தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

பொருத்தனை
பல வருடங்களுக்கு முன்பு ஒரு போதகர் வெளியூரிலுள்ள ஒரு இளம் தம்பதிகளின் வீட்டில் தங்கியிருந்தார். காலையில் மிகவும் அருமையான குரலில் அந்தப் பெண் சமையல் அறையில் பாடிக் கொண்டிருந்தார். பாடலின் ராகமும் குரலும் அருமையாக இருந்தாலும், வார்த்தைகளைத் தவறாகப் பாடிக் கொண்டிருந்தார். போதகர் காலை காஃபி குடித்துக் கொண்டே உங்கள் பாடல் நன்றாக இருந்தது என்றார். ”ஆமா, எங்க அம்மா காலத்துல இருந்தே நாங்க முட்டையை வேக வைக்கும் போது இதே பாட்டைத் தான் பாடுவோம். ஐந்து தடவைகள் சரணத்தைப் பாடினால் அரைவேக்காடாக இருக்கும். நன்றாக வேக வேண்டும் என்றால் எட்டுதடவைகள் பாட வேண்டும்” என்று தனது சமையல் ரகசியத்தைச் சொன்னார்.
நாம் கடவுளைத் துதித்துப் பாடும் பாடல்களை எதற்காகப் பாடுகிறோம்? பழக்கத்தாலா? கடவுளை ஐஸ் வைக்கவா? அந்தப் பெண்ணைப்போல முட்டையை வேகவைப்பதற்காகப் பாடுபவர்கள் இந்தக்காலத்தில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் துதிப்பாடல்களைக் கேட்பதிலும் சரியான காரணமோ, நோக்கமோ இல்லாமலேயே இருக்கின்றது.
தாவீது தன் பாடல்களைப் பாடுவதற்குக் காரணமாகச் சொல்வது, பொருத்தனைகளை செலுத்துதல் ஆகும். அதுவும் தினமும் அவர் தனது பொருத்தனைகளை செலுத்துவதற்காகப் பாடல்கள் பாடுகின்றார். பொருத்தனை என்பது ஜெபிக்கும் போது ஆண்டவரிடம் நாம் செய்து கொள்ளும் ஒரு உடன்படிக்கை போன்றது. நமக்கு நடைபெறும் நன்மைகளுக்குப் பதிலாக நாம் செய்த பொருத்தனைகளைச் செய்வது வழக்கம். தாவீது தனது ஜெபங்களில் பாடல்களைப் பொருத்தனையாகச் செய்திருக்கிறார். தினமும் அவர் புதிய பாடல்களைப் பாடுகிறார். அதன் அர்த்தம் என்னவென்றால் தினமும் அவர் ஜெபித்தார், அத்துடன் கடவுளிடமிருந்து பதில்களைப் பெற்றிருக்கின்றார் என்பது தான்.
சிந்தனை : நாம் தினமும் ஜெபிக்கிறோமா? பொருத்தனைகள் செய்கிறோமா? பொருத்தனைகளை செலுத்துகிறோமா?
ஜெபம் : ஆண்டவரே அவசரப்பட்டு பொருத்தனைகள் செய்யாமல் இருக்கவும், செய்த பொருத்தனைகளை உடனே செலுத்தவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org