மீட்பு மாதிரி
நல்ல மனிதர்கள் தற்காலிகமாக மீட்கிறார்கள்
தேவன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குத் தகப்பானாக இருக்கும்படி,தாம் சிருஷ்டித்த ஏராளமான மக்கள் மத்தியிலிருந்து ஆபிரகாமைத் தெரிந்தெடுத்தார். அவருடைய சந்ததியார் எண்ணற்றவர்களாக இருப்பார்கள் என்றும்,அவர்கள் உலகத்திலுள்ள எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதமாக இருப்பார்கள் என்றும் தேவன் அவருக்கு வாக்குப்பண்ணினார். தேவன் ஆபிரகாமையும்,ஈசாக்கையும்,யாக்கோபையும் நிரம்பி வழியத்தக்கதாக ஆசீர்வதித்தார். அவர்கள் உண்மையில் மற்ற அனைவருக்கும் மேலானவர்களாக இருந்தார்கள். அப்படியே, எகிப்தின் பார்வோன் அவர்களுடைய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்படி அவர்களைக் கீழ்ப்படுத்தி ஒடுக்கத் தீர்மானிக்கும் அளவிற்கு அவர்கள் வளர்ந்து பெருகினார்கள். அவர்களிடம் இருந்த தெய்வீக ஆசீர்வாதத்தை அவன் மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டான். அவர்களுக்கு விடுதலை தேவைப்பட்டபோது,தேவன் அவர்கள் மத்தியிலிருந்தே ஒருவரை அனுப்பி,அவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்த தேசத்திற்குச் செல்லும்படி எகிப்திலிருந்து அவர்களை விடுவிக்கச் செய்தார். மோசே தன் வாழ்நாள் முழுவதும் உண்மையுள்ளவராக இருந்து,60 இலட்சம் இஸ்ரவேலர்கள் தங்கள் ஆசீர்வாதத்தின் உச்சத்தை அடையும்படி நடத்தினார். மோசே விட்ட இடத்திலிருந்து யோசுவா பொறுப்பேற்று,மக்களை கானானுக்குள் நடத்தி,அவர்கள் அந்த தேசத்தைச் சுதந்தரிக்க உதவினார். அந்தப் பொறுப்பு மோசேக்கும்,யோசுவாவுக்கும் எளிதாக இல்லை. ஏனென்றால் எகிப்தில் இருக்கும்போது அந்த மக்கள் புறஜாதியாரின் வழிகளைக் கற்றுக்கொண்டு,அதன்படி நடந்துவந்தார்கள். அதோடு,தங்கள் பிதாக்களின் தேவனைப் பற்றி மிகச்சிறிதளவே அறிந்திருந்தார்கள். தேவன் ஒரு சந்ததி முழுவதும் மரிக்கும் வரை காத்திருந்து,புதியதொரு சந்ததியை தாம் அவர்களுக்கு வாக்குப்பண்ணின தேசத்திற்குள் நடத்திச் செல்லும் அளவிற்கு,விக்கிரக ஆராதனையும்,முரட்டாட்டமும் அவர்களுக்குள் மிக ஆழமாக வேரூன்றியிருந்தது. யோசுவாவின் காலத்திற்குப் பிற்பட்ட காலங்கள் மிகவும் துரதிஷ்டவசமாயின. தங்கள் முற்பிதாக்களின் தேவனை முற்றிலும் அறியாத ஒரு சந்ததி தோன்றியது. அவர் தம் மக்களுக்காகச் செய்த வல்லமையான மகத்துவங்களை அவர்கள் அறியவில்லை. அதனால், அவர்கள் தொடர்ந்து அவிசுவாசத்திற்கும்,தேவன் மீதான தற்காலிக விசுவாசத்திற்கும் இடையில் அலைமோதிக் கொண்டிருந்தார்கள். ஆகவே,தேவன் தம் சர்வவல்லமையில், தம் மக்களின் தேசத்தை சூறையாடி,அவர்களை ஒடுக்கும்படி எதிரிகளின் சேனைகளை அனுமதித்தார். அந்த மக்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாதபோது,அவர்கள் அவரை நோக்கிக் கதறுவார்கள். அவரும் நெகிழ்ந்து,அவர்களுக்கென்று ஒரு இரட்சகனை அனுப்புவார். இந்த இரட்சகன் எதிரிகளை வென்றதோடு,தங்கள் மக்களின் சமூக மற்றும் ஆவிக்குரிய தேவைகளைக் கண்காணிக்கும் நியாயாதிபதியாகவும் செயல்பட்டான். இது ஒரு நிரந்தரமான தீர்வாக இருக்கவில்லை. ஏனென்றால் ஒரு நியாயாதிபதி மரித்தவுடனே மக்கள் தேவனை மறந்துபோனார்கள். இந்த மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் இருந்த ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி வாசிப்பது சலிப்பூட்டுவதாக இருக்கிறது என்றாலும்,நமக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை!
சிந்தனைக்கு:
நம் வாழ்க்கையில் தேவனால் உண்டாக்கப்பட்டிருக்கும் வெற்றிடத்தை எந்த மனிதனாலும் நிரப்ப முடியாது.
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்மஸ் - நம்மை மீட்க கிறிஸ்துவை அனுப்பியதன் மூலம் தேவன் நமக்குச் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற நேரம். இந்த தியானத்தை வாசிக்கும் நீங்கள், உங்கள் மீட்பின் அனுபவத்தை நினைவுகூர்ந்து, உங்களுக்கு முன்பாக இருக்கும் பாதையில் கடந்து செல்ல வேண்டிய அனைத்திலிருந்தும் அவர் உங்களை மீட்பார் என்னும் நம்பிக்கையுடன் புதிய வருடத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaranக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/