மீட்பு மாதிரி

மீட்பு

7 ல் 3 நாள்

ராஜாக்கள் மீட்க முயற்சி செய்தார்கள்

அந்த மக்கள் பெரும்பாலும் நம்மைப் போலவே இருந்தார்கள்,அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் ஒற்றுமை அச்சுறுத்துவதாக இருக்கிறது. இப்படி சிலகாலம் நியாயாதிபதிகள் அந்த தேசத்தைக் கண்காணித்து வந்தபின்பு,கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டுப் பழகின ஒரு தீர்க்கதரிசியை தேவன் கொண்டு வந்தார். சாமுவேல் நேரடியாக தேவனிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று இஸ்ரவேலரை நடத்தி வந்தார். தேவனுக்கும் மக்களுக்கும் மத்தியஸ்தராக இருந்த அவர், மக்கள் மீது உண்மையான கரிசனை கொண்டிருந்தார். ஜீவனுள்ள தேவனுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய உறவின் விளைவாக அவருடைய தலைமைத்துவம் நன்றாக செயல்பட்டது. ஆகவே,தங்களை இனி ஒரு தீர்க்கதரிசி ஆளக்கூடாது என்று அந்த மக்கள் தீர்மானித்தபோது, அவருக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அவருக்குப் பதிலாக ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டார்கள். இப்படி ஒரு மாற்றம் வேண்டும் என்று நேரடியாகக் கேட்பது தவறல்ல என்றாலும்,அதைக் கேட்பதன் நோக்கம் என்ன என்பது முக்கியம். தங்களை ஆளும் ராஜாக்களைக் கொண்டிருந்த சுற்றியுள்ள தேசங்களைப் போல தாங்களும் இருக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அவர்கள் அந்நிலையில் இருக்க அடிப்படைக் காரணமே, தேவன் அவர்களை மற்ற தேசங்களிலிருந்து வேறுபிரித்து வைக்கத்தான் என்பதை அவர்கள் மறந்து போனார்கள். அவர் தமக்கென்று அவர்களைத் தெரிந்துகொண்டார். அவர்கள் மீது வைராக்கியம் கொண்ட அவர்,தாம் அவர்களுக்காக ஏற்படுத்திய மாபெரும் நோக்கங்களுக்காக அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பினார். இருப்பினும்,அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தபோது,அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கி,சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். சவுல் உண்மையற்றவராக இருந்ததால்,இறுதியில் தேவன், அடுத்து வரும் தலைமுறைகளுக்கு முன்மாதிரியான ஒரு ராஜாவாக இருக்கப்போகும் தாவீதை எழுப்பினார். எல்லா ராஜாக்களிடமும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான காரியம்,அவர்கள் தேவனுடைய வார்த்தையின்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு,ஞானமாக ஆட்சி செய்து,நீதி நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதே. மிகச் சிறந்த ராஜாக்கள் கூட முழுமையாக இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை. ராஜ வம்சங்கள் தொடர்ந்து ஒழுக்கக்கேடு அடைந்துவிட,ஆவிக்குரிய வாழ்க்கையே அவர்களுக்கு இல்லாமல் போனது. அதனால் இறுதியில் தேவன்,அவர்களையும்,அவர்களுடைய மக்களையும் எதிரி தேசங்களின் கைகளில் ஒப்புவித்தார்,அந்த தேசத்தினர் இவர்களை இரக்கமின்றி,கொடூரமாக நடத்தினார்கள். இதிலும் மோசமான நிலைமை என்னவென்றால்,வாக்குத்தத்த தேசம் மற்ற தேசத்தினரால் முற்றிகையிடப்பட்டு,அதன் மக்கள் அந்நிய தேசங்களுக்கு சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள். துரதிஷ்டவசமாக,சிறையிருப்புக்குப் போகும் காலத்தில் இருந்த ராஜாக்கள் வரவிருந்த அழிவுக்கு மறைவாகத் தப்பிவிடலாம் என்று முயற்சி செய்தபோதும்,அவர்கள் பிடிக்கப்பட்டு,சிறையிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். தெரிந்துகொள்ளப்பட்ட தலைவர்கள் தங்கள் மக்களை மீட்க முடியாமல் இருந்ததற்கு இது பெரிய உதாரணமாக உள்ளது. தங்கள் தேசத்தை தேவனிடமும்,தேவன் நியமித்த இலக்கை நோக்கியும் நடத்துவதில் ராஜாக்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகிறது.

சிந்தனைக்கு:

நம் தலைவர்கள் நம்மை பலத்துடனும்,ஞானத்துடனும் நடத்திச் செல்ல நாம் அவர்களுக்காக ஜெபிப்பது மிக முக்கியமானது.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

மீட்பு

கிறிஸ்மஸ் - நம்மை மீட்க கிறிஸ்துவை அனுப்பியதன் மூலம் தேவன் நமக்குச் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற நேரம். இந்த தியானத்தை வாசிக்கும் நீங்கள், உங்கள் மீட்பின் அனுபவத்தை நினைவுகூர்ந்து, உங்களுக்கு முன்பாக இருக்கும் பாதையில் கடந்து செல்ல வேண்டிய அனைத்திலிருந்தும் அவர் உங்களை மீட்பார் என்னும் நம்பிக்கையுடன் புதிய வருடத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaranக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/