குணமாக்கும் கிறிஸ்துமாதிரி

குணமாக்கும் கிறிஸ்து

25 ல் 17 நாள்

இப்போது சாபத்தைக் குறித்து கவனிப்போம். “அடைக்கலான் குருவி அலைந்து போவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவது போலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது” (நீதிமொழிகள் 26:2). இந்த வசனத்தை வசிக்கும்போது ஒரு காரியம் தெளிவாக விளங்குகிறது. அதாவது, ஒரு மனிதன் மீதோ அல்லது குடும்பத்தின் மீதோ அல்லது தேசத்தின் மீதோ சாபம் ஒருவேளை சாபம் இருந்தாலும், சரியான காரணம் இல்லாவிட்டால் அந்த சாபம் பலிக்காது. அப்படியானால், எப்போதும் சாபத்திற்கு காரணமாயிருப்பது என்ன? என்ற கேள்வி எழும்புகிறது. இந்த கேள்விக்கு பதில் “பாவம்”. பாவம் எப்போதும் சாபத்தை கொண்டு வருகிறது. ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில் சாபம் காணப்படுமானால், அவருடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு பாவத்தின் வேர் இருக்கிறது என்று அர்த்தம். அந்த சாபத்தை இருமாப்பினாலோ அல்லது அறியாமையினாலோ அகற்ற முடியாது. அதை அகற்ற ஒரே வழி மனந்திரும்புவதும், இயேசுவின் இரத்தமும் தான்.

பரம்பரை சாபத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் குறித்து வேதத்தில் நாம் நிறைய வாசிக்கலாம். அதில் வியாதியைக் குறித்த சம்பவங்களை பார்க்கும் போது, தேவன் உங்களுடைய பரிபூர்ண சுகத்தை விரும்புவது மட்டுமல்ல, உங்களுடைய பின் சந்ததியின் சுகத்தையும் விரும்புகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இந்த சம்பவங்கள் நாம் சற்றும் எதிர்பாராத இடங்களில் காணப்படுகிறது. தேவன் அவைகளை நமக்கு வெளிப்படுத்தினாலோழிய நாம் அவைகளைக் காண முடியாது. முதலாவது, ஏரோதுகளின் சாபத்தை குறித்து நான் உங்களுக்கு போதிக்க விரும்புகிறேன்.

மத்தேயு 2:1-3, கிழக்கிலிருந்து வந்த ஞானிகளைக் குறித்து மட்டுமல்ல, ஏரோது என்கிற இராஜாவைக் குறித்தும் சொல்லுகிறது. இந்த எரோதுவை சரித்திரம் ‘மாமன்னன்’ ஏரோது என்று கூறுகிறது. இந்த ஏரோது ஒரு முழுமையான யூதனும் அல்ல, முழுமையான புறஜாதியானும் அல்ல. அவன் ஏதோமியர் வழிவந்த இதுமேயன். ஏதோமியர் ஏசாவின் சந்ததியார். இந்த ஏசா யாக்கோபின் மூத்த சகோதரன்; கூழுக்காக தன சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப் போட்டவன். ஏரோது ஏசாவின் சந்ததியில் வந்தவனானபடியால் பரம்பரை சாபத்திற்குட்பட்டவனாயிருந்தான். ஏனென்றால் ஏசா தேவனுடைய காரியங்களை வெறுத்தான் என்று வேதம் கூறுகிறது (ஆதியாகமம் 25:34; எபிரெயர் 12:16,17). 

அதுமட்டுமல்ல, வேற்று ஜாதி பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்று தெரிந்தும், வேண்டுமென்றே இரண்டு ஏத்திய பெண்களை திருமணம் செய்து, தேவனையும் தேவனுடைய காரியங்களையும் ஏசா அவமதித்தான். இந்த ஏத்தியர் கானானிய சந்ததியார்; அவர்கள் மீது பரம்பரை சாபம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒன்றான மெய்த்தேவனாகிய எகோவாவைக் குறித்த வெளிப்பாடு இல்லாத இந்த ஏத்திய பெண்களை திருமணம் செய்ததின் மூலமாக, ஏசா தன குடும்பத்திற்குள் பரம்பரை சாபத்தை வருவித்துக் கொண்டான். இதனால்தான் ஏசாவின் பெற்றோராகிய ஈசாக்கும் ரெபெக்களும் ஏசாவின் திருமணத்தைக் குறித்து மிகவும் வருத்தப்பட்டார்கள். (2 கொரிந்தியர் 6:14, கிறிஸ்தவ விசுவாசி அவிசுவாசியை திருமணம் செய்யும்போது சாபத்தை குடும்பத்திற்குள் வருவித்துக் கொள்ளுகிறான் என்று போதிக்கிறது. இந்த வசனத்தைக் குறித்து நீங்கள் எவ்வளவுதான் விவாதித்தாலும் உங்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு தேவன் உரைத்திருக்கும் காரியங்களை மாற்றமுடியாது). இது போதாதென்று, சொந்த தகப்பனுடைய உடல் பிறவா சகோதரனுடைய பெண்ணை திருமணம் செய்ததின் மூலம் ஏசா மீண்டும் தேவனை அவமதித்தான். 

வேதவசனங்கள்

நாள் 16நாள் 18

இந்த திட்டத்தைப் பற்றி

குணமாக்கும் கிறிஸ்து

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.  

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.