மீட்பு மாதிரி
தீர்க்கதரிசிகள் மீட்பைப் பற்றிப் பேசினார்கள்
இஸ்ரவேலின் ராஜாக்கள் தங்கள் மக்களை சிறையிருப்புக்கு நேராக நடத்திக் கொண்டிருக்க,அவர்களுடைய தீர்க்கதரிசிகள் அவர்களை சிறையிருப்பு மற்றும் சிறையிருப்புக்குப் பின்னான வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்தினார்கள். அவர்களுடைய செய்திகளில் பெரும்பாலானவை அழிவைப் பற்றியதாக இருந்தாலும்,அவற்றின் ஊடே நம்பிக்கையின் ஒளிக்கதிர் வீசத்தான் செய்தது. எவ்வளவுதான் பயங்கரமானதாக அல்லது தீமையை முன்னறிவிப்பதாக இருந்தாலும்,உண்மையாகத் தம்முடைய வார்த்தையை அறிவித்த தீர்க்கதரிசிகளுடன் தேவன் பேசினார். அதைக் கேட்ட மக்கள் உணர்வடையவுமில்லை,தங்களைத் தாழ்த்தவும் இல்லை, மாறாக அலட்சியத்தையும்,ஆர்வமின்மையையும் வெளிப்படுத்தினார்கள். ஒரு குறிப்பிட்ட நிலையில்,ஜீவனுள்ள தேவனைப் பின்பற்றுவதையே விட்டு,மரமும் கல்லுமாகிய விக்கிரகங்களுக்குப் பின்னால் போகத் தொடங்கினார்கள். அவர்கள் ஒன்றான மெய் தேவனை தொழுதுகொள்ளுவதற்குப் பதிலாக தாங்கள் சிறையிருப்பில் இருந்த தேசத்தாருடன் சம்பந்தம் கலந்தார்கள். அவர்கள் எவ்வளவுதான் பின்மாற்றத்திற்குள் சென்றாலும்,தேவன் தம் மக்கள் மீது கொண்டிருக்கும் மாறாத அன்பை தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு அறிவித்தார்கள். அந்த தேசத்தாருக்கு வரவிருந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பக்கம் அவர்களின் கவனத்தைத் திருப்ப தீர்க்கதரிசிகள் தளர்வின்றி முயற்சி செய்தார்கள். அவர்களுடைய பிடிவாதம், கீழ்ப்படியாமை மற்றும் அப்பட்டமான பாவநிலையினால் இந்த நியாயத்தீர்ப்பு அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது. தேவமனிதர்கள் தங்கள் வார்த்தைகளில் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டதால், பாடு அனுபவித்தார்கள். அவர்கள் தங்கள் சொந்த மக்களால் அவமதிப்புக்கும்,உபத்திரவத்திற்கும்,தனிமைக்கும் ஆளானபோது ஏற்பட்ட அக்கினியின் அனுபவங்கள் மத்தியில் தைரியமாக நின்றார்கள். இதில் வருந்தத்தக்கது என்னவென்றால்,அந்த தேசத்தின் மக்களுக்கு தெய்வீக தரிசனமும் இல்லை,தெய்வீக தரிசனம் கொண்டவர்களை அவர்கள் நம்பவுமில்லை. ஆகவே,அவர்கள் தங்கள் எதிரிகளின் கைகளினால் அழிந்தார்கள். மீதமிருந்த மிகச்சிலரே, முன்னுரைக்கப்பட்டபடி, மீண்டும் எருசலேமுக்குத் திரும்பினார்கள். இஸ்ரவேலர் தங்கள் தேவனை விட்டு வெளியில் இருந்த பொருட்கள் மற்றும் மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்ததே அவர்களுடைய உண்மையின்மைக்கு மூலகாரணமாயிற்று என்று அறியலாம். அதாவது,விக்கிரக ஆராதனை செய்யும் இருதயம்தான் அவர்களைக் கொள்ளை கொண்டது. அவர்களுடைய வாஞ்சைகளும், பற்றுகளும் தேவனை நோக்கியதாக இருக்கவில்லை – ஆகவே அவர்களுடைய ஆராதனை நீர்த்துப்போய்,இறுதியில் வழிமாறியது. எந்தத் தீர்க்கதரிசியாலும் அந்த மக்களை அவர்களின் வழிவிலகிய நிலையிலிருந்து மீட்க முடியவில்லை.
சிந்தனைக்கு:
தரிசனம் இல்லையென்றால் மக்கள் அழிந்துபோவார்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்மஸ் - நம்மை மீட்க கிறிஸ்துவை அனுப்பியதன் மூலம் தேவன் நமக்குச் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற நேரம். இந்த தியானத்தை வாசிக்கும் நீங்கள், உங்கள் மீட்பின் அனுபவத்தை நினைவுகூர்ந்து, உங்களுக்கு முன்பாக இருக்கும் பாதையில் கடந்து செல்ல வேண்டிய அனைத்திலிருந்தும் அவர் உங்களை மீட்பார் என்னும் நம்பிக்கையுடன் புதிய வருடத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaranக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/