தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

வேகம் விவேகம்
வேகமாக வந்து எனக்கு உதவி செய்யும் என்னும் தாவீதின் அவசரம், ஆம்புலன்ஸ்.... அவசர போலீஸ்.... உடனடி சேவை.... தட்கல்..........என்று இருக்கும் நமக்கு எளிதாகப் புரிகின்றது. உலகத்தில் இருக்கும் நத்தைகளிலேயே மிகவும் வேகமானது கோல்லி என்ற வகையாகும். இது இரண்டு அடி கண்ணாடியை மூன்று நிமிடங்களில் கடந்ததாம். மிகவும் வேகமான பூச்சி என்பது கரப்பான் பூச்சி தான். இது ஒரு வினாடி நேரத்துக்குள் 25 தடவைகள் தாங்கள் போகும் திசையை மாற்றிக் கொள்ளக்கூடிய அளவுக்கு வேகமானவைகளாம். ஒரு வினாடிக்கு ஒரு மீட்டர் தூரம் செல்லக்கூடியவைகள்.
இந்த உலகத்தின் வேகமான மற்றும் மெதுவான உயிரினங்களைப் படைத்த ஆண்டவர் நாம் ஆபத்துக்காலத்தில் அழைக்கும் போது மிகவும் விரைவாக நமக்கு உதவி செய்கிறார். அவரது உதவி அதிசயமாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் நாமே அந்தப் பிரச்சனையை சமாளிக்கும் அளவுக்கு மன தைரியத்தையும், தனது கிருபையையும் அவர் நமக்குக் கொடுப்பார். அதுவும் ஆண்டவரின் உதவி தான்.
நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், என்று தாவீது அழைக்கிறார். ஆனால் பல நேரங்களில் நாம் ஜெபம் செய்திருந்தால் கூட ஆபத்து நமக்கு உடனடியாக நீங்குவதில்லை. அப்படி நேரங்களில் நம்முடன் இருக்க ஆண்டவர் இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆண்டவர் விரைவாக வரும் அளவுக்கு வல்லமை உள்ளவர் தான் என்றாலும் அவரது வேளை வரவேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக லாசரு சுகவீனமாக இருந்த போது இயேசு உடனே அங்கே போகவில்லை. அவர் போயிருந்தால் இயேசு லாசருவை உயிரோடு எழுப்பி அற்புதத்தைச் செய்திருக்க முடியாது. நானே உயிர்த்தெழுதல் என்று இயேசு தெளிவாகப் போதித்திருக்க முடியாது.
சிந்தனை : பல நேரங்களில் கடவுள் பதிலை விரைவாகக் கொடுத்தும் நாம் கவனிக்காமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் தரும் பதில் நாம் எதிர்பார்க்கும் பலனுக்கு எதிரானதாக இருக்கலாம்.
ஜெபம் : தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org