தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
தாயத்து
பேதுரு பரலோகத்தில் கதவில் நின்று கொண்டு எல்லோரையும் உள்ளே அனுப்புவார் என்பது கற்பனையாக இருந்தாலும் அந்தக் கதைகளில் பல கருத்துக்கள் இருக்கும். ஒரு மனிதன் இப்படியாக மோட்ச வாசலில் பேதுருவை சந்தித்தார். ”நீ உள்ளே நுழைவதற்கு உனக்கு என்ன தகுதிகளெல்லாம் இருக்கின்றன? இங்கே நுழைவதற்கு ஆயிரம் மார்க்குகள் எடுத்திருக்க வேண்டும்” என்று கேட்டார் பேதுரு. அந்த மனிதரும் தான் கடவுளுக்காக செய்த ஊழியங்கள், கொடுத்த காணிக்கைகள், மனிதர்களுக்குச் செய்த உதவிகள், ஆலயத்துக்குச் செய்த செயல்கள் எல்லாவற்றையும் அடுக்கிக் கொண்டே இருந்தாராம். இப்படியே இரண்டு மணி நேரம் தன் பட்டியலைச் சொல்லி முடித்ததும் பேதுரு சொன்னாராம், ”ஐயா நீங்கள் அடுக்கிய எல்லாவற்றுக்காகவும் உங்களுக்கு ஒரு மார்க் கொடுக்கிறேன்.” “நான் சிந்திய வியர்வை, செலவு செய்த பணம், என் உழைப்பு எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு மார்க் தான் கொடுத்திருக்கிறீர்களே. ஆயிரம் மார்க் இருந்தால் தான் உள்ளே போக முடியுமா? ஐயோ ஆண்டவரே எனக்கு இரங்கும்” என்று கத்தினாராம். “நீங்கள் கடைசியில் சொன்ன ஜெபத்துக்காக 999 மார்க்குகள் தரலாம். உள்ளே வாருங்கள்” என்று அழைத்தார் பேதுரு.
நமக்காக எல்லாம் செய்து முடிக்கப் போகிற ஆண்டவர் மட்டுமே நமது ஜெபங்களைக் கேட்பவர். அவர் ஒருவரே எல்லாவற்றையும் செய்ய வல்லமை உள்ளவர். ”என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்” என்கிறார் தாவீது. அவருக்கு இருந்த பிரச்சனை பெரியதாக இருந்தது. ஆனால் அவருக்கு உதவி பரலோகத்திலிருந்து வரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
சிந்தனை : உலகப் பிரச்சனைக்கு பரலோக உதவி கிடைப்பது தான் மிகப்பெரிய பாக்கியம்.
ஜெபம் : ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org