகாயில், தாவீது என்ற இருவரின் வாழ்க்கையிலிருந்து நாம் இன்னொரு பாடம் கற்றுக்கொள்வோமென்றால் அது நம்முடைய அன்றாடைய வாழ்வில் எது முக்கியம் என்று சீரமைப்பதுதான்!

1 சாமுவேல் 25: 34 ல் , அபிகாயில் தீவிரமாய் தாவீதைச் சந்திக்க வந்ததாக அவன் அவளுக்கு நன்றி சொல்லுகிறான். தீவிரம் என்ற இந்த வார்த்தை எபிரேய மொழியில் 'எளிதான ஓட்டம்' என்ற அர்த்தம் கொண்டது.

இது ஒரு நிமிடம் என்னை சிந்திக்க வைத்தது!

அன்று அவள் எவ்வளவு வேலைகள் செய்தாள் என்று நாம் பார்த்தோம் அல்லவா?

தாவீதுக்கும் அவனோடு இருந்த 400 பேருக்கும் அவள் மிகப்பெரிய விருந்தை தயார் பண்ணினாள்! நாம் 40 பேருக்கு விருந்து என்றாலே ஆடிப்போகும் வேளையில் இந்தப் பெண் எவ்வளவு சாமர்த்தியசாலியாயிருப்பாள்! அவள் செய்த அத்தனை வேலைகளும் அவளுக்கு எளிதான ஓட்டமாயிருந்து என்றால் எதை எதை எப்பொழுது செய்யவேண்டும் என்று எளிதாக திட்டமமைத்து செயல்பட்டிருப்பாள் அல்லவா!

ஒருவேளை அபிகாயிலுக்கு நம்மைப்போல அலுவலகப் பொறுப்புகள் இல்லாமலிருந்தாலும், அநேக குடும்பப் பொறுப்புகள் இருந்தன. ஆனால் அதன் மத்தியில் ஒரு அவசர வேலை வந்தவுடன் அவள் திக்குமுக்காடவில்லை, முறுமுறுக்கவும் இல்லை! அந்த வேலைகளை எளிதாக நடத்தி முடித்தாள்.

இன்னொமொரு காரியமும் இன்று என் மனதில் பட்டது. அபிகாயிலுக்கு எத்தனையோ வேலைகள் இருந்தபோதிலும், அவள் தேவனாகியக் கர்த்தரின் செய்தியை தாவீதுக்கு எடுத்து செல்லத் தேவைப்பட்டபோது அவள் அங்கு தயாராக இருந்தாள். ஏனெனில் அவள் உள்ளம் அநேக வேலைகளுக்கு மத்தியிலும் தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்தது! அவருடைய சத்தத்துக்கு செவி கொடுத்தது! தேவனுடைய காரியமாய் செல்ல வேண்டியதிருந்தபோது அவள் அதையும் எளிதாக நடத்தினாள்!

அன்றாட வாழ்க்கையில் எதை எதை செய்ய வேண்டும், எதற்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என்று அறிந்து செயல்பட்டதால் அவள் அநேக வேலைகளை எளிதாக செய்ய முடிந்தது!

இன்று நாம் எப்படி இருக்கிறோம்? அநேக அலுவல்கள் மத்தியில் தேவனுடைய சத்தம் நம் செவிகளில் ஒலிக்கிறதா? அன்றாட வேலைகள் மத்தியில் வேதம் வாசிக்கவும், ஜெபிக்கவும் நேரம் ஒதுக்க முடிகிறதா?

நேரமா? அது எங்கே கிடைக்கிறது? வாரத்தில் ஒருநாள் திருச்சபைக்கு போய்வந்து விட்டால் போதாதா? ஒவ்வொரு நாளும் பம்பரம் போல சுற்றுகிறோம், எங்கே கடவுளின் சத்தத்தை வேறு கேட்கமுடியும்? என்று உங்களில் அநேகர் புலம்புவது எனக்குக் கேட்கிறது!

அபிகாயிலைப்போல ஒவ்வொருநாளும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று மனதில் அறிந்து செயல்பட்டால் நிச்சயமாக உங்களால்கூட கர்த்தருடைய சத்தத்தை அனுதினமும் கேட்க முடியும்! உங்கள் அனுதின வாழ்க்கை எளிதாகும்!

வேதவசனங்கள்

நாள் 14நாள் 16

இந்த திட்டத்தைப் பற்றி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com